என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

கரண்ட் கம்பியில் அடிபட்டு செத்த பேய்கள்!

##~##

''சென்னையில் இருந்து ஷேர் ஆட்டோ எட்டும் தொலைவில் இருந்தாலும், நகர தன்மையில் இருந்து விலகி இருந்தது என் ஊர் ஜெகந்நாதபுரம். பூரி ஜெகந்நாதர் ஆலயம் செல்ல அந்தக் காலத்தில் இந்த ஊரின் நடுவே ஒரு மண் பாதை இருந்ததாம். அதன் பொருட்டுத்தான் எங்கள் ஊருக்கு அந்தப் பெயர்!'' பெயர்க் காரணம் சொல்லி ஊர் புராணம் ஆரம்பித்தார் தமிழ்மகன்.

 தினமணி இதழின் முதுநிலை உதவி ஆசிரியரான இவர் இதுவரை 70 சிறுகதைகள், ஐந்து நாவல்களை எழுதி இருக்கிறார். இவரது 'வெட்டுப் புலி’ நாவல் மற்றும் 'எட்டாயிரம் தலைமுறை’ சிறுகதை  தமிழக அரசின் விருது பெற்ற சிறப்புப் பெற்றவை!  

என் ஊர்!

''சிறுவனாக இருந்தபோதே சென்னையில் குடியேறிவிட்டாலும், ஆண்டில் சரிபாதி நாட்களை அங்குதான் கழித்தேன். சனிக்கிழமை அரை நாள் பள்ளிக்கூடம் இருந்தால், மீதி அரை நாளை அப்ப டியே கொத்தாக ஜெகந்நாதபுரத்தில் இறக்கி வைப் பேன். இது என் அம்மா பிறந்த ஊர். கோலி, பம்ப ரம், குரங்காட்டம், கல் சீட்டு, கொரி கொலிக்கா வேட்டை, நாகப் பழ வேட்டை என இளம்பிராய சந்தோஷங்கள் ஏராளமாகக் குவிந்து இருந்தன. ஏரிக்கரை, கிணறு, ஆற்று நீச்சல், இரவுக் காட்சி முடிந்து திரும்பும்போது சோழவரம் போலீஸ் விசா ரணை, பம்பு செட்டு காவலுக்குச் சென்று   பசியில் பனங்காய் வெட்டிச் சாப்பிட்டது, வாழைக் காயைச் சுட்டுச் சாப்பிட்டது என கழிந்தன பொழுதுகள்.

எனக்குள் ஒரு கதாசிரியன் விழித்ததும் அங்கு தான். என் எல்லாக் கதைகளிலும் அந்த ஊர் ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஊரை ஒட்டி குசஸ்தலை ஆறு வளைந்தோடும். இரு கரைக்கும் நடுவே காலம் யுகம் யுகமாக சேமித்துவைத்திருந்த மணல் நிரம்பி இருக்கும். இப்போது அந்தச் சேமிப்பு எப்படி கரைந்தது என்று தெரியவே இல்லை. ஆறு குழி குழியாக கோரமாகக் கிடக்கிறது. என் 'வெட்டுப் புலி’ நாவலில் கால ஓட்டத்தின் குறியீடாக இந்த ஆறு இடம்பெற்று இருக்கும். இந்த ஆற்றின் குறுக்கே காரனோடையில் கட்டப்பட்ட பாலம் மணல் கொள்ளையால்தான் இரண்டு முறை ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது புரூஸ் லீ படம் போட்ட பனியன் போட்டுக்கொண்டு, ஊரில் நிறைய பேருக்கு புரூஸ் லீயை அறிமுகப்படுத்தினேன். புரூஸ் லீயைப்பற்றி அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் மீசையைத் தடவிக்கொண்டு, 'அவனை என்கிட்ட வந்துமோதிப் பாக்கச் சொல்லுடா... பனை மரத்தையே வேரோட புடுங்கி கடாசறவன்டா நானு!’ என்றார். அப்புறம் அவரிடம் நான் எதுவும் பேசவில்லை.

என் ஊர்!

நெய் பிஸ்கட் விற்பதற்காக வரும் வெளியூர் தாத்தா, போர்வெல் போட வரும் செக்கஞ்சேரி போர்வெல் செல்வராஜ் நாயுடு, கொத்தவால்சாவ டியில் இருந்து வரும் வாழை மண்டி ஏஜென்ட் கடலை, மோட்டர் காயில் கட்டும் ஆத்தூர் முனு சாமி என்று ஊருக்குச் செல்லும்போது எல்லாம் கண்ணில்படும் தகவல் ஆசாமிகள் ஏராளம். சளைக் காமல் ஆளுக்கு ஒரு தகவல் சொல்வார்கள். இவர் களைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கும். அவர் களுடைய கதைகளில் அமைந்தகரை, அமெரிக்கா, ஏன்... சொர்க்கமேகூட கூப்பிடு தூரம்தான்.

போர்வெல் செல்வராஜ் நாயுடு ஒரு முறை சொன்னார், 'மனக் கஷ்டத்துல கடல்ல குதிச்சு செத்துடலாம்னு போனேன். கடலோட அந்தாண்ட கரை வரைக்கும் போயிட்டேன். முட்டிக் காலுக்கு மேல தண்ணி ஏறவே இல்லை. உம் மேல சத்தியம்... நம்புனா நம்பு!’  

என் ஊர்!

சிறு வயதில் ஊர் எல்லைக்குள் நுழையும்போது டீக்கடையிலே மடக்கி, 'பட்டணத்தில இருந்து தனியாவா வர்றே?’ என்று கேட்டவர்கள் எல்லாம் ஏறத்தாழ மறைந்துவிட்டார்கள். ஆனால், என் பாட்டி 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மாற்றங்களை அனுமானித்துவிட்டார். 'எப்ப ஊருக்கு கரன்ட்டு வந்துச்சோ, அப்பவே எல்லா பேயும் கரன்ட் கம்பி யில அடிபட்டு செத்துப் போச்சுப்பா!’ என்பார்.  

இப்போது டீக்கடைக்கு முன் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. அதுவும் தங்க நாற்கரச் சாலை வந்த பின்பு என் ஊரைக் கண்டுபிடிக்க எனக்கே தடுமாற்றமாக இருக்கிறது. அப்போதுதான் உணர்ந் தேன், தோள் மீது கிடந்த குழந்தை தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட சூட்சுமத்தை. ஆனாலும், என் மனதில் இருக்கும் ஊரை அவ்வப்போது அவிழ்த்துப் பார்க்கும்போது யாரும் தர முடியாத மகிழ்ச்சியை அடைகிறேன்!''

சந்திப்பு: பி.சுபாஷ்பாபு,படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்