Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : உமா சங்கர் ஐ.ஏ.எஸ்ம.கா.செந்தில்குமார், படங்கள் : செ.பாலசுப்பிரமணியன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : உமா சங்கர் ஐ.ஏ.எஸ்ம.கா.செந்தில்குமார், படங்கள் : செ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''பாளையங்கோட்டையில் செயின்ட் சேவியர்ஸ் பள்ளி மாணவன் நான். என் அப்பா பணிபுரிந்த சென்ட்ரல் தபால் நிலையம், பள்ளியின் அருகிலேயே இருந்தது. அப்பாதான் போஸ்ட் மாஸ்டர். அந்த அஞ்சலகத்தில் எளிய நூலகம் ஒன்று உண்டு. தேர்வு சமயமாக இருந்தாலும்கூட பரீட்சை எழுதிவிட்டு, அந்த நூலகத்தில் விகடன் படிப்பது என் வழக்கம். சிறுகதை, தொடர், ஜோக்ஸ் என்று அட்டை டு அட்டை படிப்பது அப்போதைய வழக்கம். ஒவ்வொரு வாரமும், அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸ் தொக்கி நிற்கும் தொடர்கள் என்னை நூலகம் நோக்கி இழுத்துக்கொண்டே இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.ஏ.எஸ். அலுவலர் ஆனேன். இந்தக் காலகட்டத்தில் விகடனிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். ஆனால், நடுநிலைப் பார்வையில், சமூக, அரசியல் தளங்களை அணுகும் தன்மை மட்டும் மாறவே இல்லை. நடு மண்டையில் நச்செனக் குட்டுவதுபோல அமைந்திருக்கும் ஒரு பக்கத் தலையங்கம், ஆஹா ரகம்!

நானும் விகடனும்!

இந்தியக் குடியரசில் காவல் துறை, ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் அமைந் துள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில், அரசு அலுவலர்கள் - குறிப்பாக ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் - அரசியல்வாதிகளின் கீழ் நேர்மையாகப் பணியாற்ற முடியாத நிலை. இது மிகவும் ஆபத்தான போக்கு. இதனால், நேர்மையாளர்களுக்கு எப்போதும் சோதனைதான். இதுபோன்ற சமயங்களில், அந்த நல்ல அரசு அலுவலர்களுக்காகக் குரல் கொடுக்கும் பத்திரிகைகளில் விகடனுக்குத்தான் முதல் இடம். இப்படிப்பட்ட  இக்கட்டான தருணங்களில் விகடன் என்னையும் தாங்கிப் பிடித்ததை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

'எனக்கு இந்த மாதிரி ஒரு பிரச்னை. என் தரப்பு நியாயத்தை எழுதுங்கள்’ என்று ஒரு நாளும் நான் அவர்களிடம் கேட்டதே இல்லை. என் சூழலைப் புரிந்துகொண்டு அவர்களாக விசாரித்தோ, என்னை அணுகிக் கேட்டோ, கட்டுரை, பேட்டி என நிறைய எழுதி இருக்கிறார்கள். அதன் பிறகும்கூட 'உண்மையை எழுதியதற்கு நன்றி’ என்று நான் அவர்களுக்கு ஒருநாளும் சொன்னது இல்லை. அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் இல்லை. அவர்கள், தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்த புரொஃபஷனல் நேர்த்தி... விகடனில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

'நீங்கள் செய்வது, சொல்வது தவறு’ என தங்கள் எழுத்துகள் மூலமாகத் தலையில் குட்டும்போது, ஆட்சியாளர்கள்... நேர்மையான பத்திரிகைகளுக்கு நெருக்கடி கொடுக்கும் சூழல் இந்தியக் குடியரசின் நிலை. அதுபோன்ற ஏகப்பட்ட நெருக்கடிகளை விகடனும் சந்தித்து உள்ளது. அந்தச் சமயங்களிலும்கூட நெஞ்சுரத்தோடு வரும் விகடனின் தலையங்கங்கள், கருத்துப் படங்கள் என்னை வியக்கவைக்கும். இந்தத் தன்னம்பிக்கை ப்ளஸ் தைரியம்தான் ஒவ்வொரு விகடன் வாசகனும் பெருமை கொள்ளும் விஷயம். அதுபோன்ற விகடனின் தைரியத் தருணங்களில், என் நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து, 'விகடன் தலையங்கம் படிச்சீங்களா? அந்த கார்ட்டூன் பின்னிட்டாங்கல்ல!’ என்று பெருமைப்பட்டுக் கொள்வேன்.

நானும் விகடனும்!

உள்ளதை உள்ளதாகச் சொல்பவர்கள் மட்டுமே மனிதப் பிறவிகள். மற்றவர்கள் மனிதப் பிறவியில் இருந்து வேறுபட்டவர்கள் என்பது என் கருத்து. ஆட்சிக்குத் தகுந்தாற் போல் ஜால்ராவை மாற்றி அடிக்கும் மனிதர்கள், தலைவர்கள், ஒப்பீனியன் மேக்கர்ஸ், குறிப்பாக, பத்திரிகைகள் இங்கு ஏகமாக உண்டு. ஆனால், விகடன் இந்தக் காட்சி மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது. எந்த ஆட்சியாக இருந்தாலும், உள்ளதை உள்ளது என்று அடித்துத் துவைப்பது விகடன் ஸ்பெஷல்!

இன்று சினிமாக்காரர்களைப்பற்றியோ, கொள்ளையடித்த ஆட்சியாளர்கள்பற்றியோ எழுதுவதும், அதை மக்களிடம் கொண்டு செல்வதும் சுலபம். அந்தரங்கங்களை எழுதினால், அடித்துப் பிடித்து வாங்கிப் படிக்கும் பழக்கம் ஏனோ இங்கு பரவிவிட்டது. சுருக்கம் விழுந்த முதிய முகத் தோற்றம்கொண்ட அண்ணா ஹஜாரே பற்றி எழுதினாலும் இங்கு வாங்கிப் படிக்க ஆட்கள் உண்டு என்ற நம்பிக்கையை விதைத்து இருப்பதும் விகடன்தான். 'இந்த மாதிரி மனுஷங்களும் இருக்காங்கய்யா’ என்று நல்லவர்கள் மீது ஒளிக்கற்றை பாய்ச்சி, ஊரறியப் பிரபலப்படுத்தும் நேர்மறை அணுகுமுறை விகடனின் ப்ளஸ். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தோழர் நல்லக்கண்ணு.

சமீபத்தில் அவர் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அப்படி ஓர் எளிமையான மனிதரை என் வாழ்க்கையில் நான் அது வரை பார்த்தது இல்லை. அரை பனியன் அணிந்து ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார். மிகச் சாதாரண வீடு. அவரின் மனைவி, பிள்ளைகள் முகங்களில் உற்சாக ஒளி.  அவரைப் போல் நாமும் எளிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. ஆனால், 'நல்லக்கண்ணு நல்லவருப்பா. எளிமையா இருக்காரு’ என்று கடந்து சென்றால், அவருடைய அரசியல் தவம் யாருக்குத் தெரியும்? அப்படிப்பட்ட நல்லவர் நல்லக்கண்ணு அவ்வப்போது விகடனில் மட்டுமே படிக்கக் கிடைக்கிறார். இதேபோல், விகடன் வெளிச்சம் பாய்ச்சியவர்களைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.

விகடன் வாங்கியதும் முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை ஒரு புரட்டுப் புரட்டி நகைச்சுவைத் துணுக்குகளை லேசாகவும் சத்தம் போட்டும் சிரித்துப் படித்த பிறகுதான், கட்டுரைகள், பேட்டிகள் பக்கம் வருவேன். விகடனுக்கு இணையான நகைச்சுவைத் துணுக்குகளை வேறு பத்திரிகைகளில் இதுவரை நான் படித்தது இல்லை. அதேபோல் நிகழ்கால நடப்புகளை ஒன்றுவிடாமல் சிறிதும் பெரிதுமாக அவர்கள் பதிவு செய்வது நல்ல விஷயம்.

எனக்குத் திருமணமாகி 20 வருடங்கள் முடியப்போகிறது. என் மனைவி விகடனின் ஓர் இதழைக்கூடத் தவறவிடாமல் படித்து வருகிறார். 'இது படிச்சீங்களா?’ என எனக்கு நினைவுபடுத்தவும் அவர் தவறுவது இல்லை. என்னைவிட அவர் தீவிர விகடன் வாசகி!  

பணிக்கு வந்த கடந்த 17 வருடங்களில் அவ்வப்போது பேட்டிகளின் வாயிலாக நானும் விகடனின் பக்கங்களில் இடம் பெற்று இருக்கிறேன். சுடுகாட்டுக் கூரை ஊழல் காலகட்டத்திலும், லஞ்ச ஒழிப்புத் துறை இணை ஆணையராக இருந்த சமயங்களிலும் என்னைப்பற்றி விகடனில் வந்த எழுத்துக்கள், பெரிய தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தின. என் அலுவல் தொடர்பாக, நிறைய இக்கட்டான காலங்களைக் கடந்துபோகும்போது, விகடன் அதுபற்றி நீதி, நேர்மை தவறாமல் எழுதி இருக்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தின் மிகச் சிறந்த 10 மனிதர்களில் என்னை முதல் மனிதராக விகடன் தேர்வு செய்தது. அதற்காக அவர்கள் என்னிடம் பேட்டியோ, கருத்தோ கேட்கவில்லை. 'என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி’ என நான் அவர்களுக்கு நன்றியும் சொல்லவில்லை. ஆனால், நல்லவர்கள் மீதும் சரியானவர்கள் மீதுமான விகடனின் அன்பு தொடர்கிறது.

என் சமீபத்திய பேட்டிகளை ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள், தங்கள் அறையின் சுவரில் ஒட்டிவைத்து உள்ளதாக அறிந்தேன். 'விகடனில் வந்த உங்க பேட்டி என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்தியது’ என மாணவர்கள் நேரிலும் தொலைபேசியிலும் பேசுகிறார்கள். 'விகடன் உங்களை ரொம்ப புரொமோட் செய்கிறது’ எனச் சில விமர்சனங்களும் வரும். 'அதில் என்ன தவறு?’ எனத் திரும்பக் கேட்பேன். ஒன்றுமே இல்லாத மனிதனை ஆதிக்கத் துறையினர் விரட்டி வரும்போது, பத்திரிகைகளும், நீதித் துறையும்தான் தலையிட்டு அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டும். எனக்குப் பல சமயங்களில் நீதித் துறையின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. நேர்மையானவர்களுக்கு நீதிமன்றங்களில் நீதி கிடைப்பது என்பது குதிரைக்கொம்பு. ஆனால், அதற்கு மாறாக எந்த ஆதாயமும் எதிர்பார்க்காமல் நீதியாளர்களுக்காக பத்திரிகைகளே தங்கள் எழுத்தின் வாயிலாகப் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதைப் பார்க்கிறேன். ஆனந்த விகடன், அப்படிப்பட்ட ஒரு போராளி!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism