Published:Updated:

ஆன்மிகப் போராளி பரமஹம்சரும் வர்க்கப் போராளி ம.வெ.சி.யும்!

ஆன்மிகப் போராளி பரமஹம்சரும் வர்க்கப் போராளி ம.வெ.சி.யும்!
ஆன்மிகப் போராளி பரமஹம்சரும் வர்க்கப் போராளி ம.வெ.சி.யும்!

லகம் முழுவதும் சீடர்களை உருவாக்கிக் கொடுத்த ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்கிற  ஶ்ரீ கதாதர சட்டோ பாத்யாயர்  பிறந்த நாள் (பிப்ரவரி 18, 1836) இன்று.

தென்னிந்தியாவில் முதன்முதலில் மே தினத்தைக் கொண்டாடிய தொழிற்சங்க வாதியான தோழர் ம.வெ. சிங்காரவேலர் (18.2.1860) பிறந்த தினமும் இன்றுதான்.

 

ஆன்மிகப் போராளி பரமஹம்சரும் வர்க்கப் போராளி ம.வெ.சி.யும்!

ஒருவர் ஆன்மிகத்தில் மகத்தான புரட்சியை நாட்டில் விளைவித்தவர், மற்றவர் உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக தொழிலாளர் புரட்சியை விதைத்தவர். இவர்கள் இருவருக்குமே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும்  அடித்தட்டு, விளிம்புநிலை மக்களுக்கும், ஆன்மிக தேடல் கொண்டோருக்கும் போய்ச் சேரவில்லை என்பதே!

சிங்காரவேலர் யார் ?

சென்னை மயிலாப்பூர் வெங்கடாசலம் செட்டியாரின் மகன், ம.வெ. சிங்காரவேலர்.  மீனவ குடும்பத்தில் சென்னை நடுக்குப்பத்தில் பிறந்தவர்.  மகாத்மா காந்தி,  மூதறிஞர் ராஜாஜி, பாபாசாகேப்  அண்ணல் அம்பேத்கர்,  தோழர் மும்பை எஸ்.ஏ.டாங்கே, எம்.என்.ராய் போன்றோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அந்தத்  தொடர்புகளின் மூலம்  சோஷலிசத்தை நாடெங்கும் பரப்பும் பணியில் தீவிரம் காட்டினார். சட்டம் படித்தவர். மகாத்மா காந்தியடிகளின் அந்நிய ஆடைகளை  மறுக்கும் 'சுதேசி' முழக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு சென்னை கடற்கரையில் தன்னுடைய வழக்கறிஞர் அங்கியினை தீயிட்டுக் கொளுத்தினார்.

அங்கம்மாள் என்பவரை மணந்தார். தன்னுடைய திரளான சொத்துக்களை தேசமெங்கும் பரவிக் கிடந்த தொழிலாள தோழர்களுக்காக வாரி இறைத்தார்.  1925-ல் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். "போல்ஷ் விக்" சதி வழக்கில் சில ஆண்டுகளும், தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை தலைமை தாங்கி நடத்தியதால் கைதாகி பல்லாண்டுகளும் கடுங்காவல் சிறைவாசம் அனுபவித்தார். 

ஆங்கில வார இதழான 'லேபர் கிஸ்ஸான் கெசட்' மற்றும் தமிழ்வார இதழான 'தொழிலாளன்' ஆகிய பத்திரிகைகளை  சொந்தமாக நடத்தினார். 'நான் கோவாப்பரேட்டர்'  இதழில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து நெடிய கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார். 'லேபர் கிஸ்ஸான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான்' என்ற அமைப்பை நிறுவினார்.

ஒவ்வொரு சொல்லையும் பொட்டில் அடித்தாற் போல உரிய ஆதார விளக்கத்துடன் எடுத்தியம்பியதால் 'சிந்தனைச் சிற்பி' என்ற அடையாளத்துடன்  இதே  பிப்ரவரி மாதம் 11- ம் தேதி (1946) தன்னுடைய 86 வது வயதில் ம.வெ.சி. உடல் நலிவுற்று காலமானார்.

மாவீரன் நெப்போலியனையே மண் கவ்வ வைத்த வீர இளைஞன் வெலிங்டன் பிரபு, ம.வெ.சி.யின் வேகத்தைப் பார்த்து நடுங்கியதும், சென்னை நடுக்குப்பத்தில் இருந்த அவருடைய குடும்பத்தையே அங்கிருந்து அகற்ற முயற்சித்ததும் வரலாறு.

நடுக்குப்பத்திலும், கடற்கரைச் சாலையிலும், மயிலாப்பூரிலும் இருந்த  ம.வெ.சி.யின் குடும்பத்து சொத்துக்கள் மிக அதிகம். இன்றளவும் அவருடைய வம்சாவளியினர் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

சென்னை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவர் பெயரைத்தான் ஆட்சியாளர்கள் இன்று சூட்டியுள்ளனர். சென்னை ராயபுரத்தில் ம.வெ.சி. மணிமண்டபம் அமைந்திருக்கிறது. சென்னை கடற்கரை காமராஜர் சாலையில்  இருக்கும் லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில்,  ம.வெ.சி.யின் உறவினர்கள் கந்தப்ப செட்டி, அருணாசல செட்டி போன்றோரின் கல்லறைகள் இருப்பதைக் காணமுடியும்.

"போர்க்குணம் மிகுந்த நல் செயல் முன்னோடி
பொதுவுடமைக் கேகுக அவன் பின்னாடி" என்று ம.வெ.சி. குறித்து பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.
"சுதந்திரப் பித்தரும், யோக்கியர்களில்
 ஒருவரும் மறைந்தார்" என்று ம.வெ.சி. இறப்பு நாளன்று வருந்தியுள்ளார் மூதறிஞர் ராஜாஜி.

"வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில், சிங்காரவேலரை... புரட்சிப்புலியை...
மறந்தனர் மக்கள்" என்கிறார் பேரறிஞர் அண்ணா.

சி.எஸ். சுப்பிரமணியம், பேராசிரியர் முத்து.குணசேகரன், புலவர் பா.வீரமணி, கழஞ்ஞர் செல்வராஜ், புதுவை ஞானம், டாக்டர் கோ.கேசவன் போன்ற அறிஞர் பெருமக்களால் ஓரளவு சிங்காரவேலர் குறித்த தகவல் திரட்டுக்களை அவர்கள் நூலின் வழியாக அறிய முடிகிறது.

ஆனால், 100 சதவீதம் அல்ல... அதில் பாதியளவே கிடைத்திருக்கிறது. அரசு எந்திரங்கள் துணையின்றி மிகப்பெரிய போராட்டத் தேடலுடன் இவர்களின் பயணம் இந்தளவாவது வெற்றி பெற்றிருக்கிறது.வரலாற்றுக் குறிப்புகள், பதிவுகள் எத்துணை முக்கியமானவை என்பதை காலந்தோறும் ஆட்சியாளர்கள் மறந்து அல்லது மறைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

சென்னையில் கம்யூனிசத்தை காலூன்ற வைத்ததில் ம.வெ.சி.யை போன்றே பெரும் போராட்டத்தை மேற்கொண்ட வடமேற்கு பெத்தான் வகுப்பினர் குறித்தோ, மேனாள் கடற்படை வீரரான அமீர் ஹைதர்கான் குறித்தோ போதுமான குறிப்புகள் இன்றளவும் இல்லை. எதிர்கால மாணவ சமூகத்துக்கு ஆட்சியாளர்கள் செய்திருக்கும் மாபெரும் அநீதிகளில் ஒன்றாகவே என்னால் பார்க்க முடிகிறது.

ம.வெ.சி.யின். வர்க்கப் போராட்டத்துக்கான பதிவுகள் எப்படி நம்மிடம் முழுமையாக இல்லையோ அதே அளவுதான் இந்திய ஆன்மிக வானில் சுடர் விட்டுப் பிரகாசித்த ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்த முழுமையான பதிவும் நம்மிடம் இல்லை...

பரமஹம்சர்:

" மக்களில் பெரும்பாலானோர் புண்ணியம் தேடும் பொருட்டே பரோபகாரம் செய்கின்றனர்... அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவையே" என்று  தான, தர்ம சீலர்களை பொட்டில் அடிக்கிற கருத்தாளர்தான் பரமஹம்சர்.

மனிதத்தின் இன்னொரு இயல்பை இப்படிச் சொல்லுகிறார் - "மனிதர்கள் புகழ்வதும் வினாடி, இகழ்வதும் வினாடி... எனவே மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளை கவனியாது செல்லுங்கள்" -
தன்னுடைய இல்வாழக்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட அன்னை சாரதா தேவியையே காளியின் சொரூபமாக கண்டவர்  பரமஹம்சர்.

பரமஹம்சரின்  மாணவப் பருவத்தில் கணிதப் படிப்பைத் தவிர அத்தனை படிப்பும் பிடித்தமாய் 

ஆன்மிகப் போராளி பரமஹம்சரும் வர்க்கப் போராளி ம.வெ.சி.யும்!

இருந்திருக்கிறது. அதேபோல் ஆடல், பாடல், கவி புனைதல், ஓவியம் வரைதல் என்று மென்மையான கலைகளில் இயல்பாகவே ஞானவானாக திகழ்ந்த பரமஹம்சர் பயணமும் அதன் வழியே சென்றது.
இப்படித்தான் அவருடைய உபதேசங்களும், அவருடைய ஞானவழி  அனுபவ பதிவுகளும் எழுத்துருவாக இல்லாமல் வார்த்தைகளாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தன.

"எல்லா விதமான மகான்களையும் சந்தித்து விட்டேன்... எனக்குள்ளே கனன்று கொண்டிருக்கும் கேள்விகள் ஆயிரம். அதை புரிந்து கொண்டு விளக்கமளிக்க ஒருவரும் இல்லையே" என்று ஏங்கியபடி பயணத்தைத் தொடர்ந்த இளைஞன் நரேந்திரனை,  சுவாமி விவேகானந்தராய் மாற்றியதும் அவருக்குள்ளே அணுவையும் மிஞ்சிடும் ஞான ஆற்றல் இருப்பதையும் கண்டறிந்தவர் பரமஹம்சர்.

"என்னுடைய ஞானத்தின் சக்தியால் ராமர், சீதை, ஜீசஸ், நபிகள் போன்றோரைக் கண்டேன்... பேரானந்தம் கொண்டேன்" என்றும் ஒரு சத்சங்கத்தில் (சொற்பொழிவு) குறிப்பிடுகிறார் பரமஹம்சர். எம்மதமும் சம்மதமே என்ற உயரிய நோக்கு அவருடைய ஆன்மிகப் பயணத்தை எளிமைப் படுத்தின.

பரமஹம்சரின் ஆன்மிக சத்சங்க நிகழ்வுகளுக்கு தவறாமல் வந்து விடும் சீடர்களில் ஒருவரான மகேந்திரநாத்குப்தா, இந்த உலகத்துக்கு அளித்த அருட்கொடைதான் "ராமகிருஷ்ணர் அமுதமொழிகள்" என்ற தொகுப்பு. இது மூன்று பாகங்களாக பிரிக்கப் பட்டு இன்றளவும் ராமகிருஷ்ணரின் ஆன்ம சக்தியை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

தாம் இருக்கும் இடத்தில் இருந்த படியே 'சத்சங்கம்' மூலம் சீடர்களை தன்னுடைய இருப்பிடம் தேடி... நாடி வரவழைத்த மகா குருவாக இன்றளவும் போற்றப் படுகிற ராமகிருஷ்ண பரம ஹம்சருக்கும் ம.வெ.சி.க்கு நேர்ந்த அதே சோதனைதான்...

ஆம்... இவர்கள் இருவர் குறித்த முழுமையான பதிவுகளே இன்றுவரையில்  இல்லை.... இவர்கள் குறித்த முழுமையான ஆராய்ச்சிகளும் இன்று வரையில் செய்யப்படவில்லை. இரண்டு தளங்களில் இருவருமே புரட்சியாளர்கள்தான்...

-ந.பா.சேதுராமன்

 

அடுத்த கட்டுரைக்கு