என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

முக்காலி மந்திரவாதி!

முக்காலி மந்திரவாதி!

##~##

தானே நகர்ந்த முக்காலி... அதை வேடிக்கை பார்க்க பஸ் பிடித்து வந்த கூட்டம்... என ஒரே நாளில் திடீர் பிக்னிக் ஸ்பாட் ஆனது வைரவன்பட்டி!  

 பிள்ளையார்பட்டி அருகே வைரவன்பட்டி யில் இருக்கிறது பூ மலர்ச்சி அம்மன் கோயில். இந்த அம்மன் சிலையை யாரும் இதுவரை பார்த்தது கிடையாது. கருவறைக்கு மேலே பரணில் இருக்கும் ஓர் ஊஞ்சலில் பட்டுத் துணியால் அம்மனை சுற்றி வைத்து இருப்பார் களாம். மகா சிவராத்திரி அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடக்கும். அப்போது, பூசாரி கண் ணைக்கட்டிக்கொண்டு, அம்மனை சிலையைப்  பானைக்குள் வைத்து கீழே கொண்டுவருவார். பூஜைகள் முடிந்ததும், மீண்டும் சிலைக்கு பரண் வாசம்!

கடந்த சிவராத்திரி பூஜை செய்யத் தேடினால், அம்மன் சிலையைக் காணவில்லை. ஊர் முழுக்கப் பரபரப்பு. சிலை குறித்து போலீஸ் கேட்ட கேள்விக்கு ஊர் மக்களால் பதில் சொல்ல முடியவில்லை. 'இனி, போலீஸ் உதவாது’ என்று முடிவெடுத்து, 'முக்காலி மந்திரவாதி’யை அழைத்து வந்தனர். அது செம வேடிக்கை!

முக்காலி மந்திரவாதி!

கோயில் பூசாரி சகாதேவனின் தம்பி மகன் சேகர்.''செலட்டூர்ல இருந்து முக்காலி மந்திரவாதி கணேசனைக் கூட்டிட்டு வந்தோம். 'அஞ்சாயிரம் கொடுங்க. உடனே சிலையைக் கண்டுபிடிச்சுக் கொடுக்குறேன்’னு சொன்னார்.  ராத்திரி ஏதேதோ பூஜை பண்ணி மூணு குச்சியைக் கட்டி, முக்காலி தயார் செஞ்சார். மறுநாள் காலையில ரெண்டு சின்னப் புள்ளைகளை வரச் சொல்லி மந்திரம் சொன்னார். முக்காலி மேல ஏதோ மை தடவி எலுமிச்சம் பழத்தை நறுக்கிவெச்சுட்டு, புள்ளைங்களோட ஆள்காட்டி விரலை முக்காலி மேல வைக்கச்சொன்னார். கையை வெச்சதுமே முக்காலி நகர ஆரம்பிச்சுது. அதைப் பார்த்து நாங்களே மிரண்டுட்டோம்.

வைரவன்பட்டியில கிளம்புன முக்காலி, காடு மேடு கரைன்னு சுத்தி கே.ஆத்தங்குடி வரைக்கும் வந்துருச்சு. அதுக்குள்ள முக்காலி விஷயத்தைக் கேள்விப்பட்டு, பக்கத்து ஊர்க்காரங்க வேன் பிடிச்சு வர ஆரம்பிச்சிட்டாங்க!'' என்று வியக்கிறார்.

கே.ஆத்தங்குடி அம்பலக்காரர் செல்வத்துக்கும் ஆச்சர்யம். ''முக்காலி சுத்தின மாதிரி கொஞ்ச நேரத்துல மந்திரவாதியும் சுத்த ஆரம்பிச்சிட்டாரு. 'என்ன ஆச்சு’ன்னு விசாரிச்சா, 'இதோட 16 குவார்ட்டர் முடிச்சிட்டாரு’ன்னு சொன்னாங்க. 'என்னய்யா இப்புடிக் குடிக்குறே?’னு கேட்டா, 'நானா குடிக்கிறேன்... கருப்புல்ல கேக்குது’ன்னு பதில் சொன்னான். முக்காலிக்கு முன்னாடி போய்ட்டே இருந்தவன், 'பூசாரி வீடு எங்க இருக்கு’ன்னு விசாரிச்சான். கரெக்டா பூசாரி வீட்டு வாசல்ல நின்னுட்டான். முக்காலியும் நின்னுருச்சு. 'இங்கேதான் சிலை இருக்குது’ன்னு கூசாம சொல்லிட்டான். பூசாரி வீட்டுக்காரங்க குலை நடுங்கிப் போய்ட்டாங்க. பூசாரி எவ்வளவு நல்லவர்னு ஊர்ல எல்லாருக்கும் தெரியும். மந்திரவாதி பித்தலாட்டம் பண்றான்னு கண்டுபிடிச்சிட்டோம். 'எத்தனை ஆயிரம் செலவானாலும் நாங்க குடுக்குறோம். நீ பூசாரி வீட்டுல இருந்து சாமி சிலையை எடுத்துக்காட்டு. இல்லை மொட்டை அடிச்சு கரும்புள்ளி, செம்புள்ளி குத்திருவோம்’னு ஊர் பொம்பளைங்க மந்திரவாதிக்கு எதிராத் திரண்டுட்டாங்க. அதுவரைக்கும் ஊரையே மிரட்டிட்டு இருந்தவன், 'ஐயா சாமி... என்னைய விட்டுருங்க. நான் வயித்துப் பொழப்புக்காக உங் களை ஏமாத்திட்டேன்’னு கால்ல விழுந்து கதறி அழுதான். அப்புறம், 'ஊருக்கோ, ஊர் மக்களுக்கோ எவ்வித மாந்திரீகமும் செய்ய மாட்டேன்’னு பால்ல சத்தியம் வாங்கிட்டு ஆளை அனுப்பிட்டோம்!'' என்றார்

முக்காலி மந்திரவாதி!

  ''இனிமே எப்படி சிலையை கண்டுபிடிக்கப் போறீங்க?'' என்று வைரவன்பட்டி பிரசிடென்ட் ஆண்டியப்பனிடம் கேட்டால், ''பூசாரி வீட்டுக்குப் பதிலா, வேறு யாரையாவது மந்திரவாதி காட்டியிருந்தா அதை நம்பி அந்த வீட்டுக்காரங்களை உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பாங்க.  நல்ல வேளை அப்படி நடக்கலை. இனிமே, இந்த மாதிரி மூடநம்பிக்கை வழியில் போறது இல்லைன்னு முடிவு பண்ணி இருக்கோம். அம்மனுக்கு சக்தி இருந்தா, அவளே சிலையைக் கண்டுபிடிச்சுக் கொண்டாரட்டும்!'' என்றார். சரியான பேச்சு!

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்