Published:Updated:

தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?

Vikatan Correspondent
தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?
தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?

சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீண்டு வருவதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி கே. நிரோஷாவின் தற்கொலை மேலும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?

மாறிவரும் நம் சமூகச் சூழலில் தற்கொலை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது . நவீன வாழ்க்கை தரும் வேதனைகள்,துயரங்கள்,உறவுச் சிக்கல்கள், தனிமை ,தான் தேடியது கிடைக்கப் பெறாமல் போகும் நிலை தான் ஒருவனை தற்கொலையை நோக்கி இழுத்துச் செல்கிறது . பல கேள்விகள் நமக்குள் எழுகிறது. உண்மையில் எந்த ஒன்று ஒருவனை தற்கொலை செய்ய வைக்கிறது ?அவன் தேடிய வாழ்க்கை கிடைக்கப் பெறாமல் போனதாலா ? இல்லை இந்த வாழ்க்கையின் மீதான சலிப்பும், வெறுப்புமா ? காதல் நிறைவேறாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஒருவேளை அவன் காதலை தவிர்த்து வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை என்று நினைத்திருப்பானா ?கடன் தொல்லை, மற்ற சம கால வாழ்க்கை நெருக்கடிகளும் ஒருவனை தற்கொலை நோக்கி இழுத்து செல்கிறது . தற்கொலை செய்து கொள்ள நினைப்பவனை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?  தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதை பற்றி யாரிடமாவது அவனால் சொல்ல முடியுமா ? அப்படி சொல்ல முடியாத பட்சத்தில் தற்கொலை எங்கிருந்து உருவாகிறது .தற்கொலை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றா ?இல்லை தற்கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய நொடியில் எடுக்கப்படும் முடிவா ? தற்கொலை செய்து கொள்ள போகிறவனின் மனநிலை என்ன மாதிரியாக இருக்கும் . நிச்சயமாக அவனின் இதயம் மௌனங்களால் நிரம்பியிருக்கும் .அந்த மௌனம் தான் தற்கொலையின் ஆரம்பப் புள்ளியாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. தற்கொலை செய்யப் போகிறவனின் மனநிலையை  அழகாகப் படம் பிடித்திருக்கிறது லூயி மால் இயக்கத்தில் வெளியான ஃபயர் வித் இன் ( fire within) என்ற பிரெஞ்ச் திரைப்படம். படத்தின் கதையைப் பார்ப்போம்.

தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?

தான் தேடிய வாழ்க்கை கிடைக்காமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆலன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறான்.. நண்பர்கள், காதலி கூட அவனுக்கு இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையின் மீது எந்தப் பிடிப்பும் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை.தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று முடிவு செய்த பின்னும் அவனால் முடிவெடுத்த உடனே தற்கொலை செய்து கொள்ள முடிவதில்லை . நண்பர்களை,நேசித்தவர்களை சந்திக்கச் செல்கிறான் .அவர்களைச் சந்தித்தால் மனம் மாறலாம் என்று நினைக்கிறான்.  தன் நண்பர்கள், உறவுகள் வழியாக வாழ்வில் மறுபடியும் ஒரு பிடிப்பு ஏற்படும் என்று நினைக்கிறான் .ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது .யாருக்குமே அவனிடம் அன்பாக பேசுவதற்கோ ,அவனின் பிரச்னையை தெரிந்துகொள்வதற்கோ நேரமில்லை. இறுதியில் ஆலன் தற்கொலை செய்து கொள்வதோடு படம் நிறைவடைகிறது .

ஆலன் தற்கொலை செய்துகொள்ளப் போகும் முன்பு அவனின் மனநிலையை விவரிப்பதாக இருக்கிறது அவன் அங்கங்கே எழுதி வைத்த  குறிப்புகள்

பழைய நண்பர்களைச் சந்தித்தேன். காதலைப்போல எந்தப் பயனும் இல்லை. மிலன்கூட இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாள். எல்லோருமே போலித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சாகப்போகிறேன் என்றுகூட அவர்களிடம் சொன்னேன். யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆறுதலான நம்பிக்கை தருகிற ஒரு வார்த்தையும் என் காதில் விழவேயில்லை.
 துபார்க் கூட ரொம்ப மாறிவிட்டான். வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அவன் எனக்குத்தான் மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்களே என்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை கேலி செய்கிறான்.

சும்மா ஒரு பேச்சுக்கு துபார்க்கிடம் இரவில் என்ன செய்வாய் என்று கேட்டுவிட்டேன். அவன் இரவில் தூங்காமல் எழுத்து வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவன். இப்போதும் அப்படியா என்று அறிவதற்காக கேட்டேன்.அவனோ நான் என் மனைவியுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுவேன். மனைவியுடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு வினாடியையும் கவிதையைப்போல என்னிடம் ஒப்புவித்தான். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றான்.

தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?இவர்களிடம் ஒரு பூச்சியைப்போல உணர்கிறேன் நான். யாருடனாவது பேசினாலே சில நிமிடங்களில் ஒரு பூச்சியைப் போல உணர ஆரம்பித்து விடுகிறேன். ஒரு மனிதனாக என்னால் உணர முடியவில்லை. சுற்றியிருப்பவர்கள் நண்பர்கள் என்னை நரகத்தில் தள்ளுகிறார்கள். நான் சாகப்போகிறேன் என்று நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நாங்கள் மகிழ்ச்சியுடன் மனைவியுடன் படுத்துக்கிடக்கிறேன் என்கிறார்கள்.

இழிவு. இழிவு. போதும் . நான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று சொன்னேன். அதையும் யாரும் நம்பவில்லை. போலியானவர்கள், சுயநலமானவர்கள் ஒரு பூச்சியைப்போல என்னால் இந்த வாழ்க்கையை இனிமேலும் எதற்காக வாழ வேண்டும்?...
போதும்.போதும்…

என்னை மன்னித்துவிடு. ஈலா, நீ உன் நிலையைச் சொன்னபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னால் உனக்கு உதவ முடியவில்லை. என்னை மன்னித்துவிடு. நான் போகிறேன். கடவுளைத்தேடிப் போகிறேன்.நீங்கள் யாரும் என்னை நேசிக்காததால், நானும் உங்களை நேசிக்காததால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் .நம்முடைய உறவுகள் பிணைப்பில்லாமல் போலித்தனமாக இருந்ததால் நம்முடைய உறவுகளைக் கெட்டியாகப் பிணைக்கவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் .உங்கள் எல்லோரின் மீதும் நீங்கள் வெட்கப்படும்படியாக அழிக்கமுடியாத ஒரு கறையை விட்டுச் செல்வேன்

இந்தக் குறிப்பிலிருந்தே ஆலனின் தற்கொலைக்கான மன நிலையை நாம் கண்டுகொள்ளலாம் . ஆலனுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தாலும் அதற்கான பிடிப்பை அவனைச் சுற்றியிருக்கும் யாருமே அவனுக்குத் தரவில்லை என்பதே ஆலன் தற்கொலை செய்துகொள்ள முக்கிய காரணமாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் நட்பும் ,காதலும், மற்ற உறவுகளும் ,அவனுக்கு ஒரு நிராதரவான நிலையைத் தான் கொடுக்கிறது . தன் பிடிப்பில்லாத வாழ்க்கை , வெறுமை,யாருமற்ற தனிமை ,இறுதியாக  உறவுகள், நண்பர்களின் மீதான  நம்பிக்கை பயனற்றுப் போகும் போது தான் தற்கொலை என்ற தீர்க்கமான முடிவுக்கு செல்கிறான் ஆலன்  .
 
நம்மைச் சுற்றியிருப்பவர்கள் யாராவது தற்கொலை செய்து கொள்ளும் போது நாமும் ஏதாவது ஒரு வகையில் பொறுப்பாளியாகிறோம் என்பதை இந்தப் படம் ஆழமாக நமக்கு உணர்த்துகிறது . முடிந்தவரை எல்லோரும் எல்லோருடனும் அன்பாக , நட்புடன் இருப்போம் . தவறுகளை மன்னிப்போம், தற்கொலையைத் தடுப்போம்

-சக்திவேல்-