என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

அண்ணஞ்சார் ஏட்டுப் பள்ளிக்கூடமும் வேலாயுதம் பிள்ளை வாத்தியாரும்!

##~##

ழ.கருப்பையா - எழுத்திலும் பேச்சிலும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் செட்டி நாட்டுச் சிங்கம்! இப்போது சென்னைவாசி ஆகிவிட்டாலும், பிறந்து வளர்ந்த காரைக்குடியின் ஒவ்வோர் அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருப்பவர் பழ.கருப்பையா!  

''ஒரு வீதிக்கும் இன்னொரு வீதிக்கும் இடையே பரந்து கிடக்கும் வீடுகள், இரண்டு வீதிகளை வளைத்துக் கட்டப் பட்ட பங்களாக்கள் என எங்க ஊர் ஓர் அதிசய அடையாளம்.  நிலைக் கதவுகளும் கூரைகளின் மேற்பரப்பும் பர்மா தேக்குகளால் ஆனவை. வெண் சாந்தில் முட்டை கலந்து அரைத்துப் பூசப்பட்ட சுவர்களுக்கு முன்னால் பெண் களின் 'ஃபேர் அண்ட் லவ்லி’ கன்னங்களே தோற்றுப் போய்விடும்.இப்படிப்பட்ட பாரம்பரிய செட்டி நாட்டு பங்களாக்களின் மேங்கோப்புகள் இன்றைக்கு வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் பிரித்து விற்கப்படுவதைப் பார்க்கும்போது, நெஞ்சில் நெருஞ்சி முள் குத்துகிறது!

என் ஊர்!

என் பள்ளிப் பருவம்... பனை ஓலைகளில் எழுதிப் படித்த ஏட்டுப் பள்ளிக்கூடங்களின் அந்திமக் காலம். மகர் நோன்புப் பொட்டலில் இருந்த 'அண்ணஞ்சார் ஏட்டுப் பள்ளிக் கூடமே’ என் அறிவு விருத்திக்கு அணையா விளக்கு ஏற்றிவைத்த இடம். மாணாக்கனை ஆசிரியர் தன் மடியில் அமர்த்திக்கொண்டு தட்சணையாக வழங்கப்பட்ட பழைய ஒரு ரூபாய் வெள்ளிக் காசை அவன் கையில் பிடித்துக்கொள்ளச் சொல்லி எதிரே விரித்து இருக்கும் நெல்லில், 'ஆனா, ஆவன்னா’ என்று எழுதவைத்துக்கொண்டே கற்பிப்பார். அதற்கு உபகாரமாக நல்ல நாள் பெரிய நாளில் அந்த ஆசிரியருக்கு ஒரு படி பச்சரி சியும் ஒரு ரூபாயும் தட்சணையாக வழங்கு வார்கள்.

என் ஊர்!

எனக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார் வேலாயுதம் பிள்ளை மேல்சட்டை அணிந்து நான் பார்த்து இல்லை. திறந்த கருத்த மேனி, முன் தலையில் அரை வட்டமாக முடியை மழித்து இருப்பார். விடிகாலையிலேயே பள்ளி தொடங்கிவிடும். அரைத் தூக்கத்தில் எழுந்து அவசர அவசரமாக கை, கால், முகம் கழுவிக் கொண்டு நெற்றியில் விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டு பள்ளிக்குச் செல்வோம். விபூதி இல்லாத நெற்றிகளில் சாணியை பூசிவிடும்படி வாத்தியார் சொன்னதும் உண்டு. அப்படி செய்ததும் உண்டு. அங்கே ஒழுங்காகப் பாடம் ஒப்பிக்காதவன்- ஒப்பித்தவனை முதுகில் தூக்கிக் கொண்டு தேர்முட்டியைச் சுற்றி வர வேண்டும்.பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பையன்கள், ஏழை வீட்டுப் பையன்களை சுமப்பதுதான் அங்கு நடக்கும் அன்றாட நிகழ்வு.

என்னுடைய படிப்புக் காலம்பற்றிக் குறிக்கத் தக்க நினைவுகள் ஏதும் இல்லை. ஒரே வகுப்பில் நான்கு ஆண்டுகள்கூட நகராமல் இருந்துபடித்து இருக்கிறேன். எங்கள் அப்பச்சி ஒரு வகுப்பில் ஒரு ஆண்டு மட்டுமே படிக்க வேண்டும் என்ப தில் பிடிவாதமாக இருந்ததால், மேல் படிப்பை மூட்டை கட்டிவைத்துவிட்டு எங்களுடைய தொழில் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட் டேன்.

1971-ல் கள்ளுக் கடை திறப்பை எதிர்த்து மறியல் செய்தபோதும் நெருக்கடி நிலையை எதிர்த்தபோதும் சிறைக்குச் செல்ல நேர்ந்தது.  அதைத் தொடர்ந்து பத்துக்கும் மேலான சிறை வாசங்கள். போலீஸார் தடியால் அடித்ததில் இரண்டு மாதம் என் கை செயல் இழந்துகிடந் தது. என்னுடைய பேச்சு கிளர்ச்சியை ஏற்ப டுத்துவதாகக் கூறி நீதிமன்றம் 21 நாட்களுக்கு ஊரைவிட்டு அப்புறப்படுத்திய காலங்களும் உண்டு.

என் ஊர்!

தையற் கடையை 'டெய்லரிங் மார்ட்’ என்றும் மரக் கடையை 'டிம்பர் டிப்போ’ என்றும் எழுதுகிற அறியாமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன். தமிழில் அர்ச் சனை செய்ய வேண்டும் என்பதற்காக, காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் வாசலில் மறியல் செய்த நாட்களையும், தமிழ் ஈழத்துக்காக வரிந்து கட்டி நின்ற காலத்தையும் இன்றைக்கும் நான் நினைத்துப் பார்ப்பது உண்டு. காரைக்குடி குடிநீர் போராட்டத்தில் 19 நாட் கள் உண்ணாவிரதம் இருந்தேன். மீளா மயக்க நிலைக் குள் (கோமா) தள்ளப்படும் விளிம்பில் இருப்பதாக அரசு மருத்துவர் எச்சரித்தாலும், நோக்கம் நிறைவேறிய பிறகே உண்ணாநோன்பு நின்றது. ஒரு பொது நோக்கத் துக்காக ஒருவன் 19 நாட்கள் உண்ணா நோன்பு இருந் தது, மக்களை ஒன்று திரட்டிவிட்டது. என்னைக் காவல் துறை கைது செய்து, மதுரை சிறைக்கு அனுப்பிய போது, ஊர் சீறியது, பேருந்துப் போக்குவரத்து சீர் குலைந்தது. ஊரின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்தது. 'குடிநீர்க் காவலர்’ என்று ஊர் போற்றியது.

ஊரை நான் நேசித்த காலமும் ஊர் என்னை நேசித்த காலமும் எப்போதும் என் வாழ்வில் இனியவை!''

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், வீ.நாகமணி