Published:Updated:

என் ஊர்!

அவங்க திருவிழாவுல இவங்களும் இவங்க திருவிழாவுல அவங்களும்!

என் ஊர்!

அவங்க திருவிழாவுல இவங்களும் இவங்க திருவிழாவுல அவங்களும்!

Published:Updated:
##~##

ன் ஊர் மேலாண்மறைநாடு பற்றிய அனுபவங் களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி...  

 ''விருதுநகர் மாவட்டத்துத் தென்கோடியில இருக்குது மேலாண் மறைநாடு. ஊரைச் சுத்தியும் சீமைக் கருவேல மரங்களா அணிவகுத்துக்கெடக்குற கரிசல் காட்டுக் கந்தக பூமி. எங்க ஊருக்கும் மத்த ஊருங்களுக்கும் அடிப்படையிலயே சில வித்தியாசங்கள் உண்டு. புதுப்பட்டி, கரிசல்குளம்கிற பேர்ல வேற ஊருங்க உண்டு. எங்க ஊர் பேர்ல வேற ஊர் தமிழ்நாட்டுலேயே கிடையாது. நாடுங்கிறதை அடைமொழியாக் கொண்ட ஒரு சில ஊருங் கள்ல, எங்க மேலாண்மறைநாடும் ஒண்ணு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்க காலத்துல மனிதன் கூட்டம் கூட்டமா வாழ்ந்தப்போ, ஒவ்வொரு ஊரும் நாடுங்கிற பேர்ல இருந்துச்சு. அப்போ இருந்து இப்போ வரை எங்க ஊரு பேரு எந்த மாற்றமும் இல்லாமத் தொடருது.

என் ஊர்!

அஞ்சாவது வரைக்கும்தான் நான் படிச்சேன். அதுக்கு மேல படிக்கலை. ஆனாலும், கதைப் புத்தகம் கிடைச்சா, கீழேயே வைக்காமப் படிப்பேன். அர்த்த ராத்திரியிலயும் லாந் தர் வெளக்கு வெளிச்சத்துல கதைப் புஸ்த கம் படிச்சிக்கிட்டு இருப்பேன். அதை எல்லாம் சிலர் கிண்டலாப் பார்த்தாங்க. அப்புறம் பத்திரி கைகள்ல என் கதை பிரசுரமானதும் அவங்களே என்னைக் கவனிக்க ஆரம்பிச்சாங்க. எங்க ஊர்ல நான் வாழ்ந்த வாழ்க்கை, அந்த மண்ணின் மனிதர்கள், அங்க நடந்த சம்பவங் களைத்தான் என் கதைகள்லயும், நாவல்கள்லயும் சொல்லி இருக்கேன். நான் சாகித்ய அகாடமி விருது வாங் கினதும், ஊரே கூடி எனக்காக விழா எடுத்துப் பாராட்டுனாங்க.  

என் ஊர்!

பொதுவுல தென் மாவட்டங்கள்னாலே, சாதிக் கலவரங்கள் அடிக்கடி நடக்கும். என் ஊர் அதுக்கு விதிவிலக்கு. நாயக்கர்களும் தலித்களும் தாயாப் புள்ளையாப் பழகுவாங்க. கிறிஸ்துவ நாயக்கர், நாடார், தேவர், தலித்ன்னு யார் வூட்டுக் கல்யாணமா இருந்தாலும், எல்லா வீட்டுக்கும் எல்லா சாதிக்காரங்களும் வந்து நிப் பாங்க. சாதித் துவேசம் இல்லாம சம பந்தி விருந்து நடக்கும். தேச வர லாற்றுல நடக்குற அரசியல் நிகழ்ச்சிங் களோட தொடர்ச்சி, எங்க ஊர்ல எப்பவும் எதிரொலிக்கும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்ல காங்கிரஸ் கட்சி சார்பா தலித்கள் ஆலயப் பிரவேசம் செஞ்சப்ப, எங்க ஊர்ல பொன் னையாப் பிள்ளை, ராமசாமி நாடார், பெருமாள்சாமி நாயக்கர் தலைமையில ஊர் பொதுக் கிணத்துல தண்ணி எடுக்க அணிவகுத்துப் போனாங்க. இந்த பழைய வரலாற்று நிகழ்ச்சியை நான் 'அக்னிவாசம்’னு சிறுகதையா எழுதினேன். தமிழ்நாட்டுல நீதிக் கட்சி உதயமானப்போ, திராவிடர் கழகம் உருவானப்போ, இங்கேயும் கட்சிக் கிளையை உருவாக்குனாங்க. பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்துனப்போ, எங்க ஊர்லயும் நடந்துச்சு.

எங்க ஊருக்கு தார்ச் சாலை வந்தாலும், பாலம் வந்தாலும், நீர் நிலைத் தொட்டி அமைச்சாலும், செஞ்சு கொடுத்த மந்திரி பேரையோ, எம்.எல்.ஏ பேரையோ எழுதவிட மாட்டோம். எந்தப் பிரச்னை னாலும், பொது மக்கள் ஒண்ணு கூடி பேசி முடிவு எடுப்போம். ஒண்ணு சேர்ந்து போராடுவோம். எங்க ஊரைத் தாண்டித்தான், வலையப்பட்டி, அப்பையன் பட்டிக்கு பஸ் போகணும். பஸ்காரங்க ஸ்டிரைக் அடிச்சா, அந்தக் கிராம மக்கள் கவலையே பட மாட்டாங்க. 'மேலண்மறை ஊர்க்காரங்க எப்படி யும் பஸ்ஸைக் கூட்டி வந்திருவாங்க’ன்னு பேசிக் குவாங்க. அந்த அளவு எங்க ஊர்க்காரங்க மேல அவங்களுக்கு நம்பிக்கை. சாதிக்கு ஒரு கோயில் இருந்தாலும்,  சாமிக்குப் படைக்கிறது எல்லாம் பூக்கட்டி விக்கிற பூசாரிங்கதான் படைப்பாங்க. அவங்க திருவிழாவுல இவங்களும், இவங்க திருவிழா வுல அவங்களும் கலந்துக்குவாங்க. சாமிக்கும் சிறப்பு செய்வாங்க. மத நல்லிணக்கத்தை நாட்டுல நல்ல விதமா மேலாண்மை செய்யும் எங்க மேலாண் மறைநாடு.

எங்க ஊர்க் கண்மாய்களிலும் அதில் இருந்த கருவேல மரங்களிலும் ஏராளமான மயில்கள் இருக் கும். மயில்களின் குணம், அதன் வாழ்வாதாரப் போராட்டம் இதை எல்லாம்தான் ஆனந்த விகட னில் முதல் பரிசு பெற்ற 'முட்டை வேட்டை’  கதையில் நான் பதிவு செஞ்சிருந்தேன். காலப் போக்குல கண்மாயில இருந்த மரங்களை வெட்டிட் டாங்க. அதனால, மயில்கள் இப்போ வாழிடங்கள் இல்லாம, அகதிகளாகி வயல் வரப்புகளில் பாது காப்பு இல்லாமத் திரிஞ்சிட்டு இருக்கு. எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் எனக்கு சங்கடம் தர்றது இந்த ஒரு விஷயம் மட்டும்தான்!''

- எஸ்.கதிரேசன், படங்கள்: பொன்.காசிராஜன், என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism