என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

தேவராட்டத் திருவிழா!

தேவராட்டத் திருவிழா!

##~##

ன்னமும் கட்டபொம்மன் காலத்துப் பழக்க வழக்கங்கள், கலாசாரம், வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுகிறது ஒரு கிராமம்.  தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே இருக்கும் ஜமீன் கோடாங்கிப்பட்டிதான் அந்தக் கிராமம். தேவராட்டத்துக்குப் பெயர் பெற்ற இந்த ஊரில், சித்திரை மாதம் வீட்டுக்கு வீடு 'கலை’ கட்டுகிறது திருவிழா!

திருவிழாவின் முதல் நாள் பட்டக்காரர் எனப்படும் ஊர் நாட்டாமையின் வீட்டில் இருந்து, நெல், கரும்பு, வத்தல், தேங்காய், பழம், கம்மங்கொழுக்கட்டை என எல்லாப் பொருட்களையும் ஓலைப் பெட்டியில் வைத்து எடுத்துப் பெண்கள் அணிவகுத்துச் செல்ல... விசிலடிச் சான் குஞ்சுகளில் ஆரம்பித்து பெருசுகள் வரை தேவ ராட்டம் ஆடியபடி பொருட்களைக் கோயிலில் கொண்டுபோய் சேர்க்கின்றனர். மறுநாள் காலையில் நடைபெறும் பூஜைதான் விசேஷம். ஆண்கள் அனை வரும் சட்டையைக் கழற்றிவிட்டு, தலைப்பாகை அணிந்துகொள்கிறார்கள். பெண்கள் அனைவரும் ரவிக்கை இல்லாமல் மாராப்பு மட்டும் போர்த்திக்கொண்டு, பூஜையில் கலந்துகொள்கிறார்கள்.

தேவராட்டத் திருவிழா!

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நாடகத் துறை பேரா சிரியர் 'கலைமாமணி’ குமாரராமன் பேசும்போது, ''ஊர் நன்மைக்காகவும் வெள்ளாமை விளைச்சல் நல்லா இருக்க வேண்டும் என்றும் கட்டபொம்மன் காலத்தில் இருந்து தலைமுறை, தலைமுறையாக இந்தத் திருவிழாவை நடத்திட்டு வர்றாங்க. பூஜைக்கு எட்டு நாளைக்கு முன்னாடியே ஊர் மக்கள் சுத்தபத்தமா இருப்போம். வயசுக்கு வராத மூணு பெண் குழந்தைகளைக் கூப்பிட்டு, கோயிலுக்கு வெளியில மஞ்சள் பொடியில் கோலம் போட்டு, விளக்குவைத்து வழிபடுவோம். சட்டை, ரவிக்கையைக் கழட்டிட்டு, ஆண்களும், பெண்களும் கோயில்ல இருந்து ரோடு வரைக்கும் வரிசையா நின்னு மூணு தடவை சுத்தி, அஞ்சு தடவை சாஷ்டாங்கமா மண்ணுல விழுந்து கும்பிடுவோம். இதனால் ஜக்கம்மாதேவி மனசு குளிரும். வேண்டிக்கிட்டது நடக்கும்னு ஐதீகம்.  உழவுக்குக் காளை மாட்டைப் பயன்படுத்துறதால, அதோட முன்னங்கால்களை மடக்கி மூணு தடவை மண்டி போடவெச்சு, ஜக்கம்மாகிட்டே ஆசீர்வாதம் வாங்கவைப்போம். மறுநாள் கிடா வெட்டி ஊர் விருந்து கொடுப்போம். அன்னிக்கு இரவு நாலு அடி நீளம் உள்ள மூங்கில் புல்லாங்குழல் வாசிப்போம். அப்புறம் அர்ஜுனன் கதை, ராமர் கதை, ராமர் பட்டாபிஷேகம்னு ஏதாவது ஒரு நாடகம் போட்டு, திருவிழாவை முடிப்போம் வருஷா வருஷம் இந்தப் பூஜை நடக்கும்!'' என்றார்.

பூஜையில் கலந்துகொண்டவர்களில் பலர் வெளியூரில் பெரிய பெரிய வேலைகளில் இருப்பவர்கள். பாரம்பரியத்தை மறக்காமல், பூஜையில் கலந்துகொள்வதில் அவர்களிடையே ஆச்சர்ய ஒற்றுமை!

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்