Published:Updated:

''நானும் விகடனும்!''

இந்த வாரம் : சாரு நிவேதிதாபடம் : கே.ராஜசேகரன்

''நானும் விகடனும்!''

இந்த வாரம் : சாரு நிவேதிதாபடம் : கே.ராஜசேகரன்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''நாகூரில் நான் பிறந்து வளர்ந்த சேரிப் பகுதியில் என் வயதையத்த பையன்கள், மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கவோ அல்லது சுருட்டு சுற்றவோதான் போவார்கள். பள்ளிக்கூடம் செல்வது,  நினைத்துப் பார்க்க முடியாத பெருங்கனவு. அப்படிப்பட்ட சூழலில் 'விகடன் வாங்கிக் கொடுங்கள்!’ என்று கேட்டால், தோலை உரித்துவிடுவார்கள். ஆனாலும், என்னால் அப்போது விகடன் படிக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால், அதில்தான் என் வாத்தியார்களான ஜெயகாந்தனும் சுஜாதாவும் எழுதிக்கொண்டு இருந்தார்கள். வீட்டில் இருந்து கிளம்பி சில்லடி (நாகூர் கடற்கரையை அப்படித்தான் அழைப்பார்கள்) அருகே இருந்த எம்.ஜி.ஆர் படிப்பகத்துக்கு நெடுந்தூரம் நடந்து சென்று, விகடனைப் படிப்பேன். அப்போது என்னுடைய alma mater விகடன்தான். ஞானமும் அறிவும் பள்ளிக்கூடப் படிப்பைத் தாண்டியும் இருக்கிறது என்பதை விகடன் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நானும் விகடனும்!''

சுமார் 45 ஆண்டுகளுக்கு முந்தைய கதை அது. கல்கி, சாவி போன்ற பத்திரிகை ஜாம்பவான்கள் தனிப் பாதையில் செல்வதற்கு முன் பணி புரிந்த இடம் விகடன். இப்போதும் நான் ரோஜா முத்தையா நூலகத்துக்குச் செல்லும்போது, அந்தக் கால விகடன் இதழ்களை எடுத்து வாசிப்பது வழக்கம். அது ஒரு தனி அனுபவம். கால எந்திரத்தில் அரை நூற்றாண்டைப் பின்னோக்கித் தாண்டுவது என்றால், சும்மாவா? இதனாலேயே விகடனின் 'பொக்கிஷம்’ பகுதி எனக்குப் பிடிக்கும்.  

பல ஆண்டுகளாக நான் மதனின் கார்ட்டூன்களுக்கும், கேள்வி பதிலுக்கும் ரசிகன். பள்ளிக்கூடத்தில் பூகோளப் படிப்பே பிடிக்காது. ஆனால், விகடனில் மணியன் எழுதிய பயணக் கட்டுரைகள் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் தெரிந்துகொண்டேன். இன்றைக்கும் பயணத்தின் மீதான என்னுடைய தீராத ஆர்வத்துக்குக் காரணம், அந்தப் பயணக் கட்டுரைகள்தான். தமிழில் ஏ.கே.செட்டியாரைத் தவிர, வேறு யாருமே அந்த அளவுக்கு உலகத்தைச் சுற்றிக் காட்டியது இல்லை.  

சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்’ பத்தியைப் படிப்பதற்காகவே, ஒவ்வொரு வாரமும் காத்திருப்பேன். அந்தப் பத்தி, ஓர் அறிவுப் பெட்டகமாகவே திகழ்ந்தது. தமிழ்நாட்டில் இளைய சமுதாயத்தினரிடம் ஒரு விழிப்பு உணர்வைக் கொண்டுவந்ததில் விகடனின் பங்கு அதிகம். சுருக்கமாகச் சொன்னால், பல்கலைக்கழகங்களும் பள்ளிக்கூடங்களும் செய்ய வேண்டிய பணியை விகடன் செய்து வருகிறது.

விகடனில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம், துணிச்சல்! யாருக்கும் அஞ்சாத தீரம்! ஒரு முறை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், அட்டைப் படத் துணுக்குக்காகச் சிறை சென்று வந்தார் விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன். 'யாரோ ஓர் எழுத்தாளர் எழுதிய துணுக்கு’ என்று சொல்லி அவர் தப்பிக்க முனையவில்லை. 'அந்தத் துணுக்குக்கு நான் பொறுப்பேற்கிறேன்!’ என்று செயல்பட்ட அவருடைய துணிச்சல், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்ற மேன்மையான மதிப்பீட்டை எனக்குக் கற்றுத் தந்தது.  

பல ஆண்டுகளாக நான் சில நூறு பேர் மட்டுமே படிக்கும் சிறுபத்திரிகைகளில்தான் எழுதிக்கொண்டு இருந்தேன். இப் பத்திரிகைகளில் நாங்களே எழுத்தாளர்கள்... நாங்களே வாசகர்கள். அது ஒரு ரகசிய இயக்கத்தைப்போல் சமூகத்தில் இருந்து மிகவும் அந்நியமான சூழலில் நடந்துகொண்டு இருந்தது. இந்த நிலையில், எனக்கு லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் விகடனில் எழுதுவது என்பது ஒரு தீராத கனவாகவே இருந்து வந்தது. இதற்குள்ளாகவே என் எழுத்து அனுபவம் கால் நூற்றாண்டைத் தாண்டி இருந்தது.  

அந்தக் காலகட்டத்தில்தான் இன்டர்நெட்டின் பரவலான அறிமுகம் நிகழ்ந்து, விகடன் இணையதளம் தொடங்கப்பட்டது. அதில் நான் எழுதிய 'கோணல் பக்கங்கள்’ என்ற பத்திக்குக் கிடைத்த வரவேற்பை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்தக் காலத்தில் அரசனுக்கு வாரிசு இல்லாவிட்டால், யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து, அது யாருடைய கழுத்தில் போடுகிறதோ, அவனே பட்டத்து இளவரசன் ஆவான் என்று படித்திருக்கிறோமே... அவ்வாறே ஆனேன் அப்போது. ஏதோ ஒரு மூலையில் சிறு பத்திரிகைகளில் எழுதி, அவர்களிடம் இருந்து சரமாரியாகத் திட்டு வாங்கிக்கொண்டு இருந்த எனக்கு, உலகின் மூலைமுடுக்கில் இருந்துஎல்லாம் மெயில்கள் வர ஆரம்பித்ததும் தலையே கிறுகிறுக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குப் பிறகு விகடனில் அவ்வப்போது வெளிவரும் என் பேட்டிகளைப் படித்து ஆச்சர்யப்படாதவர்களே இல்லை. 'இப்படி எல்லாம்கூடப் பேட்டி கொடுக்கலாமா? இவ்வளவு வெளிப்படையாகப் பேசலாமா?’ என்று என்னைக் கேட்பார்கள். இதற்கெல்லாம் காரணம், விகடனில் எனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம்.  

அதற்குப் பிறகு நிகழ்ந்ததுதான், 'மனம் கொத்திப் பறவை’! முதலில் எல்லோருமே என்னைப் பயமுறுத்தினார்கள்... 'உனக்கும் விகடனுக்கும் வேவ்லெங்த் அமையுமா?’ என்று. ஏனென்றால், அந்த அளவுக்கு எனக்கு 'நல்ல பெயர்’. ஆனால், ஆச்சர்யம் பாருங்கள்... நான் எழுதும் ஒரு வார்த்தைகூட மாற்றப்படாமல் விகடனில் வந்தது.

ஒருநாள் விகடனில் இருந்து ஒரு போன். ' 'கூபாவின் தலைநகர் ஹபானாவில்’ என்று எழுதி இருக்கீங்க. அப்படிப் போட்டால், புரியாது. க்யூபா, ஹவானா என்று மாற்றிக்கொள்ளலாமா?’ என்று கேட்டார் ஓர் உதவி ஆசிரியர். 'அடக் கடவுளே... இதற்கெல்லாமா என் அனுமதி கேட்க வேண்டும்?’ என்றேன். விகடனில் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப் படும் சுதந்திரத்தைப் பார்த்து நான் பல முறை வியந்திருக்கிறேன். விகடனின் கருத்தோடு இயைந்து செல்லாத கருத்தை நான் எழுதினாலும், அது அப்படியே வெளிவரும்.

அந்தத் தொடரினால் நான் மதிக்கும் பலருடைய நட்பு எனக்குக் கிடைக்கப் பெற்றது. ஓர் இரவு எனக்கு ஒரு போன் வந்தது. பேசியவர் பெயரை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு, 'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்’ என்ற பாடலை முழுதுமாகப் பாடிக் காண்பித்தார். அந்த வாரம்தான் அந்தப் பாடலைப்பற்றி 'மனம் கொத்திப் பறவை’யில் எழுதி இருந்தேன். குரல் அருமையாக இருந்தது. அந்த ஆச்சர்யத்தில் நன்றி சொல்ல மறந்துபோனேன். மறு நாள் அந்த எண்ணுக்கு போன் செய்தேன். ஏதோ ஒரு கலவரம்போல் சத்தம் கேட்டது. 'கரா முரா’ என்று இந்தியில் கத்திக்கொண்டு இருந்தார்கள். அப்போது அவர், 'நான் பார்லிமென்ட்டில் இருக்கிறேன். உங்களிடம் நான் யார் என்று சொல்ல வேண்டாம் என்று இருந்தேன். பிறகு பேசுகிறேன்!’ என்றார். அப்போது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்னொரு சம்பவம், அடியேனைப்பற்றி விகடனில் வாலி பாராட்டி எழுதியது! அப்போது நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. ஒட்டுமொத்தத் தமிழகமே என்னைப் பாராட்டியதுபோல் மகிழ்ந்தேன். இனி எனக்கு நோபல் பரிசு கிடைத்தால்கூட, அதை இரண்டாம் பட்சமாகவே கருதுவேன். 'மனம் கொத்திப் பறவை’யால் எனக்கு நேர்ந்த அனுபவங்களைவைத்தே, ஒரு தொடர் எழுதலாம்.  

''நானும் விகடனும்!''

விகடனில் என்னை ஆகக் கவர்ந்தவை, அதன் அரசியல் கட்டுரைகள். ஒவ்வோர் அரசியல் பிரச்னைபற்றியும் தெள்ளத் தெளிவாக எழுதப்படும் கட்டுரைகள், மக்கள் மத்தியில் ஒரு நல்ல விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, மாற்று அரசியல் சார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்களைச் சொல்லலாம். சமீபத்தில் வந்த புனிதபாண்டியன் பேட்டி ஓர் உதாரணம்.

விகடனின் போற்றத்தக்க மற்றொரு பண்பு, அதன் ஜனநாயகத் தன்மை! ஆனால், ஒரு மைனாரிட்டி அரசு ஐந்து ஆண்டுகள் ஆள முடிவதைப்போல் ஜனநாயகத்தில் சில பாதகமான அம்சங்களும் உண்டு இல்லையா? அதுபோன்ற ஒரு பிரச்னை என்னவென்றால் - விகடனுக்கு எல்லா எழுத்தாளர்களும் சமம். அதனால், எல்லோருக்கும் சம உரிமை. இதனால் 2001-ல் 'கோணல் பக்க’ங்களை எழுதிய நான், 'மனம் கொத்திப் பறவை’க்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது. சுழற்சி முறையில் என் பெயர் மீண்டும் வர இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று நினைக்கும்போது சற்று ஆயாசம் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. விகடனையும் ஜூ.வி - யைப்போல் வாரம் இரண்டு முறை கொண்டுவந்தால் என்ன?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism