என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

''நானும் விகடனும்!''

இந்த வாரம் : சந்தானம்ம.கா.செந்தில்குமார்படம் : என்.விவேக்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''சென்னை வண்ணா ரப்பேட்டையில் இருக்கும் மகாராணி தியேட்டர் பின்னாடிதான் எங்க மாமா வீடு.  ஒவ்வொரு சம்மர் லீவுக்கும் அங்கேதான் டேரா போடுவோம். மாமா வுக்கு பிரின்ட்டிங் பிரஸ்ல வேலை. மாமா வீட்டுக்கு எதிர் வீட்ல ஒரு தெலுங்குக் குடும்பம் குடி இருந்தாங்க. நல்லாவே தமிழ் பேசுவாங்க, வாசிப்பாங்க. அந்த வீட்ல ஒரு பொண்ணு இருந்தாங்க.

மாமா என்னைக் கூப்பிட்டு, 'சந்தானம்... இந்தப் புத்தகத்தை அந்த அக்காகிட்ட நான் கொடுத்தேன்னு சொல்லிக் கொடுத்துட்டு வாடா’ன்னாரு. புக்கை எடுத்துட்டுப் போனேன். வீட்டு வாசல்ல பொண்ணோட அப்பா, ஈஸி சேர்ல கம்பீரமா உட்கார்ந்து இருந்தார். 'என்ன டா’ன்னு அதட்டுற மாதிரி கேட்டாரு. 'எங்க மாமா, இந்தப் புத்தகத்தை அக்கா கிட்ட கொடுக்கச் சொல்லி அனுப்பி னாரு’ன்னேன். 'கொடு பாப்போம்’னு வாங்கிப் புரட்ட ஆரம்பிச்சார். நான் விபரீதம் புரியாம, 'சார்... மறக்காம அக்காகிட்ட கொடுத்துருங்க’ன்னு சொன்னேன். 'போடா போடா... எனக்குத் தெரியும்’னு துரத்திட்டாரு.

''நானும் விகடனும்!''

நான் விளையாடப் போயிட்டேன். சாயங்காலம் வீட்டுக்கு வந்து பாத்தா, எங்க மாமா வீட்டுக்கும் எதிர் வீட்டு ஈஸி சேர் பார்ட்டிக்கும் பயங்கர சண்டை. வீடே ரெண்டுபட்டுக் கிடக்குது. கட்டிப் புரள்றாங்க. சண்டை ஒரு மாதிரி ஓய்ஞ்ச பிறகு, மாமா என்னைக் கூப்பிட்டாரு. 'டேய், புத்தகத்தை உன்னை அந்த அக்காகிட்டதான கொடுக்கச் சொன்னேன். நீ ஏன்டா அவ அப்பன்கிட்ட கொடுத்தே?’னு சொல்லிப் பிரிச்சு எடுத்துட்டாரு. நானும் விவரம் புரியாம, 'படிக்கிற புத்தகத்தை யார்கிட்ட கொடுத்தா என்ன மாமா?’ன்னேன்.அந்தப் புத்தகத்துக்கு நடுவுல லவ் லெட்டர் வெச்சுக் கொடுத்த விஷயமும், அக்காவை கரெக்ட் பண்ணி ஆந்திரா மீல்ஸ்சாப்பிட லாம்னு மாமா பிளான் பண்ணினதும், எனக்குப் பின்னாடிதான் தெரிஞ்சது. அப்ப நான் அடி வாங்கி லோல்படக் காரணமா இருந்தது... அந்த புத்தகத்தோட பேர்லாம் அப்ப எனக்குத் தெரியாது. ஆனா, கண்ணாடி போட்டுக்கிட்டு பார்த்ததும் சிரிப்பு வர்ற மாதிரி இருந்த அந்த தாத்தா சிம்பல் மட்டும் மனசுல அப்படியே பதிஞ்சிடுச்சு. அப்படித்தான் 'விகடன்’ எனக்கு அறிமுகம்!  

'விகடன்ல சிறுகதை, தொடர்கதை படிப்பேன். வாசகர் கடிதம் எழுதியிருக்கேன்’னுலாம் நான் சொன்னா... நிச்சயம் அது பொய். இடைப்பட்ட காலங்கள்ல விகடனுடன் பெரிய அளவில் நெருக்கம்னு சொல்ல முடியாது. அப்பப்போ ஜோக்ஸ் படிப்பேன். படம் பார்ப்பேன். அவ்வளவுதான்.

விஜய் டி.வி-யில் லொள்ளு சபா பண்ணிட்டு இருக்கும்போது, 'நிச்சயம் இவன் நல்லா வருவான்’னு என்னைப்பத்தி முதல் முறையா விகடன்ல நல்ல விதமா எழுதி இருந்தாங்க. எல்லாரும் ஜெயிச்ச பிறகுதான், பாராட்டுவாங்க. ஆனா, நான் ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே, என்னைப்பத்திய விகடனின் நம்பிக்கை வார்த்தைகள் எனக்குப் பெரிய உற்சாகமா இருந்தது!

'மன்மதன்’ படம் வெளியான சமயம். விகடன் விமர்சனத்தில், 'சந்தானம் என்ற காமெடியன், புது டிரெண்டோடு வந்திருக்கும் இளைஞர். இவரை கோடம்பாக்கம், சிவப்புக் கம்பளம் விரித்து வர வேற்கிறது’ன்னு எழுதி இருந்தாங்க. ஆனால், அப்படி யாரும் என்னை சிவப்புக் கம்பளம் விரிச்சு வரவேற்கலை. அந்தப் படத்துக்கு அப்புறம் ரொம்ப சிரமப்பட்டுதான் பட வாய்ப்புகள் கிடைச்சுது. ஆனா, விகடன் அப்ப எழுதின விஷயங்கள் இப்ப வரிசையா நடந்துட்டு இருக்கு. இப்போ, உண்மையி லேயே கோடம்பாக்கத்தில் எனக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு. 'தீர்க்க தரிசனம்’னு சொல்வாங்களே... அது விகடன் ஸ்பெஷல்!

நான் நடிச்ச படங்கள் ரிலீஸ் ஆனதும், 'எப்புடி மச்சான் இருந்துச்சு?’னு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட விசாரிப்பேன். 'சரியில்லையே மச்சி! கலக்கியிருக்கடா... இந்த பஞ்ச்சைத் தூக்கி அங்க போட்டு இருக்கலாம்டா!’னு நிஜ விமர்சனம் அவங்கதான் சொல்வாங்க. பிறகு, விகடன் விமர்சனத்தைப் படிக் கும்போதுதான், அது என் நண்பர்கள் விமர்சனத் துடன் சிங்க் ஆகி இருப்பது தெரிஞ்சது. ஆக, விகடன் விமர்சனத்தை என் நண்பனின் விமர்சன மாத்தான் எடுத்துப்பேன். 'பழைய சோறுக்குத் துவையல் மாதிரி’னு ஒருமுறை எழுதி இருந்தாங்க. 'ரசத்துக்குக் கருவாடு மாதிரி... வெயிலுக்கு வேர்க்குரு பவுடர் மாதிரி... அதுக்கு இதுமாதிரி’ன்னு என் ஸ்டைலில் வரும் கலாய்க்கிற மாதிரியான விமர்சனம் ரொம்பப் பிடிக்கும்.

அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்லயும் விகடன் மார்க் புகுந்து புறப்படும். தொடர்ந்து பல டேக்கு கள் வாங்கும் ஹீரோக்களை, 'என்னப்பா... நீ மார்க் ரொம்பக் கம்மியா எடுப்ப போல?’ன்னு கலாய்ப்பேன். 'இப்படியே போச்சுன்னா, ஜஸ்ட் பாஸ் மார்க்கூட வராது பாத்துக்கோ’ம்பேன். அதேபோல, 'இதுக்கு கண்டிப்பா 42 வந்துடும்பா. கவலைப்படாதே’ன்னு சமயங்களில் ஆறுதலும் சொல்வேன்.

இப்போ விகடன்ல நான் விரும்பிப் படிக்கிறது 'பொக்கிஷம்’. தங்கவேல் அண்ணன் ஃபீல்ட் அவுட் ஆகி டிராமா போட்டுட்டு இருக்கும்போது எடுத்த பழைய பேட்டிகள் அப்பப்ப வரும். அதைப் படிக்கும்போது, 'அவ்வளவு பெரிய ஜாம்பவான்களே படம் இல்லாம வீட்ல இருந்திருக்காங்களே’ன்னு சின்ன பயம் வரும். 'ஒழுங்கா நடிக்கணும். சின்ன படம், பெரிய படம்னு எந்தப் பாகுபாடும் இல்லாம ஒரே உழைப்பைத் தரணும். பந்தா இல்லாம எப்பவும் இயல்பா இருக்கணும்’னு  ஏகப்பட்ட விஷயங்கள் மனதில் ஓடும்.

விகடன் நிறுவனம் தயாரிச்ச, 'சிவா மனசுல சக்தி’ படம் என் கேரியருக்கு செம பூஸ்ட் கொடுத்த படம். வெளியான முதல் ஷோவில் இருந்தே படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். ஆனா, விகடன் விமர்சனத்தில் நான் எதிர்பார்த்த ஃபீல் இல்லை. அப்ப, 'என்ன சார், நம்ம படத்துக்குக்கூட இவ்வளவுதான் மார்க் போட்டு இருக்காங்க. விமர்சனமும் 'ஓ.கே.’ டைப்லதான் இருக்குன்னு விகடன் எம்.டி. சீனிவாசன் சார்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர், 'படம் வேற... பத்திரிகை வேற’ன்னு சிரிச்சுட்டே சொன்னார். அந்த உண்மை, நேர்மைதான் விகடன் ப்ளஸ்!

2010 விகடன் விருதுகளில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காக எனக்குச் 'சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருது கொடுத்தது விகடன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 'பாஸ்’ பட சக்சஸுக்குப் பிறகு, விகடனில் 'வந்தேன்டா நண்பேன்டா’ என்ற பெயரில் வெளிவந்த என் அனுபவக் கட்டுரைகள் பெரிய ரீச்.

'பாத்தேன் மச்சி. அந்த விஷயத்தைச் சொல்லியிருக்க’ன்னு ஒவ்வொரு வாரமும் அந்தத் தொடரைப் படிச்சிட்டு ஆர்யா, சிம்பு, 'ஜெயம்’ ரவின்னு ஏகப்பட்ட வாழ்த்து குவியும். அதே சமயம், விஷால்போல நிறைய ஹீரோஸ், 'ஏன்டா என்னைப்பத்தி ஒண்ணுமே சொல்லலை. நான் உனக்கு நண்பன் இல்லையா’ன்னு உரிமையோடு திட்டுவாங்க. ஷொட்டு, திட்டு... ரெண்டும் கிடைச்சது அந்தத் தொடர் மூலமா! ஆனா, அவ்வளவு அங்கீகாரம், மரியாதை கொடுத்த தொடரை, ஆரம்பத்துல பிளான் பண்ண அளவு தொடர்ந்து எழுத முடியாம சீக்கிரமே முடிச்சுக்கிட்டேன். அந்த அளவுக்கு ஏகப் பட்ட கமிட்மென்ட்ஸ்ல மாட்டிக்கிட்டேன். என் பள்ளி, கல்லூரி கலாட்டாக்கள், ஷூட்டிங் அனுபவங்கள், பொழிச்சலூர் வாழ்க்கைன்னு யோசிச்சு வெச்சிருந்த ஏகப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியலை. இதனால் விகடனுக்கு என் மீது வருத்தம்கூட இருக்கலாம். ஆனால், தொடரை நிறுத்திய இரண்டொரு வாரங்களிலேயே, 'தமிழகத்தின் டாப் டென் மனிதர்களில்’ என்னையும் ஒருவனாகத் தேர்வு செய்திருந்தாங்க.

''நானும் விகடனும்!''

'நீ எங்ககிட்ட எப்படியும் நடந்துக்கோ. ஆனா, உனக்குத் திறமை இருந்தா, அதை நாங்க அங்கீகரிக்கத் தவற மாட்டோம்’னு நிற்கும் விகடனின் விடாப்பிடி நேர்மை என்னை அசரவெச்சது. இப்ப என் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சேகரிச்சுட்டு வர்றேன். கூடிய சீக்கிரமே அந்தத் தொடரை விட்ட இடத்தில் இருந்து தொடர ஆசை. அதுக்கு விகடன் எனக்கு இடம் தரணும்!  

ஒரு சூப்பர் மார்க்கெட்ல, எப்படி சமையல் பொருட்கள், ஸ்டேஷனரின்னு எல்லா விதமான பொருட்களும் இருக்குமோ, அதேபோல் விகடன்ல, அறிவியல், அரசியல், நகைச்சுவை, ஆன்மிகம், பொழுதுபோக்கு, மலரும் நினைவுகள் தரும் பொக்கிஷம்னு எல்லாமும் கலந்து இருக்கும். சூப்பர் மார்க்கெட்போல விகடன் ஒரு சூப்பர் மேகசின்.

விகடனைப்பத்தி எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். வாரா வாரம் அட்டையில் ஹீரோயின்ஸ் படம் போடுறீங்க.  அப்பப்ப ஹீரோக்கள்கூட இடம் பிடிப்பாங்க. ஆனா, என்னை மாதிரி நகைச்சுவை நடிகர்களின் படங்களை எப்பப்பா போடுவீங்க? இந்த ஒரே ஒரு ஜுஜுலிபா வருத்தம்தான் எனக்கு விகடன் மேல!''

''நானும் விகடனும்!''