Election bannerElection banner
Published:Updated:

நான் போகிறேன் மேலே... மேலே!

நான் போகிறேன் மேலே... மேலே!

##~##

''கனவுல ஆரம்பிச்சு கற்பனை வரைக்கும் எனக்குள் ஓடிட்டு இருக்கிற விஷயம், இன்னும் மேலே மேலே பறக்கணும் என்பதுதான்!'' - அகண்ட வானத்தை அண்ணாந்து பார்த்த படி பேசுகிறார் பாபு. ஏரியா அடையாளம்... 'க்ளைடர்’ பாபு!

 மோட்டார், வாயு என உந்து சக்திக்கான எந்த உபகர ணமும் இல்லாமல், மனித சக்தியின் மூலம் கிளைடரில் பறப்பதை 'பிணீஸீரீ ரீறீவீபீவீஸீரீ’ என்பார்கள். அப்படி, தானே சொந்தமாகத் தயாரித்த க்ளைடரில் கோவை வட்டாரத்தில் பறந்துகொண்டு இருக்கிறார் வரதராஜபுரத்தைச் சேர்ந்த பாபு. இத்தனைக்கும் பாபு, வறுமையோடு போராடிக்கொண்டு இருக்கும் ஒரு ஏழைப் பங்காளன்!

நான் போகிறேன் மேலே... மேலே!

''சின்ன வயசுல துணிக் கடை விளம்பரத்துக்காக, விமானத்தில் இருந்து நோட்டீஸ் வீசினாங்க. அது அழகாக் காத்துல மிதந்து, பறந்து வந்து இறங்கினதைப் பார்த் ததுல இருந்து எனக்கும் பறக்குற ஆசை பத்திக்கிச்சு. பறவைகளை நுணுக்கமாகக் கவனிக்க ஆரம் பிச்சேன். பறவைகளின் இறக்கை செயல்பாடுகள் குறித்த புத்தகங்கள் படித்து நிறையத் தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.  க்ளைடர் பத்தி தெரிஞ்சவங்ககூட நட்பு வளர்த்துக்கிட்டேன். எட்டாம் வகுப்பு படிக் கும்போது, பிளாஸ்டிக் பேப்பர், பிளாஸ்டிக் பட்டை எல்லாம்வெச்சு சின்னதா ஒரு க்ளை டர் செஞ்சேன். மாடியில் இருந்து குதிச்சு காலை உடைச்சுக்கிட்டதுதான் மிச்சம். வீட்ல செம திட்டு!

நான் போகிறேன் மேலே... மேலே!

க்ளைடர் தொடர்பான செலவைச் சமாளிக்க ஹோட்டல்ல சர்வர் வேலைக்குப் போனேன். அதில் சம்பாதிச்ச காசுல, க்ளைடர் தொடர் பான ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கினேன். க்ளைடர் தயாரிப்புக்கான பொருட்களும் வாங்கினேன். பலமுறை க்ளைடர் செய்யும் முயற்சிகள்  தோல்வியில்தான் முடிஞ்சது. கை, கால் உடைஞ்சு, மருத்துவச் செலவு வேற. ஆனா, இன்னொரு பக்கம் அதுவே க்ளைடர்ல எப்படியும் பறக்கணும்கிற வெறியை அதிகரிச் சுட்டே இருந்தது. டெல்லியில் க்ளைடரில் பறப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறாங்கனு கேள்விப்பட்டு அங்கே போனேன். அங்கேயும் சர்வர் வேலை மூலம்தான் பிழைப்பை ஓட்டி னேன். அங்கே கிடைச்ச பழக்கத்தில், க்ளைடர் தொழில்நுட்பம் ஓரளவு கைவந்தது. க்ளைடர் என்பது பறவையின் இறகைப்போன்றதுதான். குறிப்பாக, கழுகின் அமைப்பில் இருக்கணும்னு புரிஞ்சது!

ஊருக்குத் திரும்பி சிமென்ட் சாக்குப் பைகளைவெச்சு க்ளைடர் தயாரிச்சு, மருத மலையில் இருந்து குதிச்சேன். 'புன்னகை மன்னன்’ படத்தில் கமல் மாதிரி மரத்தில் மாட்டி, கை, கால், முகத்தில் எல்லாம் ஏகப்பட்ட காயம். இந்த முறை ரொம்பவே சீரியஸான காயம். ஒரு வருஷம் படுத்த படுக்கை. அந்த சமயம்தான் நிறைய யோசிக்க நேரம் கிடைச்சது. 'என்ன தப்பு? எங்கே திருத்திக்கணும்?’னு சிந்திச்சு புதுப்புது குறிப்புகள் எடுத்தேன்.

உடம்பு தேறிய பிறகு, ஓரளவு தரமான க்ளைடர் தயாரிச்சேன். திரும்பவும் மருத மலையில் 100 அடி உயரத்தில் இருந்து உசிரைக் கையில் பிடிச்சுட்டே குதிச்சேன். நானே நம்பலை...  பறவைபோல பறந்துட்டு இருந்துட்டேன். காத்தும் பருவநிலையும் சாதகமாக இருந்தால்தான், க்ளைடரில் பறக்க முடியும்னு புரிஞ்சுக்கிட்டேன்.  அதன் பிறகு, குன்னூரின் பராசூரன் மலை, ஓதி மலை, ஊட்டி மலை களில் இருந்தெல்லாம் பறந்தேன். மனசுக்குள் அபார நம்பிக்கை பிறந்தது. கன்னியாகுமரி கடற்கரையில் கிரேனில் இருந்து குதிச்சு கடலுக்கு மேலே பறந்தேன். இதுவரைக்கும் 200 முறை, மொத்தம் 13 மணி நேரம் பறந்து இருக்கேன். அதிகபட்சம் 3,500 அடி உயரத்தில் பறந்து, தமிழகத்தின் பெரும்பாலான பரப்பை கழுகு பார்வையில் பார்த்துட்டேன்.

வானத்தில் பறந்துக்கிட்டே சமதளத்தைப் பார்க்கும்போது உடம்புக்குள் ஊற்றெடுக்கும் பரவசத்தை வார்த் தைகளால் வர்ணிக்க முடியாது. என்னுடன் பறக்க  ஆசைப்பட்டு முறையான சட்ட அனுமதி வாங்கி வர்ற வங்களை கங்காரு குட்டிபோலத் தூக்கிட்டும் பறக் கிறேன்!'' என்று உற்சாகமாக சிரிக்கிறார் பாபு.

வெளிநாடுகளில் இந்த விளையாட்டுக்கு இருக்கும் அங்கீகாரம் இங்கு இல்லை என்பதே பாபுவின் ஆதங் கம். வறுமைக்கும் வானத்துக்கும் இடையேயான போராட்டம்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

நான் போகிறேன் மேலே... மேலே!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு