Published:Updated:

வெயிலுடன் மினி பயணம் #WhereIsMyGreenWorld

Vikatan Correspondent
வெயிலுடன் மினி பயணம் #WhereIsMyGreenWorld
வெயிலுடன் மினி பயணம் #WhereIsMyGreenWorld
வெயிலுடன் மினி பயணம் #WhereIsMyGreenWorld

'வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி' னு வெயில் படத்துல ஆடுறதெல்லாம் வெள்ளித்திரையோட சரி. நிஜமாகவெல்லாம் அப்படி ஆட முடியாத அளவு கொளுத்துது வெயில்.

பாத்ரூம்ல குளிச்சிட்டு துவட்டிட்டு வெளியே வந்தா நாம குளிச்சோமா இல்லையான்னு டவுட்டே வந்துடுது. எனக்கென்னமோ வைரமுத்து ' அந்திமழை பொழிகிறது' பாட்டை பாத்ரூம்ல குளிக்கும்போது யோசிச்சிருப்பாரோன்னு தோணுது. ஆமாங்க...அந்த பாட்டில் வரும் ஒரு வரி ' தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது'. இப்போ சொல்லுங்க நான் யோசிச்சது சரிதானே. என்னடா இது அழகான ஒரு லவ் சாங்கை இப்படி அநியாயத்துக்கு வெயில்ல போட்டு வறுக்கிறான்னு கடுப்பாகாதீங்க. வெயில் என்ன வேணும்னாலும் செய்யும்.

ஆபீஸுக்கு ஆட்டோவில் போனா ஐந்து நிமிசம். வாக்கிங்னா 20 நிமிசம். உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியும் ஆச்சு. காசும் மிச்சமாச்சுனு நடந்தே புறப்பட்டா... நடக்க நடக்கத்தான் தெரியும். சூரியன்கிறது வானத்துல இல்ல, நம்ம காலுக்குக் கீழே, நம்ம பாக்கெட்ல, நம்ம காலர்ல உட்கார்ந்துகிட்டு அட்டகாசம் பண்றது. தலையில வேர்க்கிறது வழிஞ்சி, கழுத்து வழியா நம்ம முதுகுத்தண்டுல ட்ராவல் பண்ணி, பனியனை நனைச்சு இறங்குறதை அனுபவிக்கணும் பாஸ். மதுராந்தகம், செங்கல்பட்டு பைபாஸ்ல பைக்கிலோ பஸ்சிலோ போகும்போது சாலையில் கொஞ்ச தூரத்துல கானல் நீர் தெரியும். அது சென்னை அண்ணாசாலையில் நடக்கும்போது நம்ம கண்ணுக்குத் தெரியாது. அம்புட்டுதான் வித்தியாசம்.

ஆவி விட்டுப்போய் நடந்து வரும்போதுதான் மனசுல என்னென்னமோ தோணும். சிக்னலுக்காக வெயிட்

வெயிலுடன் மினி பயணம் #WhereIsMyGreenWorld

பண்ற அந்த ஒரு நிமிசத்துல, நம்முடைய பால்யத்துல ஆத்துல தண்ணி பெருகி கரையோரமா இருந்த மினி அய்யனார் கோயில் (முனி இல்லைங்க. அவர் வேற) மூழ்கிப்போனதை கண்ணுல பதற்றத்தோட  பார்த்துக்கிட்டு இருந்ததெல்லாம் ஞாபகம் வரும்.  

இப்போ அய்யனாரும் இல்லை, ஆறும் இல்லை. நதிக்கரை நாகரிகம் மாறிப்போய் விரைந்து கொண்டிருக்கிறோம் வெயில் வறுத்தும் காங்கிரீட் கட்டடங்களின் நடுவே.

நம் உடல் நீரெல்லாம் வியர்வையாய் வெளியேற,  'கரும்பு ஜூஸ் குடிச்சா உடல் களைப்பும் தீரும். வெளியேறிய எனர்ஜியை மீட்டெடுக்கும்' என்ற நம்பிக்கையில் ஒரு கப் அடிச்சா ஜூஸோட தித்திப்பு தொண்டையில் தங்கி இன்னும் இம்சையைக் கொடுக்கும். அந்தத் தித்திப்பு தீர நல்ல தண்ணி குடிச்சாதான் தாகமும் அடங்கும்.

அலுத்துப்போய் நண்பர்கிட்ட '' இந்த வருசம் வெயில் கொஞ்சம் ஜாஸ்திதான்''னா அவர் கூலா,  ''ஆமா, போன வருசமும் இதேதான் சொன்னீங்க'' ம்பார். இந்த ஒரு விஷயத்துல மட்டும் நம்ம ஞாபக சக்தி குறையறதே இல்லை. அடுத்த வருசமும் இதே டயலாக்கை நான் அவர்கிட்ட சொல்வேன். அது மட்டும் நிச்சயம்.

இந்த வெயில் இன்னும் என்னவெல்லாம் எழுதச் சொல்லப் போகுதோ...!

- கணேசகுமாரன்