என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

தென்னாட்டின் காசி!

##~##

'சோளகர் தொட்டி’ நாவல் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளை வார்த்தைகளில் வடித்த எழுத்தாளர் ச.பாலமுருகன், கோவையில் வழக்கறிஞராகப் பணிபுரிபவர். தனது சொந்த ஊரான பவானியின் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

 ''மேற்கில் இருந்து பவானி ஆறும், கிழக்கில் இருந்து காவிரி ஆறும், பூமிக்கு அடியில் இருந்து ஊற்று எடுத்து வருவதாக நம்பப்படும் அமுத நதி யும் சங்கமிக்கும் ஊர், பவானி. தென்னாட்டின் காசி. பவானியின் வரலாற்றுப் பெயர் 'திரு நாணா’!

என் ஊர்!

திப்பு சுல்தானின் மரணத்துக்குப் பிறகு, 1799-ம் ஆண்டு முதல் 1804-ம் ஆண்டு வரை கோவை மாகாணத்தின் தலைநகராக இருந்தது பவானி. அப்போது, பவானியின் கலெக்டர் வில்லியம் கேரேயின் உறக்கத்தில், 'இந்தக் கட்டடம் இடிந்து விழப்போகிறது. நீ தப்பிவிடு!’ என்று பவானியில் எழுந்தருளி இருக்கும் வேதநாயகி அம்மன் கனவில் வந்து சொன்னதுவாம். கலெக்டர், சட்டெனக்  கண் விழித்து எதுவும் புரியாமல் வெளியே வர, அதற்கு எனவே காத்திருந்ததுபோல கட்டடம் பொல பொலவென இடிந்து, தரை மட்டம் ஆனதாம்.  இதை அவரே தனது குறிப்பில் பதிவு செய்து இருக் கிறார். அதற்கு நன்றிக் கடனாக அவர், வேதநாயகி அம்மன் கோயிலுக்கு யானைத் தந்தத்தில் தொட்டில் செய்து காணிக்கை செலுத்தி இருக்கிறார். அந்தத் தொட்டில் இன்னும் அங்கு இருக்கிறது.

என்னுடைய ஏழு வயதில் என் அம்மாவைப் பிரசவத்துக்காக பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். தங்கைப் பாப்பா பிறந்தாள். அந்த சமயம் திடீர் என்று ஓர் இரவு ஆற்றில் வெள் ளம் பெருகி, மருத்துவமனைக்குள்ளும் புகுந்துவிட் டது.  ஒரு கையில் குழந்தையைத் தூக்கிப் பிடித்த படி, என்னை முதுகில் சுமந்துகொண்டு தண்ணீரில் நீந்தி எங்களைக் காத்தார் அம்மா. இப்படி அடிக்கடி காவிரி ஆசையாக உள்ளே புகுந்து விளையாடும் ஊர் எங்கள் பவானி.

என் ஊர்!

இதனாலேயே, பவானியில் பிறந்த எல்லோருக்குமே நீச்சல் தெரியும். தினம் காலை, மாலை ஆற்றுக் குளியல்தான். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் நான்கு நாட்கள் ஊரில் செல்லியாண்டி அம்மன் திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரக் கிராம மக்கள் பவானியில் ஒன்று கூடி விழாவைக் கொண்டாடு வார்கள். அதேபோல, ஆடி 18-ல் ஆடிப் பெருக்கு விழா. பஞ்ச பாண்டவர்கள் போர் முடிந்த 18-ம் நாளில், ஆற்றில் ஆயுதங்களைக் கழுவியதாகச் சொல்வார் கள். அன்றைய தினம் பவானி ஆற்றில் தண்ணீரே தெரியாத அளவுக்கு மனிதத் தலைகள் இருக்கும். பெண்கள் தாலி மாற்றி, புதுத் தாலி அணிவார் கள்.

ஊரின் பூக்கடை முக்கு என்ற இடத்தில் பாரத் கஃபே எனும் ஹோட்டல்  இருந்தது. அந்த ஹோட்டல் காபியின் வாசம் பேருந்து நிலையம் வரை மணக்கும்.

பவானி ஜமுக்காளம் உலகப் புகழ் பெற்றது. அதேபோல் பட்டுப் புடவைகளில் கடவுள் படங் கள், இயற்கைக் காட்சிகள் என்று விதவிதமாக அழகு சேர்த்ததும் எங்கள் மக்கள்தான். இன்றும் கொங்கு மண்டலத்திலும் தென் தமிழ கத்திலும் மஞ்சள் துணிப் பைகள் பிரபலம். அப்படி மஞ்சள் பையை அறிமுகப்படுத் தியதே பவானிதான். வியாபார நிறுவ னங்கள் தங்கள் பொருட்களை மங்கள கரமான மஞ்சள் பையில்வைத்துக் கொடுப் பதும், வாடிக்கையாளர்களுக்குத் தருவதும் கௌரவம் என்று உணர்த்தியது என் ஊர். இன்றும் மஞ்சள் பை உற்பத்தித் தொழில் பவானி யில் சக்கைப்போடு போடுகிறது!

என் ஊர்!

அன்றைய கைத்தறி நெசவுத் தொழிலாளிகள் பெரும்பாலும் பொது உடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதனால்தான், அந்த இயக்கத்தைத் தடை செய்தபோது ஜீவானந்தம் உள்ளிட்ட தோழர்கள் தலைமறைவு வாழ்க்கைக்காக பவானியில் தஞ்சம் அடைந்தார்கள். வேலைக்காக, குழந்தைகள் கல்விக்காக என்று பலரும் இன்று ஊரைவிட்டு வெளியேறிவிட்டோம். ஆனாலும், காலை கண் விழித்ததில் தொடங்கி இரவு உறங்கும் முன் ஒரு முறையேனும் ஊரின் நினைவு மனசுக்குள் அலையடிக்கும். பவானியில் பிறந்த அனைவருக்கும் அப்படித்தான்!''

சந்திப்பு: கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்