Published:Updated:

நூற்றாண்டின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்!

நூற்றாண்டின்  மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்!
நூற்றாண்டின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்!

இந்த நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அதுவும் பெண் எழுத்தாளர்கள் என்றால் யோசிக்காமல் நினைவுக்கு வரும் பெயர் ஹார்பர் லீ. பெண் எழுத்தாளர்கள் பலரும் புனை பெயர்களில் எழுதுவது வழக்கம். அடையாளம் தெரியாத பெயர்களையே பயன்படுத்துவர். இதற்கெல்லாம் முன்னோடி ஹார்பர் லீதான்.

பெண்களுக்கு உரிமைகளே குறைவாக இருந்த காலத்தில்,  ஒரு பெண் எழுத்தாளராக அனைவரையும் தன் எழுத்தில் கட்டி போட்டவர் அனேகமாக இவராகத்தான் இருக்கும்.

மறைந்த எழுத்தாளர் ஹார்பர் லீ எழுதிய 'டு கில் அ மாக்கிங் பர்ட்'  புத்தகத்தைதான் புத்தக வாசிப்பை துவங்கும் அனைத்து இளம் பிள்ளைகளுக்கு இன்றும் பரிந்துரை செய்கின்றனர். புத்தகம் வெளிவந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், இதன் மதிப்பும் புகழும் குறையாமல் இருப்பதுதான் லீ யின் வெற்றி.

நூற்றாண்டின்  மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்!

ஹார்பர் லீ,  ஏப்ரல் 28, 1926 -ம் ஆண்டு தென் அமெரிக்காவில் உள்ள மன்ரோவில் எனும் ஊரில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் உள்ள இவர்,  பள்ளி முடிந்ததும்  சட்டம் படித்தார். படிக்கும்போதே அங்குள்ள பல்கலைக்கழக செய்திதாளில் எழுதினார். எழுத்தில் ஆர்வம் அதிகரிக்க,  சட்டப் படிப்பை முடிக்காமலே கல்லூரியை விட்டு நின்றார். அதன் பின்னர்  பல சின்ன சின்ன வேலைகள் செய்தபடியே,  மீதி நேரத்தில் எழுதத் தொடங்கினார். கூடவே தனது புத்தகத்தை வெளியிட  பதிப்பாளரை தேடி அலைந்தார்

முதன்முதலில் அவர் தனது பதிப்பாளரிடம் காட்டியது “கோ செட் வாட்ச்மேன்” கதையைதான். இதனை பார்த்த டே ஹோஹாஃப்,  ஒரு பெரிய எழுத்தாளருக்கான அறிகுறி அவரது எழுத்தில் தென்பட்டதை அப்போதே கண்டறிந்தார். ஆனால் கதையில் சில திருத்தங்கள் தேவைப்படவே,  அதனை மாற்றியமைக்க கூறி,  பின் 1960-ல் “ டு கில் மாக்கிங் பர்ட்” என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த புத்தகத்தை வெளியிடுகையில்,  லீ தனது முதல் பெயரான நெல் என்பதை தவிர்த்து ஹார்பர் லீ என்ற பெயரிலேயே  வெளி உலகத்திற்கு அறிமுகமானார்.

இந்த புத்தகம் தனது முதல் பதிப்பில் 5000 பிரதிகள் விற்றது, ஹார்பர் லீ கையெழுத்திட்ட முதல் பதிப்பு புத்தகம்,  20,000 டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது. இது வரை 40 மில்லியன் பிரதிகளை விற்று இன்றும் அதிகமாக விற்கப்படும் ஒரு புத்தகமாக திகழ்கிறது. 40 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் பெருமை.

“டு கில் அ மாக்கிங் பர்ட்”  1960-ல் வெளியானதுமே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. 1961-ம் ஆண்டில் சிறந்த கற்பனை கதைக்கான புலிட்சர் பரிசை வென்றது. கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த புத்தகம் என்ற பெருமையை அடைந்திருக்கும் வெகு சில புத்தகங்களில் இதுவும் ஒன்று.

இது தென் அமெரிக்காவில்,  கறுப்பின மக்களுக்கு எதிராக அநீதிகள் நிகழ்ந்த காலக்கட்டத்தில் நடக்கும் கதை.  மேரிகோம்ப் எனப்படும் கற்பனை நகரில், வெள்ளையர் இன பெண் ஒருவரை, கருப்பர் இனத்தை சார்ந்த டாம் ராபின்சன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறார்.. இவர் சார்பாக வாதாட களம் இறங்குகிறார் அட்டிகஸ் ஃபின்ச் எனும் வழக்கறிஞர். இவரது ஆறுவயது மகள் ஸ்கௌடின் பார்வையிலேயே  நகர்கிறது கதை.

அவர் சிறு  வயதில் பார்த்து வளர்ந்த ஆலபாமாவில் உள்ள மன்ரோவில் நகரத்து மனிதர்களையும் நிகழ்வுகளையும் தழுவி எழுதப்பட்டதே இந்த நாவல்.

நூற்றாண்டின்  மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்!


இந்த நாவலில் வரும் டில் என்ற கதாபத்திரம் அவரது உயிர் நண்பன் கபோட் என்பவரை மனதில் கொண்டு எழுதப்பட்டது. அட்டிகஸ் ஃபின்ச் என்பது தனது தந்தையை ஒட்டி எழுதப்பட்ட கதாபாத்திரம். ஸ்கௌட் என்பது,  லீ அவரே தனது சிறுவயதில் இருந்ததை வைத்து எழுதியது.

'டு கில் அ மாக்கிங் பர்ட்' என்பதின் அர்த்தம் கதையிலேயெ வருகிறது. ஒரு முறை வேட்டையாடும்போது தனது குழந்தைகளிடம்,  'எத்தனை ப்ளூ ஜே பறவைகளை வேண்டுமானால் சுடலாம்; ஆனால் யாருக்கும் தீங்கு விளைவிக்காத மாக்கிங் பறவையை கொன்று விடக்கூடாது' எனக் கூறுவார். ஒரு குற்றமும் அறியாத டாம் ராபின்சனை தூக்கிலிட நினைக்கும் சட்டத்தை குறிக்கிறது இந்த ஒப்பிடுதல்

இந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது,  8 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 விருதுகளை வென்றது. இந்த படத்தில் அட்டிகஸ் ஃபின்ச் என்ற கதாபாத்திரத்தில் நடித்த க்ரெகொரி பெக் என்பவருக்கு,  லீ தனது தந்தையின் பாக்கெட் கடிகாரத்தை பரிசாக கொடுத்தார்.  இதுவரை ஒரு நாவல் படமாக்கப்பட்டு இவ்வளவு சிறப்பாக இருந்ததே இல்லை என்று சிலாகித்துக் கொள்வாராம் . அந்த கடிகாரத்தை அணிந்து கொண்டுதான் க்ரெகொரி பெக்  சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார்.

நன் கதாபாத்திரங்களை காலத்துக்கும் மறக்க முடியாதவாறு உருவாக்கிய இவர்,  நிஜ வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்டவர். நேர்காணல்களை பெரிதாக விரும்பாத இவர்,  ஒரு கட்டத்தில் அவற்றை முற்றிலும் தவிர்த்து விட்டார்.  பல உயரிய அமைப்புகள் இவருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வாரி வழங்க,  இவர் தனிமையையே விரும்பினார். ஊடக வெளிச்சத்தில் இருந்து தள்ளி இருக்கவே விரும்பிய இவர் எப்படி இருப்பார் என்பது கூட பலருக்கு தெரியாது.

“டு கில் அ மாக்கிங் பர்ட்” புத்தகத்திற்கு பின் வேறொரு புத்தகம் எழுத மாட்டாரா என்று காத்துக் கிடந்த இவரது பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு 2015-ல்  வந்தது பேரின்ப அதிர்ச்சி. லீயே மறந்து போயிருந்த “கோ செட் அ வாட்ச்மேன்” என்ற அவரின் முதல் புத்தகத்தை அவரது வழக்கறிஞர் கண்டெடுத்தார். புத்தக கதைகள் எல்லாம் இரவு முழுவதும்  திறந்திருந்து வாசகர்களின் தேவைகளை பூர்த்தி செய்தனர்.

“கோ செட் அ வாட்ச் மான்” நாவலின் கதை  20 வருடங்கள் கழித்து நடப்பது போன்ற கதை. நியீயார்க்கில் படித்து விட்டு திரும்பும் ஸ்கௌட்டுக்கு தன் சொந்த ஊரில் ஏற்படும் அனுபவங்களாக எழுதப்பட்டிருந்தது.

ஒரே ஒரு புத்தகம் மறக்க முடியாத சில கதாபாத்திரங்கள் காலத்துக்கும் அழியாத இவரது எழுத்து இவரை உலகின் தலைச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக அறிய செய்தது. வளரும் எழுத்தாளர்களுக்கு லீயிடம் கற்க வேண்டிய பாடங்கள் பல உண்டு. தனக்கு தெரிந்த விஷயங்களை எந்த ஒரு மேல் பூச்சும் இல்லாமல் எதார்த்தமாக கொண்டு செல்வதில் தான் இருக்கிறது அழகே. மிகவும் சர்சைக்குரிய விஷயமான இன பாகுபாடை கூட தனக்கே உரிய  லேசான நகைச்சுவையுடன் கொண்டு செல்வார் ஹார்பர் லீ. ஒரு குழந்தைக்குரிய மனதின் வழியே  பெரியவர்களின் உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த புத்தகம் பல பல்கலைகழகங்களிலும் பள்ளி பாட த்திட்டங்களிலும் இடம் பெற்றுள்ளது.

இவர்  பிப்ரவரி 19 தனது மன்ரோவில் வீட்டில் தூக்கத்திலேயே இயற்கை எய்தினார். உலகம் இவரையும் இவரது எழுத்தையும் இன்னும் பல ஆண்டு காலம் மறக்காது என்பதும் மட்டும் உறுதி.

-ஐ.மா.கிருத்திகா

(மாணவப் பத்திரிகையாளர்)