என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

'ஊற்றுப் பெருக்கால்... உலகூட்டும் பாலாறு!'

##~##

''கொருக்கைகளுக்கு இடையே சுற்றித் திரியும் ஆரல் மீன்களை சட்டை விரித்துப் பிடிக்க, நானும் நண்பன் கிளாரன்ஸும் அலைந்த வெள்ளி மணல் படிந்த பாலாற்றங் கரையில் அமைந்த ஊர் என்னுடைய ஆம்பூர். இன்று மணக்கும் பிரியாணிக்கும் தோல் மற்றும் காலணித் தொழிலுக்கும் புகழ்பெற்ற ஊர்!'' என்று பூரிப்பு பொங்கப் பெருமிதம் பகிர்கிறார் எழுத்தாளர் யாழன் ஆதி.

 ''தகடூர் என்னும்  தருமபுரிக்கு அதியமா னைச் சந்திக்க ஒளவையார் செல்லும்போது,  ஆம்பூர் வழியாகத்தான் செல்வாராம். அப் படிப் போகும்போது இங்கே நடக்கும் மற்போர்களைப் பார்த்துக்கொண்டே போன தன் குறிப்புதான் 'ஆமூர் மல்லன்’ என்று அவருடைய பாடலில் வரும் சொல்லாட்சி.  எல்லாத் திசைகளிலும் மல்லிகைத் தோட்டங்கள். பல குடும்பங்களின் வாழ்வா தாரமே இந்தத் தோட்டங்கள்தான். மல்லிகை மொக்குகளைப் பறித்துப் பெறும் கூலியை வைத்துத்தான், தங்கள் பிள்ளைகளை எங்கள் தாய்மார்கள் அந்தக் காலத்தில் படிக்க வைத் தார்கள். வேர்களோடு அந்தத் தோட்டங்களைப் பெயர்த்து எடுத்துவிட்டு,  கட்டடங்களை இன்று கட்டி இருக்கிறோம். பல தொழிற்சாலைகளை உருவாக்கி இருக்கிறோம். அதற்கு விலையாக காலக் கொடையாக எங்களுக்குக் கிடைத்த பாலாற்றைப் பலி கொடுத்துவிட் டோம்.

என் ஊர்!

'ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக் கால் உலகூட்டும்’ என்று தமிழ் இலக்கியம் பாடிப் பரந்த பாலாறு,  இன்று வாட்டும் வெயிலில் போடப்பட்ட பாம்புச் சட்டைபோலக் காய்ந்துவிட்டது. எங்கள் தொப்பூள் கொடியாக இருந்த அந்த ஆற்றை தொழில் புரட்சியால் கொன்றவர்கள் நாங்கள் தான். ரத்தத்தில் விஷம் ஏற்றிக்கொள்வதைப் போல, தோல் தொழில் கழிவு நீரைக் கலந்து கலந்து, கரும் திரவம் நகர்கின்ற கால்வாயாக 2,000 அடி பாலாற்றை மாற்றிவிட,  ஆற்றில் தண்ணீர் வருவதைப் பார்க்க முடியாமலே பத்தாம் வகுப்பு படித்து முடித்த தலைமுறை மக்கள் தற்போது உள் ளனர். குடிநீரை விலைக்கு வாங்குவது ஆம்பூர் மக்களின் அன்றாடச் செயல். ஆம்பூர் வணிகங்களில் முக்கிய இடம் பிடிக்கும் நீர் வணிகம்.

இந்தியாவின் பல ஊர்களில் இருந்து ஆம்பூர் வழியாகச் செல்பவர்கள் எல்லாம் காத்திருந்து  பிரியாணி சாப்பிட்டுப் போனால்தான், போகிற ஊரில் பதில் சொல்ல முடியும். அப்படி ஒரு சுவை ஆம்பூர் பிரியாணிக்கு. அதற்கும் முக்கியக் காரணம், ஆம்பூர் தண்ணீர்தான்.

என் ஊர்!

தோல் தொழிற்சாலைகள் ஆம்பூரின் பொருளா தார வளத்துக்கு ஆதாரமானவை. இயற்கைப் பொருட்களான கடுக்காய், புங்கம் பட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி, தோலைப் பதப்படுத்தி, அதைப்  பக்குவப்படுத்திய காலம் ஒன்று இருந்தது. சுண்ணாம்புக் குழியில் தோலை ஊறவைத்து மயிர் நீக்கி பதப்படுத்தும் வேலையை எங்கள் முன் னோர் செய்தனர். இடுப்பு வரை ஆழம் இருக்கும் சுண்ணாம்புக் குழியில் இறங்கி ஊறிக்கொண்டு இருக்கும் தோல்களைக் கால்களால் அழுத்துவார்கள். அதனால் அவர்கள் கைகளிலும் கால்களிலும் புண்கள் இருக்கும். நீண்ட பிடிகொண்ட  பித்தளைக் கேட்லிகளில் பிள்ளைகள் எடுத்துச் செல் லும் கேழ்வரகுக் களியினையும் புளி ஊறு காயினையும் சாப்பிட முடியாமல் எரியும். இப்படி வளர்க்கப்பட்ட தோல் தொழில் இன்றைக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட வேதிப் பொருட்களைக்கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. அதனால் நோயுறும் மக்கள் எண்ணிக்கை அதிகம்!

என் ஊர்!

எங்கள் ஊர் பெண்கள் கைப்பிடித்துத்  தைக்கும் காலணிகள்தான் உலகத்தில்  அதிகமான விலைக ளுக்கு விற்கப்படும் காலணிகள். ஆனால், அதற்காக அவர்கள் பெறும் கூலியோ மிகக் குறைவு. சென் னைக்கும்  பெங்களூரூவுக்கும் சரியாக நடுவில் இருப்பதால்,  மக்களின் நாகரிகம் இரண்டு பெரிய நகரங்களின் பாதிப்புகளுடன்தான் எப்போதும் இருக்கும். நகர மக்களுக்கான பண்பாடும் நுகர்வுக் கலாசாரமும் நிறைந்த ஆம்பூரில் பண்பாட்டு அடையாளங்கள் என்று சொன்னால், நாகநாதர் ஆலயமும், பெருமாள் ஆலயமும் பெரிய பெரிய மசூதிகளும் ஆங்கிலேயர் களால் கட்டப்பட்ட ஒரு தேவாலயமும் தான்!''

படங்கள்: ச.வெங்கடேசன்