என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

 - ஒளவையார்

##~##

ரு நாடு எப்போது வளமாக இருக்க முடியும்?

'நாடாக இருந்தாலும் சரி, காடாக இருந்தாலும் சரி, மேடாக இருந்தாலும் சரி, பள்ளமாக இருந்தாலும் சரி, ஒரு நிலத்தில் வாழும் மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படித்தான் இருக்கும் அந்த நிலத்தின் வளம்!’ என்கிறார் ஒளவையார்!

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

வரலாற்றுக் காலம் தொட்டு அழிவுகளைத் தொடர்ச்சியாகச் சந்திக்கும் - பெரிய இயற்கை வளங்கள் ஏதும் இல்லாத ஜப்பான், உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக இன்றும் எப்படித் திகழ முடிகிறது? உலகின் மோசமான அணு உலை விபத்துகளில் ஒன்று புகுஷிமா அணு உலை விபத்து. சுனாமியால் பாதிக்கப்பட்ட நாள் தொடங்கி, ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அபாயகரமான செய்தி அங்கிருந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது; பாலில் அணுக் கதிர் வீச்சு என்பதில் தொடங்கி, கடலில் அணுக் கதிர் வீச்சு என்பது வரை. இவ்வளவையும் பதற்றம் இன்றி ஜப்பானியர்களால் எப்படி எதிர்கொள்ள முடிகிறது? கொடுமையான பூகம்பத்தைச் சந்தித்த இரவு அன்றுகூட மிச்சம் இருந்த சொற்ப ரொட்டித் துண்டுகளைக் கடைகளில் வரிசையில் நின்று தானே பெற்றுச் சென்றார்கள் ஜப்பானியர்கள்? எது அவர்களுக்கு இந்த நிதானத்தைக் கற்றுத் தந்தது?

ஒழுக்கம்!

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

ஊழல் அற்ற நிர்வாகத்தில் உலகுக்கே முன் மாதிரியாக சிங்கப்பூரை மாற்றிய லீ குவான் யூ, அங்கு கடைப்பிடிக்கப்படும் கடுமையான சட்டதிட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது சொன்னார்: ''மக்களுக்கு ஒழுக்கத்தைப் பயிற்றுவிப்பதும் அதை அவர்களுடைய பண்புகளில் ஒன்றாக்குவதும் அரசின் தார்மீகக் கடமை. ஏனென்றால், ஒழுக்கம் இல்லாத இடத்தில் அளிக்கப்படும் சுதந்திரத்தைபோல மிகப் பெரிய கேடு வேறு ஏதும் இல்லை!''

அண்ணா ஹஜாரே இதைத் தெளிவாக உணர்ந்து இருந்தார். ''ஓர் இடத்தில் எப்போது வளர்ச்சிப் பணிகளைத் தொடங்குகிறோமோ, அப்போதே அந்த மக்களிடமும் மாற்றங்களைக் கொண்டுவரவும் தொடங்கிவிட வேண்டும். ஏனென்றால், ஒழுக்கம் இல்லாத ஒரு சமூகத்தின் வளர்ச்சி, அர்த்தமே இல்லாதது'' என்றார்.

சம கால இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளோடு, ஒளவையார், லீ குவான் யூ, ஹஜாரே வின் கருத்துகளைப் பொருத்திப் பார்ப்பது நம்முடைய பிரச்னைகளின் முழுப் பரிமாணத் தையும் நாம் பார்க்க உதவும்.

இந்தியா ஊழல் மலிந்த நாடாகத் திகழ யார் காரணம்? பொதுவாக, நாம் அரசியல்வாதிகளை மட்டும்தான் குற்றம்சாட்டப் பழகி இருக்கிறோம். ஆனால், உண்மை அப்படி மட்டும்தான் இருக்கிறதா? இந்தியாவில் இன்று குற்றம் இல்லாத துறை என்று ஏதாவது ஒன்றை நம்மால் சொல்ல முடியுமா? சமூகத்துக்கு நாங்கள் நல்லதை மட்டுமே தருகிறோம் என்று சொல்லக் கூடிய ஏதாவது ஒரு பிரிவினரை நம்மால் காட்ட முடியுமா?

''மக்கள் ஒவ்வொருவரிடமும் ஒழுக்கம் இல்லாதபோது, சமூகத்தில் மட்டும் எங்கிருந்து வரும் ஒழுக்கம்?'' என்று கேட்டார் ஹஜாரே.

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

அண்ணா ஹஜாரேவிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய நான்காவது விஷயம் இது!

ராலேகான் சித்தி மக்கள், ஒழுக்கத்தோடு அறநெறிகள் சார்ந்து செயல்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார் ஹஜாரே. அங்கு ஒழுக்கம் சார்ந்து அவர் முன்னெடுத்த முக்கியமான மூன்று காரியங்கள்:

1. மது, புகையிலைப் பழக்கத்தைக் கிராமத்தில் இருந்து ஒழித்தது.

2. அரசு தரும் சலுகைகள் தவிர்த்து, வேறு எந்த இலவசத்தையும் எவரிடம் இருந்தும் பெறுவதில்லை என்ற சூழலை உருவாக் கியது.

3. ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளைக் கீழிருந்து மேல் நோக்கி - அதாவது ஒவ்வொரு மனிதனிடத்தில் இருந்தும் - முன்னெடுத்தது!

சுய ஒழுக்கத்துக்காக ராலேகான் சித்தி மக்கள் சத்தியம் எடுத்துக்கொண்டார்கள். சத்தியத்தை மீறியவர்கள், கிராமத்தின் நடுவே மரத்தில் கட்டிவைக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டார்கள்!

இதெல்லாம் தனி நபர் உரிமை இல்லையா; சமூகத்துக்கு அதைத் தடுக்க என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டபோது ஹஜாரே சொன்னார்:

''ஆமாம். எல்லாமே தனி நபர் உரிமைகள்தான். ஆனால், சமூக நலன் பெரிதா, தனி நபர் நலன் பெரிதா எனில், சமூக நலன்தான் பெரிது. சமூக நலனுக்காக நாம் ஒவ்வொருவரும் சில விஷயங்களை விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். 'தியாகம் மனசாந்தியைத் தருகிறது. போகமோ கேட்டைத்தான் தருகிறது’ என்கிறது கீதை.

மதுவில் தொடங்கி, சும்மா வாங்கிக்கொள்வது வரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இலவசம் என்பது கௌரவமான பிச்சைதான். நீங்கள் ஒருவரிடம் எப்போது கை நீட்டுகிறீர் களோ, அப்போதே அவருக்கு எதிராகக் கையை உயர்த்தும் வலுவையும் இழந்துவிடுகிறீர்கள். எனக்கு நியாயமான வருவாய் போதும். அநீதி யான தொகையோ, அடுத்தவரின் மூலம் வரும் ஆதாயமோ வேண்டாம் என்று முடிவெடுக்கத் தொடங்கினால்தான் நமக்கு முன் தவறு செய்யப் பயப்படுவார்கள்.

சாலை ஓரத்தில் மலம் கிடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உபதேசிக்க முயல்வீர்கள். நான் அப்படிச் செய்வது இல்லை. ஒரு துடைப் பத்தையும் வாளித் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு, சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். என்னைப் பொறுத்த அளவில் மலமும் ஒன்று தான்; ஊழலும் ஒன்றுதான். ஆனால், சாலையில் மலம் கழிப்பது தனி மனித உரிமை என்று நீங்கள் கேட்பீர்களா என்ன?''

- அடுத்த இதழில் நிறைவுபெறும்