Published:Updated:

என் ஊர்!

''வைகோவோடு என்னைச் சேர்த்துவைத்த ஊர்!''

என் ஊர்!

''வைகோவோடு என்னைச் சேர்த்துவைத்த ஊர்!''

Published:Updated:
##~##

.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர், தமிழக அரசியல் மேடைகளில் அனல் கனல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். தன் ஊர் மணக்காவிளை பற்றிய நினைவலைகளில் இங்கே நீந்துகிறார்...

 'எங்க குமரி மாவட்டம், 1952-ம் வருஷம்தான் தமிழகத்துடன் இணைந் தது. அதுவரை, தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்துச்சு. அதனால், எங்க ஊரில் நல்ல தமிழ் பேசுறவங்களை விரல்விட்டு எண்ணிரலாம்.  மக்களின் மலையாளம், தமிழ் கலந்த 'மணிப் பிரவாள நடை’ பேச் சைக் கேட்க, ஆசை ஆசையா இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செயின்ட் ஜோசப் துவக்கப் பள்ளியில் மூணாம் கிளாஸ் படிக்கிறப்ப, பள்ளி ஆண்டு விழா வந்துச்சு. என் கிளாஸ் டீச்சர் எமிலி, நேருவைப்பத்தி எழுதிக் கொடுத்து, பேசச் சொன்னாங்க. நேரு மாதிரியே ஷெர் வானி டிரெஸ், குல்லா, ரோஜான்னு அட்டகாசமா கிளம்பிப் போய், மனப்பாடம் பண்ணியதை ஒப்பிச்சுட்டு வந்தேன். அதுதான், என் முதல் மேடைப் பேச்சு. அப்புறம் எங்கே பேச்சுப் போட்டி நடந்தாலும், அதில் என் பெயர் இருக்கும்.

என் ஊர்!

பள்ளிப் பருவத்தில், விளையாட்டில் எனக்கு ஆர்வம் இல்லை. எங்க ஊரில் நல்ல வாலிபால் கிரவுண்ட் இருந்தது. என் வயசுப் பசங்களுக்கு, அப்போ அதுதான் சொர்க்கபுரி. தினமும் மாலை நேரத்தில் அங்கே ஆஜராகிடுவாங்க. ஆனா, நான் அங்கே போகும்போதும், பாடப் புத்தகங்களை எடுத்துட்டுப் போவேன். அது தவிர, செய்தித்தாள் களையும், புத்தகங்களையும் வாசிப்பேன். அந்த மைதானம் பல வாலிபால் ப்ளேயர்களை உருவாக்கியது. அப்படியே, இந்தப் பேச்சாளன் நாஞ்சில் சம்பத்தையும் உருவாக்கியது.

ஊரில், ஆறு, குளத்துக்குப் பஞ்சமே கிடையாது. எங்க வீட்டுப் பக்கத்திலேயே திருவிதாங்கோடு சானல் (வாய்க்கால்) ஓடியது. பள்ளி விடுமுறை சமயங்களில் நாள் பூரா தண்ணி யிலேயே ஊறிக்கிடப்போம்.  ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி விடுமுறை நேரத்தில் சானலில் வருடாந்திரப் பராமரிப்பு வேலைகள் நடக்கும். அதனால் அப்போ தண்ணீர் வராது. அந்த நேரத்தில், பக்கத்தில் உள்ள குளத்துக்குப் போவோம்.

ஊரில் மூன்று மதங்களைச் சேர்ந்த மக்களும், சரிசமமா, சகோதரத்து வத்தோட இருப்பாங்க. பள்ளியில் படிக்கிறப்பவே, நான் பைபிள் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ஜெயிச்சேன். அந்த அளவுக்கு, மத வித்தியாசம் பார்க்காமல் பழகுவாங்க எங்க ஊர் மக்கள்.

என் ஊர்!

என் ஊர்தான் என்னை தலைவர் வைகோவோடு சேர்த்துவெச்சது. 1982-ல் இலங்கைத் தமிழர் பிரச்னையில், கலைஞரைக் கைது செய்து இருந்தது எம்.ஜி.ஆர் அரசு. அதைக் கண்டித்து எங்க ஊர் சந்தைத் திடலில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செஞ்சோம். நான் தான் நன்றியுரை. ஆனால், 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ன்னு சொல்லி என்னைக் கைது பண்ணிட்டாங்க. சிறையில்தான் முதன்முதலா 'வைகோ’வைச் சந்திச்சேன். அதுவரை தமிழ்ப் பேராசிரியர் ஆகணும்னு கனவோட இருந்தவன், வைகோவை சந்திச்ச பின்னாடிதான், அரசியல் போராளி ஆகணும்னு திசை திரும்பினேன்.

என் அப்பா பாஸ்கரன், சுய மரியாதை இயக் கத்தில் ரொம்பவே தீவிரமானவர். இன்னிக்கும் எங்க ஊரில் நாஞ்சில் சம்பத்தைவிட, பாஸ்கரன் தான் பிரபலம். கருணாநிதி, ஸ்டாலின், ஜீவா, லெனின், ககாரின்னு, என்கூடப் பிறந்தவங்க பேரைக் கேட்டாலே, எங்க அப்பாவைப்பத்தி தெரிஞ்சுக்கலாம். சின்ன வயசில், எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை முதல் நாளே பார்த்திடுவோம். நான், அப்பா, அவரோட  நண்பர்கள் முகமது ஹனிஃபா, முகமது அப்துல் காதர்னு என்னைவிடப் பெரியவங்கதான் என் சினிமா கூட்டாளிங்க.

எங்க குடும்பத்துக்கு பலசரக்குக் கடைதான் பூர்வீகத் தொழில். எங்க  கடையை பணிக்கர் கடைன்னு சொல்வாங்க. ஊர்ல பஸ் ஸ்டாப் பேர்கூட, 'பணிக்கர் கடை பஸ் ஸ்டாப்’தான். அந்த அளவுக்கு எங்க கடை ஃபேமஸ். இப்போ, அந்தக்  கடையை விரிவுபடுத்தி 'வைகோ வணிக வளாகம்’னு என் சகோதரர்கள் நடத்திட்டு இருக்காங்க.

ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சு, ஒரு வீடு கட்டி னேன். 2002 ஜனவரி மாதம் ஜெயலலிதா ஆட்சியில் அரசியல் காழ்ப்பு காரணமா 'ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடு கட்டினேன்’னு சொல்லி, இடிச்சுத் தரை மட்டம் ஆக்கிட்டாங்க. அன்னிக்கு நான் ஊரில் இல்லை. 'சம்பத் வீட்டை இடிக்கிறாங்க’ன்னு எங்க ஊர்க்காரங்க கட்சி பாகுபாடுகளைக் கடந்து ஒண்ணா நின்னு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. அதுதான் இந்த சம்பத்துக்கும், இந்த ஊருக்குமான பாசம். இப்ப இருக்கிற வீட்டை கட்சியில் இருந்தே கட்டிக் கொடுத்திட்டாங்க. அதற்கு நன்றி சொல்ற மாதிரி, வீட்டுக்கு  'மறுமலர்ச்சி  இல்லம்’னு பேர்வெச்சுட்டேன்!'' - மலர்ந்து சிரிக்கிறார் நாஞ்சில் சம்பத்!  

-என்.சுவாமிநாதன், படங்கள்:ரா.ராம்குமார்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism