Published:Updated:

தோழா படத்தின் ஒரிஜினல் தி இன்டச்சபிள்ஸ் - ஓர் அலசல்

Vikatan Correspondent
தோழா படத்தின் ஒரிஜினல் தி இன்டச்சபிள்ஸ் - ஓர் அலசல்
தோழா படத்தின் ஒரிஜினல் தி இன்டச்சபிள்ஸ் - ஓர் அலசல்

இந்த வாழ்வின் மீது நம்பிக்கை இழந்த சில நேரங்களிலும் ,கீழ்த்தரமான எண்ணங்களாலும்,குழப்பமான சிந்தனைகளாலும் மனம் சிறைபிடிக்கப்படும் போதும் ,உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் நாட்களிலும்,கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை, துயரங்களை தனிமை சூழ்ந்த வேளையில் நினைக்கும் போதும் , மிகுந்த நேசத்திற்கு உரியவர்களை பிரிய வேண்டிய சூழலிலும் நம் மனம் கடுமையான வேதனையில் சுழலும் .அந்த நேரத்தில் மனதில் உள்ள துயரங்களை யாரிடமாவது கொட்டித்தீர்த்து விட நினைப்போம் .. அப்போது யாருமே அருகில் இல்லாத நேரங்களில் சில திரைப்படங்கள் அதிலுள்ள வாழ்க்கை மனதிற்கு ஒரு புத்துயிர்ப்பை தரும்.. நம்முடைய எல்லா துயரங்களையும் அந்த திரைப்படத்திலும் அதிலுள்ள வாழ்க்கையிலும் கரைத்து புதுமனிதனாக ஆகிவிடுவோம் ...இந்த மாதிரி மனதிற்குள் ஒரு புதிய உணர்வை சில திரைப்படங்களும் ,சில வாழ்க்கைகளுமே தருகிறது ...அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது ஒலிவியர், எரிக்கின் இயக்கத்தில் உருவான தி இன்டச்சபிள்ஸ் (The Intouchables) என்ற ஃப்ரெஞ்ச் திரைப்படம்.

தோழா படத்தின் ஒரிஜினல் தி இன்டச்சபிள்ஸ் - ஓர் அலசல்

நாம் எவ்வளவு சோர்வான மன நிலையில் பார்த்தாலும்,நம் மனதை உற்சாகப்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்த சில படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தின் ரீமேக் தான் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தோழா. இந்தப் படத்தின் கதை ஒரு நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.

முதலில் இந்தப் படத்துக்கு பின்புலமாக இருந்த நிஜ வாழ்க்கையைப் பார்ப்போம்.. பிலிப்பே ஃபிரான்ஸ் நாட்டில் ராஜ வம்சத்தை சார்ந்தவர்.பெரும் பணக்காரர் . ஒரு விபத்துக்குப் பிறகு அவரின் கழுத்துக்கு கீழே இருக்கும் உடல் பாகங்கள் செயல்படாமல் போய்விடுகிறது. சக்கர நாற்காலியில் தன் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.இந்த விபத்து நடந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு பிலிப்பேவின் மனைவி புற்றுநோயால் இறந்துவிடுகிறார். பணம், சொத்து, சுகம் எல்லாம் இருந்தாலும் பிலிப்பேவை சரியாக கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. இந்த நேரத்தில் பிலிப்பே தன்னை கவனித்துக் கொள்ளும் வேலைக்கு ஒரு நேர்காணலை வைக்கிறார். . அந்த நேர்காணலில் அல்ஜீரியாவிலிருந்து புலம்பெயர்ந்து ஃபிரான்ஸில் வாழ்ந்து வரும் அப்டெல் என்ற இளைஞனும் கலந்து கொள்கிறான். அவன் திருட்டு போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருந்தவன்.

ஃபிரான்ஸில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது .அப்டெல் இந்த மாதிரி பல நேர்காணலில் வேண்டுமென்றே கலந்துகொள்வான். அவன் கலந்து கொள்ளும் நிறுவனத்திடம் நேர்காணலில் வேலைக்கு தேர்வு பெறவில்லை என்ற சான்றிதழை வாங்கிக்கொண்டு அரசாங்கத்திடம் உதவித் தொகையைப் பெற்று வாழ்ந்து வருபவன். இந்த உதவித் தொகைக்காகத் தான் பிலிப்பேவை கவனித்துக்கொள்ளும் வேலைக்கும் விண்ணப்பிக்கிறான். ஆனால் 90 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நேர்காணலில் அப்டெல் மட்டுமே வேலைக்கு தேர்வாகிறான். ஆனால் அப்டெல் வேலை வேண்டாம், எனக்கு நான் வேலைக்கு தகுதி பெறவில்லை என்ற சான்றிதழ் மட்டுமே வேண்டும் என்கிறான். கடைசியில் பிலிப்பேவை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு சம்மதிக்கிறான்.

அப்டெலை வேலைக்கு தேர்வு செய்ததற்கு பிலிப்பே சொல்லும் காரணம் மற்றவர்கள் எல்லோரும் தன்னை முடவனாக, இரக்கமுடன் பார்த்த போது அப்டெல் மட்டுமே என்னை சக மனிதனாக ,பிலிப்பேவாக பார்த்தவன் ,அதனாலேயே அவனை தன்னுடன் வைத்துக்கொண்டேன் என்கிறார் . என்னை கவனித்துக்கொள்ள பயப்படுபவர்களே என்மீது இரக்கம் காட்டுகின்றனர். அது எனக்கு பிடிக்கவில்லை என்கிறார். பிலிப்பே உடனான வாழ்க்கை ,நட்பு அப்டெலை மட்டுமல்ல பிலிப்பேயி ன் வாழ்க்கையையுமே மாற்றுகிறது .அப்டெல் மட்டும் என் வாழ்க்கைக்குள் நுழைய வில்லை என்றால் நான் எப்போதே இறந்து போயிருப்பேன் என்கிறார் பிலிப்பே .அப்டெலும் நானும் இந்த வேலைக்கு வரவில்லை என்றால் இன்றைக்கு சிறையில் இருந்திருப்பேன், இல்லை செத்திருப்பேன் என்கிறான். பிலிப்பேவுக்கு 10 வருடங்கள் அப்டெல் உதவியாளனாக இருந்தான். இப்போது இருவரும் தங்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர்.இந்தக் கதைதான் படமாக உருவாகியிருக்கிறது. 

ஒரு பக்கம் பெரும் பணக்காரனாக. ராஜ வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் உடல் நிலை காரணமாக தன்னந்தனியாக , ,வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் வாழ்ந்து வரும் பிலிப்பே ,பிலிப்பேவும் ஒரு வகையில் சமூகத்தால் தீண்டப்படாத . ஓரங்கட்டப்பட்ட மனிதர் தான் .இன்னொரு பக்கம் திருட்டு ,குற்றத்தில் ஈடுபட்டு ஊதாரித்தனமாக வாழ்ந்துவரும் இளைஞன், ,அவனும் குற்றவாளி போன்ற காரணங்களால் சமூகத்தால் தீண்டப்படாதவன் தான்.இந்த இரண்டு தீண்டத்தகாத மனிதர்களுக்கு இடையேயான நட்பு,நெகிழ்வை. வாழ்க்கை மாற்றத்தை சித்தரிக்கிறது இந்தப் படம் . அதனால் தான் தீண்டதகாதவர்கள் (The Intouchables) என்ற அற்புதமான தலைப்பை படத்தின் கதைக்கு தகுந்த மாதிரி வைத்திருக்கிறார்கள் ...

படத்தில் அப்டெல்லின் பாத்திரம் திரிஸ் என்ற புனைவு கதாபாத்திரமாக மாறுகிறது. பிலிப்பே பாத்திரம் அதே பெயரில் தான் வருகிறது அப்டெல் கதாபாத்திரத்துக்கு கறுப்பினத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஒமர் (Omar Sy) தான் பொறுத்தமானவர் என்று அவரை நடிக்க வைத்திருக்கின்றனர்.அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.பிலிப்பே கதாபாத்திரத்தில் க்ளூஸெட் (François Cluzet) நடித்திருக்கிறார் . சக்கர நாற்காலியில் வாழ்கின்ற மனிதனைப் போல நடிப்பது கடினமானது .அதை வெகு சிறப்பாக செய்திருக்கிறார்.

தோழா படத்தின் ஒரிஜினல் தி இன்டச்சபிள்ஸ் - ஓர் அலசல்

சக்கர நாற்காலியில் வாழ்ந்து வரும் மனிதனைப் பற்றிய கதையை பெரும்பாலும் துயரக் காவியமாகத் தான் படமாக்கியிருக்கிறார்கள் .ஆனால் இந்தப்படம் முழுவதிலும் நாம் சோகத்தையே பார்க்க முடியாது. பிலிப்பேவுக்கும் திரிஸ்ஸுக்கும் இடையேயான முரண்பாடு, அந்த முரண்பாடுகளுக்கு இடையேயான நட்பு நகைச்சுவையாக பரிணமிக்கும் போது படம் முழுவதும் உற்சாகம் பரவுகிறது. அந்த உற்சாகம் நம்மையும் பற்றிக்கொள்கிறது. வெள்ளையரான பிலிப்பேவுக்கும் ,கறுப்பரான திரிஸ்ஸீக்கும் இடையேயான உறவை சித்தரித்த விதம் முக்கியமானது 2011-ல் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலையும் விருதுகளையும் வாரிக்குவித்துள்ளது.

நிஜத்தில் பிலிப்பே என்ற கிறிஸ்துவரின் வாழ்க்கையை மாற்றியவர் அப்டெல் என்ற அல்ஜீரியாவை சேர்ந்த இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது

மனைவியை இழந்து, சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு, பணம் கொட்டிக் கிடந்தாலும், மகிழ்ச்சி இல்லாமல், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து அதை செய்யமுடியாமல் தாங்கமுடியாத வலியுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த பிலிப்பேவுக்கும் , சிறை - திருட்டு என்று ஊதாரித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அப்டெல்லுக்கும் இடையேயான அந்த சந்திப்பு முக்கியமானது .

அப்டெல்லை குற்றவாளியாகவும்,பிலிப்பேவை முடவனாகவும், பரிதாபத்துடனும், இருவரையுமே தீண்டதகாதவர்களாக சமூகம் பார்த்திருந்த போது அப்டெல், பிலிப்பேவை பிலிப்பேவாகவும்,பிலிப்பே அப்டெல்லை அப்டெல்லாகவும் பார்த்திருக்கிறார் .இது தான் முக்கியமானது .இது தான் இருவரின் வாழ்க்கையையுமே மாற்றி அவர்களைப் புத்துயிர்ப்படைய செய்திருக்கிறது . படம் பார்க்கும் நம்மையும் புத்துயிர்ப்படைய வைக்கிறது.

-சக்திவேல்