Published:Updated:

'நான் கொலை செய்துவிட்டேன்...!'

'நான் கொலை செய்துவிட்டேன்...!'
'நான் கொலை செய்துவிட்டேன்...!'

'நான் கொலை செய்துவிட்டேன்...!'

'நான் கொலை செய்துவிட்டேன்...!'

ரவு, 9.45. கிண்டி ரயில் நிலையம். வாட்ஸ் அப்பில் டைப் செய்துகொண்டே வந்தபோது சட்டென எதையோ மிதித்துவிட்டேன். கால்களை எடுத்துவிட்டு நகர்ந்து டைப் செய்துகொண்டே இருந்தேன். மெசேஜ் அனுப்பிய பின்புதான் எதை மிதித்தேன் என்று திரும்பி பார்த்தேன். அது ஒரு உடல் ஊனமுற்ற மனிதரின் உடல். நான் மட்டுமல்ல, அங்கே நடந்து சென்றவர்கள் நிறைய பேர், அந்த உடலை தாண்டியும், தடுக்கியும், நகர்ந்தும், நகர்த்தியும் சென்றனர்.

உயிர் இருக்கிறதா, இல்லையா என்றுகூட தெரியவில்லை. நான் மிதித்தும் எந்த ஒரு அசைவும் இல்லை. என்ன மனிதம்...? கேவலம் ஒரு செல்ஃபோனுக்கு அடிமையாகிவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை. அருகில் சென்று பார்த்தேன். மூச்சு இருந்தது, உயிர் இருந்தது, கால்கள் செயலிழந்த அந்த உடல் நகர்வதற்கு நான்கு சக்கரங்கள் பொருந்திய ஒரு பலகை இருந்தது. அதன்மேல் 10 ரூபாய் நோட்டுகளும், சில்லரைகளும் சிதறிக்கிடந்தன. அந்த உடலில் உணர்வு இல்லை. மயங்கிய நிலையில் இருந்தது. பசியினாலா, நோயினாலா என்று தெரியவில்லை.

'நான் கொலை செய்துவிட்டேன்...!'

அது வெறும் உடலல்ல, அவர் ஒரு மனிதர். என்னைப்போலவே உயிருள்ள, பசியுள்ள ஒரு மனிதர். இவரை ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போடலாம், லைக் கிடைக்கும் என்று எச்சத்தனமாக எண்ணிய என் மூளையின் ஆணைக்கிணங்க என் மொபைலை எடுத்து அந்த மனிதரை ஒரு படம் எடுத்தேன். அவர் இறந்தால் என்ன... பிழைத்தால் என்ன? எப்படியோ எனக்கு லைக் வந்தால் சரி என்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்து படிகளில் ஏறினேன்.

பணம் காப்பாற்றி விடுமாம்:

இரண்டு படிகள் ஏறுவதற்குள், அந்த மனிதர் மயங்கி இருந்த இடத்திலிருந்து சத்தம் வந்தது. 'பணத்தை எடுத்துட்டு ஓடறான் பாரு' என்று கூச்சலிட்டனர். கீழே சென்று பார்த்தேன். அந்த சக்கர பலகையின் மேல் இருந்த பத்து ரூபாய் நோட்டுகள் ஒன்றுகூட இல்லை. எவனோ எடுத்து ஓடிவிட்டான். அதையும் படமெடுத்தேன். சுற்றி இருக்கும் ஒருவருக்கும், இது ஒரு பொருட்டாக தெரியவில்லை. மனிதர்கள் ஓடிக்கொண்டே இருந்தனர். நாளை, நான் இப்படி மயங்கிக் கிடந்தாலோ, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாலோ, இந்த மனிதர்கள் இப்படிதான் என்னைத் தாண்டிச் செல்வார்களா? என்னிடம் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுவார்களா?

ஏதோ ஒரு பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. ஓரமாக நின்று மொபைலில் வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். இன்னும் நிறைய பேர், அந்த உடலை தாண்டியும், தடுக்கியும், நகர்ந்தும், நகர்த்தியும் சென்றனர். சிலர் பணம் போட்டுவிட்டு சென்றனர். பணம் அந்த உயிரைக் காப்பாற்றி விடுமாம். அதிலும், ஒரு பெண் நான் வீடியோ எடுப்பதை பார்த்து, திரும்ப வந்து பணம் போட்டுவிட்டு சென்றார். ஆனால் அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

நமக்கு நடக்கும்வரை எல்லமே செய்திதான்

காட்டில் ஒரு யானை அடிபட்டால்,  நகர முடியாமல் கிடந்தால், மற்ற யானைகள் அதனை சுற்றி நின்றுகொண்டு பிளறிக்கொண்டே இருக்கும். அவற்றால் அந்த யானைக்கு உதவ முடியாது. இருந்தாலும், அவை பிரிந்து செல்லாது. அந்த யானை இறந்த பின்புதான், எதுவும் செய்ய இயலாமல் நகர்ந்து செல்லும். அவை காட்டு விலங்குகள்- ஆபத்தானவை.

இந்த மனிதர்கள் பாதுகாப்பானவர்கள். நான் வெளியூரிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவன். இங்கு உள்ளவர்கள் பலர் பிழைக்க வந்தவர்கள்தான். பணத்திற்காக வந்தவர்கள். வாழ்வதற்காக வாழ்க்கையை தொலைக்க வந்தவர்கள். நாளை நமக்கும் இந்த நிலைமை வரலாம். நமக்கு நடக்கும்வரை எல்லமே நமக்கு செய்திதான். உயிரிழப்பும் செய்திதான், பலாத்காரமும் செய்திதான்.

'வெள்ளம் வந்தபோது சென்னை மக்கள் ஓடோடி உதவினர்' என்று கிராமத்தில் இருக்கும் என் மாமாவிடம் பெருமையாகக் கூறினேன். "அட முட்டாப்பயலே, ஒரு மனுஷனுக்கு கஷ்டம்னா, இன்னொரு

'நான் கொலை செய்துவிட்டேன்...!'

மனுஷந்தான்டா உதவணும், இதுல என்னடா பெருமை வேண்டிகிடக்கு?" என்றார். நமக்கு நாமே உதவதுகூட இன்று மிகப்பெரிய அரசியல். வீடியோவை நிறுத்திவிட்டு நகர்ந்தேன்.

'சீக்கிரம் வாடா, படம் போட்ருவாங்க' என்று ஒரு இளைஞர் கூட்டம் என்னை இடித்துவிட்டுச் சென்றது. ஒரு டிக்கட் 150 ரூபாய். அந்த பணத்தில், மயங்கிக்கிடந்த அந்த மனிதர் மூன்று நாட்கள் உயிர் வாழலாம். தலைவரோட ஃபர்ஸ்ட் ஷோ பாத்தே ஆகணும் என்ற வெறியில், தியேட்டர் வாட்ச்மேனை கீழேதள்ளி, நசுக்கி, மிதித்துக் கொன்று, அலையாக தியேட்டருக்குள் கத்திக்கொண்டிருந்த சம்பவம், தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஒரு உயிரைவிட படம் அவ்வளவு முக்கியமா? நாளை நான் அப்படி நெரிசலில் சிக்கினால்? என் பயம் இன்னும் அதிகமாகியது.

வெளியே வர படிக்கட்டில் இறங்கிகொண்டிருந்தேன். அங்கே கூச்சல். என்னவென்று பார்த்தால், மதுபானக்கடையில் குடிகாரர்களின் கூட்டம். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. ஒரு குவாட்டரின் விலை எப்படியும் 100 ரூபாய்க்கு மேல்தான் இருக்கும். நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கப்போகும் அந்த விஷத்தை குடிக்கும் காசில், மயங்கிக்கிடந்த மனிதர், இரண்டு நாள் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருப்பார். அதுபற்றி நமக்கு கவலை இல்லை, நமக்கு போதைதான் முக்கியம்.

காஸ்ட்லி பைக், கூலிங் கிளாஸ், காஸ்ட்லி மொபைல், மொபைல் ரீசார்ஜ், ஷாப்பிங், பார்ட்டி, சிகரெட் பாக்கெட்... இப்படி அதிமுக்கியமான அனைத்து விஷயங்களுக்கும், நமக்கு பணம் தேவை. அந்த பணத்தில் இருந்து ஒரு பத்து ரூபாய் பசிக்காக பிச்சைக்காரர்களுக்கு போட்டால், நமக்கு பற்றாக்குறை ஆகிவிடுமே...

வீட்டிற்கு வந்து இதை எழுதினேன். இதை எழுதி நான் எதையும் கிழித்துவிடப் போவதில்லை, இதை படித்துவிட்டு நீங்களும் எதையும் கிழிக்கப்போவதில்லை. அந்த இடத்தில் இருந்து, அவரை காப்பாற்றாமல் நகர்ந்து வந்த போதே, நான் அவரை கொலை செய்துவிட்டேன். என் மனிதத்தையும், இரக்கத்தையும் கொலை செய்துவிட்டேன்.

நாளையும் அந்த மனிதர்களை கண்டுகொள்ளாமல்தான் செல்லப் போகிறோம். நமக்குள் இருக்கும் மனிதத்தை கொலை செய்யத்தான் போகிறோம்.

மீண்டும் சொல்கிறேன், நாளை நமக்கும் இப்படித்தான் நடக்கும்.

- சுரேஷ் ( தாம்பரம்)

அடுத்த கட்டுரைக்கு