Published:Updated:

என் ஊர்!

எத்திராஜ் மீசை... இந்துக்குமார் இசை!

என் ஊர்!

எத்திராஜ் மீசை... இந்துக்குமார் இசை!

Published:Updated:
##~##

செங்கல்பட்டு பற்றிய தன் பால்ய பருவத்து நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகரும் இயக்குநருமான நாசர்!

 ''மேலேறிப்பாக்கத்தில் குடியிருந்த நாங்கள் என் ஆறா வது வயதில் செங்கல்பட்டுக்கு குடிபெயர்ந்தோம். என்னைப் பொறுத்தவரை உலகிலேயே மிக அழகான ஊர் அதுதான். ஊருக்குள் நுழையும்போதே வரிசையாக தென்னை மரங் கள், கிழக்கில் குழவாய் ஏரி, அதையட்டி அகழியோடு கூடிய கோட்டை, மேற்கே பாலாற்றுப் படுகை, நடுவே கோணலாக அழகாகத் தெளிந்த நீர், அதனின்று பிரிக்கப் பட்டு, தனித்து உருவாக்கிய மதகு.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

ஊரின் நட்ட நடுவே ரேடியோ மலை. மாலை வேலைகளில் ஊரே கேட்கும்படியாக ரேடியோ  அந்த மலையில் இருந்து ஒலிக்கும். கணபதி, திருமலை டாக்கீஸ் என்று இரண்டே தியேட்டர்கள்தான். அப்புறமாக அங்கமுத்து, ராதா என்று வந்து சேர்ந்துகொண்டன. கணபதி டாக்கீஸின் திரைக்கு இருபுறமும் ஒரே மாதிரி தோற்றம்கொண்ட இரண்டு கிரேக்க வீரர்கள் சிங்கத்தின் மீது கைவைத்து கம்பீரமாக நின்று இருப்பார்கள். 'ராஜராஜ சோழன்’ படம் வந்தபோது, அந்த இரண்டு வீரர்களையும் மறைத்து சினிமா ஸ்கோப்புக்காக அகன்ற திரையைக் கட்டினார்கள். வீரர் களை மறைத்ததால் 'சோழன்’ சோபிக்கவே இல்லை!

என் ஊர்!

மைசூருக்கு நிகராக தரசா கொண்டாட்டங்கள் செங்கல்பட்டிலும் களை கட்டும். அவ்வளவு சனம் எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது. தசராவுக்கு இணையாக பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய தர்ஹாவில் நடக்கும் விழாவிலும் கூட்டம் கசக்கிப் பிழியும். உறியடிக்கும் சீஸன் தொடங்கிவிட்டால், ஊரின் முச்சந்திகளில் ஜோடிக் கம்புகள் நட்டு உறிகள் ஊஞ்சலாகத் தொங்கும். உறி அடிக்க முயற்சிப்பவர்கள் மீது தார் டிரம் களில் நிரப்பிவைக்கப்பட்டு இருக்கும் மஞ்சள் கலந்த தண்ணீரை அடிப்பார்கள். பனியன் கிழியும் அளவுக்கு பொளேர் என அடிக்கும் வித்தைக்காரர்கள் அங்கு உண்டு.

தர்மராஜா கோயில் முச்சந்தி மேட்டில் வருஷா வருஷம் 10 நாள் கூத்து நடக்கும். அப்புறம் மசானக் கொள்ளை. ரேக்ளா ரேஸ் எல் லாம்கூட நடக்கும்.  போட்டியில் எப்போதும் டீக்கடை எத்திராஜ்தான் வெல்வார். வெடவெடவென இருக்கும் அவருக்கு மீசை கொஞ்சம் பெருசுதான்.

பஞ்சா என்ற ஒரு இஸ்லாமிய விழாவில் மதம் பாராது எல்லோரும் வந்து வேண்டிக்கொள்வார்கள். பத்தாம் நாள் நடக்கும்  தீமிதியில் 'யாளி தூதா’ என்று கூவிக்கொண்டே நான் மிதித்தோடி இருக்கிறேன். வீட்டுக்கு வந்து கால்களைப்  பார்த்தால் கொப்பளங்கள் ஏதும் இல்லை. அப்போது நான் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று நம்பினேன்.

என் ஊர்!

செயின்ட் ஜோசப் ஸ்கூல், அடுத்து மேரி ஸ்கூல்.  அதை அடுத்து கூர் முனையுடன் வானத்தைத் தொடத் துடிக்கும் கோபுரங்களைக்கொண்ட சர்ச்சில் இருக்கும் யேசுநாதரின் கண்களில் கருணை வடியும். செயின்ட் ஜோசப் ஸ்கூலுக்கு நேர் எதிராக ஒரு பழைய சி.எஸ்.ஐ. சர்ச். இரண்டு சர்ச்சுகளிலும் எனக்குப் பிடித்த பொதுவான விஷயம், மண்டி இடுவதற்கும், பைபிள் வைப்பதற்கும் வசதியாக வடிவமைக்கப்பட்ட மர பெஞ்ச்சுக்கள். சி.எஸ்.ஐ-யில் கோடை விடுமுறைகளில் வேதாகமப் பள்ளி ஒன்று நடக்கும். அதன் கடைசி நாளில் நாடகம் ஒன்று போடுவார்கள். அதில் நடிப்பதற்காகவே அப்பா என்னை அதில் சேர்த்துவிடுவார். ஜமா-அத்தில் அதுகுறித்து ஒரு சர்ச்சை எழுந்ததாக அப்பா ஒரு முறை கூறினார். இவற்றுக்கு நடுவே கோபால்சாமி மாமா, ஆர்.எஸ்.மணி அண்ணா, இந்துக்குமார் மாமாவின் இசையோடு நாடகங்கள் நடத்து வார்கள்.

அப்போது எல்லாம் கிரிக்கெட் பிரசித்தம் கிடையாது. ஃபுட்பால்தான். எஸ்.ஏ.எஸ். கிரவுண்டில் போட்டிகள் நடக்கும். ஊர் ஆண் மக்கள் யாவரும் குவிந்துகிடப்பார்கள். அகழியைச் சுற்றிய கோட் டையின் ஒரு பகுதிதான் அந்த கிரவுண்டு. செங்கல் பட்டில் உடல் நலத்துக்குகாக ஸ்கின் ஆஸ்பத்திரியும் பெரியாஸ்பத்திரியும் இருந்தன. பெரியாஸ்பத்திரி கொஞ்சம் தூரம் என்பதால் பயணி களை ஏற்றிச் செல்ல ஜட்கா வண்டி களும் இருந்தன. அதன் காரணமாக ஊரில் குதிரைகள் நிறைய இருந்தன. குதிரைக்குக் கொடுக்க கொள்ளு வேக வைத்த நீருக்கு பெரும் கிராக்கி. சொம்பு ஒன்றுக்கு 10 காசோ என்னமோ. இப்படிப்பட்ட செங்கல்பட்டு இன்று மற்ற ஊர்களைப் போலவே அடை யாளம் அழிந்து, வளர்ச்சி என்ற பெய ரில் உருமாறிவிட்டது. மணல் கடத்தப் பட்டு உயிரோடு தோல் உறியப்பட்ட பாம்பாய் பாலாறு. இது வளர்ச்சியா அழிவா என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை!''

படங்கள்: பா.ஜெயவேல்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism