Published:Updated:

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்

Published:Updated:
##~##

ளர்ச்சிப் பணிகளைக் கிராமங்களில் இருந்துதான் தொடங்க வேண்டும். சரி... வளர்ச்சியை எந்தப் பணியில் இருந்து தொடங்குவது?

தண்ணீரில் இருந்துதான் தொடங்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் தலையாய பிரச்னை அதுவே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகின் தண்ணீர் வளத்தில் இந்தியா 4 சதவிகித தண்ணீரைப் பெற்று இருக்கிறது. ஆனால், உலக மக்கள்தொகையில் 17.3 சதவிகிதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள்.  தண்ணீரை ஆதாரமாகக்கொண்ட

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

விவசாயம் தான் இங்கு பிரதான தொழில். தவிர, சில பகுதிகள் செழிப்பானவை, பல பகுதிகள் வறண்டவை என்று சீரற்ற புவியியல் அமைப்பை யும்கொண்டு இருக்கிறோம். ஆக, அடிப்படையிலேயே, சிக்கலான பிரச்னை இது!

நம்முடைய முன்னோர்கள் இதன் தீவிரத்தை முழுமையாக அறிந்து இருந்தார்கள். அதனால்தான், உலகிலேயே அதிகமான செயற்கை நீர்நிலைகளைக்கொண்ட நாடாக இந்தியா உருவானது. நீர்நிலைகள் பொதுச் சொத்தாக இங்கு கருதப்பட்டது. தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத் தும் அதிகாரம் அந்தந்த மக்கள் அமைப்புகளிடம் இருந்தது!

ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகான 63 ஆண்டுகளில் எல்லாம் மாறிவிட்டது. 35 கோடி மக்களுக்கு 3 கோடி நீர்நிலைகள் இருந்த நிலை மாறி, இன்று 120 கோடி மக்களுக்கு 50 லட்சமாக  நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஓர் ஆண்டுக்கான இந்தியாவின் நீர்த் தேவை 1,925 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரித்து இருக்கும் நிலையில், வெறும் 1,125 கியூபிக் மீட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் சூழல் இப்போது. உலகிலேயே அதிக மழை பொழியும் சிரபுஞ்சியில்கூட தண்ணீருக்காக மக்கள் அலையும் அவல நிலை. இப்போதே இப்படி என்றால், 2050-ல் இந்தியாவின் நீர்த் தேவை, 3,000 பில்லியன் கியூபிக் மீட்டர்கள். நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?  

இந்தியா, அண்ணா ஹஜாரேவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம் இதுதான்!

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

தண்ணீர் நிர்வாகத்தைப் பொறுத்த அளவில், நம்முடைய பாரம்பரிய நிர்வாக முறை அற்புத மானது. இயற்கையான நீர்நிலைகள் அதிகம் இல்லாததால், மழை நீரைச் சேகரித்து, செயற்கை நீர்நிலைகளை உருவாக்கி, அதன் வாயிலாக நிலத்தடி நீராதாரத்தை மேலே கொண்டுவந்து பயன்படுத்திக்கொள்வதே நம்முடைய பாரம்பரிய முறை. இந்த முறையில் பின்பற்ற வேண்டிய இன்னொரு விஷயம் சிக்கனமான பயன்பாடு. சுருக்கமாகச் சொன்னால், தண்ணீரைச் சேமிப்பதே நம்முடைய பாரம்பரிய முறை!

நீர் நிர்வாகத்துக்கும் அருமையான கட்டமைப்பு நம்மிடம் இருந்தது. நீர்நிலைகள் மீதான முழு உரிமையும் குடிமக்கள் வசம் - ஊர் வசம் இருந்தது. நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இருந்து மீன்கள் வரை அனைத்திலும் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் பங்கு இருந்ததால், நீர்நிலைகளை மக்கள் தங்கள் சொந்த சொத்தா கக் கருதினர். பராமரிப்புப் பணிகளைக் குடி மராமத்து முறையில் மேற்கொண்டனர். ஆங்கி லேயர் ஆட்சியில், அரசாங்கத்தின் கீழ் இந்த உரிமைகள் செல்லத் தொடங்கின. சுதந்திரத்துக்குப் பின் முற்றிலுமாக நம்முடைய பழைய முறை சிதைந்துபோனது.

மலைக் குன்றுகளால் சூழப்பட்ட, வறட்சியான ராலேகான் சித்தியை மேம்படுத்த நம்முடைய பாரம்பரிய முறையைத்தான் கையாண்டார் அண்ணா ஹஜாரே. மழை நீரைச் சேமித்தால்,  முறையாகப் பயன்படுத்தினால், நாட்டில் உள்ள அத்தனை நதிகளிலும் உள்ள நீர் வளத் துக்கு இணையான நீர் வளத்தைப் பெற முடி யும் என்பது அண்ணா ஹஜாரேவின் ஆழமான நம்பிக்கை!

''இது ஓர் விஞ்ஞானம். எத்தனை வறண்ட பகுதியிலும், எவ்வளவு ஜனத் தொகை மிகுந்த பகுதியிலும், அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப திட்டமிடு வதன் மூலம் இந்த விஞ்ஞானத்தை நாம் பயன் படுத்த முடியும். தண்ணீர்ப் பிரச்னையில் இருந்து மீண்டு வர முடியும். ஆனால், பல தளங்களில் செயல்படுத்த வேண்டிய விஞ்ஞானம் இது!'' என்கிறார் அண்ணா ஹஜாரே.

''நம்முடைய மக்களுக்கு ஏன் அத்தியாவசியமான நீர்நிலைகளின் அவசியம் புரியாமல் போனது? நீர்நிலைகளோடு அவர்களுக்கு நேரடித் தொடர்புகள் அறுந்ததால், புரியாமல் போனது. பணம் இருந்தால், நினைத்த உடன் கிணறுகள் தோண்டிக்கொள்ளலாம் என்ற சூழல் உருவானதால், புரியாமல் போனது. வீட்டுக்கு வீடு, வயலுக்கு வயல் அவரவருக்குச் சொந்தமாக ஆழ்க் குழாய்க் கிணறுகள் வந்ததால், புரியாமல்போனது. ராலேகான் சித்தியில் இது எல்லாவற்றையும் நாங்கள் மாற்றினோம்.

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

ஒருபக்கம், நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கினோம். ஊரெங்கும் மரங்கள் வளர்த்தோம். புல் படுக்கைகளைப் பராமரித்தோம். மறுபுறம், தண்ணீர்ப் பயன்பாட்டுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை உருவாக்கினோம். குழாய்த் தண்ணீர் சாலைக்கு வரக் கூடாது என்பதில் தொடங்கி, எல்லோரும் ஒரே பயிரை விளைவிக்கக் கூடாது என்பது வரை.

ராலேகான் சித்தியில் வசிக்கும் ஒருவர் தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக, அவர் விருப்பப்படி ஆழ்க் குழாய்க் கிணறு அமைத்துக்கொள்ள முடியாது. நிலம் இருக்கிறது என்பதற்காக, அதிக நீர் தேவைப்படும் பயிர்களையே தொடர்ந்து சாகுபடி செய்ய முடியாது. இங்குள்ள கால்நடைகள்கூட தங்கள் மனம்போன போக்கில், மழைக்காக வளர்க்கப்படும் புற்களை மேய்ந்துவிட்டுப் போக முடியாது. கிராமப் பஞ்சாயத்து எல்லாவற்றை யும் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும். ராலே கான் சித்தியை நீர் வளம்கொண்ட பகுதியாக இப்படித்தான் நாங்கள் மாற்றினோம்.

நிச்சயம், இந்தியர்களால் தண்ணீர்ப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். காந்தி சொன்னதுதான்: 'உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்திசெய்ய இந்த பூமியால் முடியும். ஆனால், மனிதர்களின் பேராசையைப் பூர்த்திசெய்ய, பூமியால் முடியாது!’

- தொடர்வோம்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism