Published:Updated:

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்

Published:Updated:
##~##
ரொ
ம்பவும் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சோவியத் ஒன்றியத்தின் சிதைவில் இருந்து தொடங்கி, உலகில் நடந்த புரட்சிகளை எடுத்துக்கொள்வோம். மத்தியக் கிழக்கு நாடுகளில் இப்போது நடந்துகொண்டு இருக்கும் புரட்சி வரை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு புரட்சிக்குப் பின்னும் உள்ள காரணிகளை இன்றைய இந்தியச் சூழலுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு பெரிய புரட்சிகளுக்கான எல்லா நியாயமான காரணங்களும் பல ஆண்டுகளாக இங்கு இருக்கின்றன. ஆனாலும், இந்தியாவில் ஏன் புரட்சி வெடிக்கவில்லை? மக்களிடம் போராட்ட உணர்வு

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

இல்லாததாலா அல்லது நல்ல தலைவர்கள் இல்லாததாலா?

இவை இரண்டையுமே காரணங்களாகச் சொல்ல முடியாது. மக்களிடம் கொந்தளிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. நல்லியல்புகளைக்கொண்ட நேர்மையான தலைவர்கள் சிலரேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், ஒரு மிகப் பெரிய போராட்டம் அல்லது புரட்சிக்கு, தன்னலம் அற்ற நேர்மையான உழைப்பைத் தரும் தலைவர்களின் வசீகரமும் மக்களின் கொந்தளிப்பும் மட்டுமே போதுமானவை அல்ல. இவை இரண்டும் கை கோக்க வேண்டும். அதற்கு, போராட்டம் முழுக்க முழுக்க மக்கள் போராட்டமாக மாற வேண்டும். அதாவது, போராட்டம் மக்கள் இடத்தில் இருக்க வேண்டும். அதற்கு, மக்களின் இயல்புக்கு ஏற்ப மாற்றங்களைச் சிந்திக்க வேண்டும்.

அண்ணா ஹஜாரேவிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்தாவது விஷயம் இது!

இன்றைக்கு ராலேகான் சித்தி மக்கள், திருமணம் என்றால்கூட, சிக்கனத்தையும் சமத்துவத்தையும் பேணும் வகையில், ஜாதி பார்க்காமல், ஒரே இடத்தில் 20, 30 ஜோடிகளாகச் சேர்ந்து சமூகத் திருமணங்களாக நடத்துகிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டில் கறாராக இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வது தேவையா என்று கேள்வி கேட்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் செயல்பாடுகள் சரி இல்லை என்றால், அவர்களைத் திரும்பப் பெறும் உரிமை வேண்டும் என்று கோருகிறார்கள். ஆனால், அண்ணா ஹஜாரே கனவுகளோடு வந்தபோது, மூடநம்பிக்கைகளின் உறைவிடமாக இருந்தது ராலேகான் சித்தி.

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சீரழிவுகளின் உச்சத்தில் இருந்த அந்தக் கிராமத்தில் வளர்ச்சியைப்பற்றியோ, மாற்றங்களைப்பற்றியோ ஹஜாரே பேச முற்பட்டபோது, அங்கு அவரைச் சீந்துவார் யாரும் இல்லை. மக்களை எப்படித் தன்னுடைய பாதைக்குத் திருப்புவது என்பதே பெரிய சவாலாக இருந்தது ஹஜாரேவுக்கு!

கிராமங்களில் எப்போதுமே மக்களின் பொது அரங்குகள் கோயில்கள்தான். ராலேகான் சித்தி மக்களும் இதற்கு விதிவிலக்குகள் அல்லர். தங்கள் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத பிணைப்பை அங்குள்ள யாதவ பாபா கோயிலோடும் அனுமன் கோயிலோடும் கொண்டு இருந்தார்கள் ராலேகான் சித்தி மக்கள். ஆனால், ஊரே பஞ்சத்திலும் வறுமையிலும் அடிபட்டுக்கிடந்ததால், கோயில்களும் பராமரிப்பு இன்றிக்கிடந்தன. ஹஜாரேவிடம் ராணுவத்தில் அவர் பணியாற்றியபோது சேமித்துவைத்த பணம் இருந்தது. கோயில்களைச் சீரமைக்கத் தொடங்கினார் ஹஜாரே. முதலில் கேலி பேசியவர்கள், வெறுத்து ஒதுக்கியவர்கள் எல்லாம் இப்போது ஹஜாரேவுக்கு நெருக்கமானார்கள். அவரோடு கை கோத்தார்கள். அவருடைய வார்த்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கவனிக்கத் தொடங்கினார்கள்.

மக்களின் இயல்புக்கு ஏற்றவாறு மாற்றத்தைத் தொடங்குவதன் அவசியத்தைச் சொல்லும்போது எல்லாம் இதைச் சுட்டிக்காட்டுவார் ஹஜாரே.

''எடுத்த எடுப்பிலேயே எந்த நற்பணியையும் மக்கள் ஆதரித்துவிட மாட்டார்கள். இதைச் செய்வதில் ஏதோ சுயலாபம், உள்நோக்கம் இருக்கும் என்று சந்தேகிப்பார்கள். ஒருவன் தன் செயல்பாடுகளால், தான் உண்மையானவன் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வரை இந்தச் சங்கடம் இருக்கும். ஆனால், மக்களுக்கு நீங்கள் முழுமையாக உங்களை உணர்த்திவிட்டால், நிச்சயம் உங்களையும் உங்களுடைய செயல்பாடுகளையும் ஆதரிப்பார்கள்.

கோயில்கள் சீரமைப்பில் என் வாழ்நாள் சேமிப்பின் பெரும்பகுதியை நான் செலவிட்ட அந்த நாட்களில், 'இது குருட்டு நம்பிக்கை’ என்றார்கள் பலர். ஆனால், மக்களை ஒன்றுபடுத்த அதுவே உன்னதமான வழியாக அமைந்தது. என் நம்பிக்கையின் பிறப்பிடமாக அதுவே அமைந்தது!'' என்கிறார் ஹஜாரே.

மாற்றங்களை நோக்கி மக்களைத் திருப்ப ஹஜாரே சொல்லும் இன்னொரு வழி, பேச்சை நிறுத்திக்கொண்டு நோக்கத்தைச் செயல்பாடுகளில் காட்டுவது!

''ராலேகான் சித்தியின் டீக் கடைகளில் ஒரு நாளேனும் வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு நிற்கும் ஹஜாரேவை நீங்கள் பார்க்க முடியாது'' என்கிறார்.

இந்தியாவில் மகத்தான மாற்றங்கள் உருவாகாத தையும் நல்ல தலைவர்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போவதையும்பற்றி பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய இடம் இது!

சரி, அண்ணா ஹஜாரேவிடம்தான் இந்தத் தகுதி இருக்கிறதே... ஏன் நாடு தழுவிய ஒரு மாற்றத்தை உருவாக்க முடியவில்லை என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், ஏன் முடியவில்லை? ஏனென்றால், இந்தியாவுக்கு ஓர் அண்ணா ஹஜாரே மட்டும் போதுமானவர் அல்ல!

இந்தியச் சுதந்திரம் யாரால் கிடைத்தது? காந்தியால் கிடைத்தது என்று நம்முடைய வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லும். உண்மையில் ஒரு காந்தி அல்ல; பல்லாயிரக்கணக்கான காந்திகள் அன்றைக்கு நாடு முழுவதும் இருந்தார்கள். காந்திபோலவே கதராடை தரித்து, அற உணர்வுகளோடு வாழ்ந்து, உயிரைப் பொருட்படுத்தாமல் துணிவோடு போராடியவர்கள்! வெள்ளையன் தாக்கலாம், துப்பாக்கியால் சுடலாம், கைது செய்யலாம், அந்தமான் சிறைக்கு அனுப்பலாம், வீடு திரும்பாமலேயே உயிர் போகலாம் என்பதெல்லாம் தெரிந்தே, வீதியில் கம்பீரமாக இந்தியக் கொடியுடன் இறங்கிய காந்திகள். அந்தப் பல்லாயிரக்கணக்கான காந்திகளும் சேர்ந்து வாங்கியதுதான் இந்தச் சுதந்திரம். ஆனால், இன்றைக்கு ஓர் அண்ணா ஹஜாரே மட்டுமே நம் முன் இருக்கிறார். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு இப்படி ஓர் அண்ணா ஹஜாரே நமக்குத் தேவை. கிராம வளர்ச்சியை முன்னெடுக்கும், சுற்றுச்சூழலோடு இயைந்த ஒரு வாழ்க்கையை முன்னிறுத்தும், அற உணர்வுகளின் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பை வலியுறுத்தும் ஒரு பெரும் அண்ணா ஹஜாரே படையே நமக்குத் தேவை. அந்தப் படையில் நீங்கள் என்னவாக இருக்கப்போகிறீர்கள்?

- நிறைந்தது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism