Published:Updated:

என் ஊர்!

தமிழகத்தின் கேழ்வரகுக் களஞ்சியம்!

என் ஊர்!

தமிழகத்தின் கேழ்வரகுக் களஞ்சியம்!

Published:Updated:
##~##

வீன எழுத்தாளர்களில் முக்கியமானவர் எழில்வரதன். இயற்பெயர், வரதராஜன். பிறந்து, வளர்ந்தது தர்மபுரியின் லளிகம் கிராமம். கவிதை, சிறுகதை, நாவல் வடிவங்களில் வெளிவந்த இவரது படைப்புகள் ஏராளம். நகைச்சுவை நடையில்சமூக அவலங்களை வெளிப்படுத்தும் பாணியைக் கைக் கொண்டு இருப்பவர், தன் ஊர்க் கதை சொல்கிறார்!

 ''தஞ்சாவூரை 'நெற்களஞ்சியம்’னு சொல்ற மாதிரி, தர்மபுரியை 'கேழ்வரகுக் களஞ்சியம்’னு சொல்வாங்க. எங்க பிரதான உணவும் அதுதான்.  வரகு, திணை, சாமை மாதிரியான சிறு தானியங் களுக்கும் இங்கே பஞ்சம் இல்லை. 'மாம்பழமாம் மாம்பழம்... சேலத்து மாம்பழம்’னு சொல்வாங்க. ஆனா, அந்தப் பெருமை உண்மையில் தர்மபுரிக்குத் தான் சொந்தம். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத் தில் தர்மபுரி இருந்தபோது, இங்கே விளைஞ்ச மாம்பழங்கள்தான் அந்தப் பேர் வாங்கிக் கொடுத்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

ஒளவைக்கு அதியமான் நெல்லிக் கனி கொடுத்தது  இங்கு உள்ள அதியமான்கோட்டையில்தான். பரா மரிப்பு இல்லாததால், அந்தக் கோட்டை அழிஞ்சு போச்சு. அதுக்குப் பரிகாரமா அரசு அதியமான் கோட்டம் என்கிற வளாகத்தைக் கட்டியது.  ஆனா, அதுக்கும் பராமரிப்பு இல்லை. இங்கே சுத்திப் பார்க்க, ஒகேனக்கல், மன்றோ கிணறு, பாரா மஹால், சுப்ரமணிய சிவா சமாதி, ராமாக்காள் ஏரி, எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பைரவ நாதர் கோயில், கோட்டை கோயில்னு நிறைய இடங்கள் இருக்கு. சேரர், சோழர், பல்லவர், கங்கர், நுளம்பர், வாணர், போசளர், நாயக்கர், ஹொய்சாலர்னு ஏகப் பட்ட அரசர்கள் ஆண்ட ஊர் இது.

என் ஊர்!

லளிகத்தில் இருக்கும் கிளை நூலகம்தான் என் உலகத்தின் ஜன்னலைத் திறந்தது. கலீல் ஜிப்ரான், டால்ஸ்டாய் போன்ற அறிஞர்களுடன் நான் பேசிப் பழகியது இங்கேதான். சமீபத்தில் அங்கே ஒரு நண் பரைச் சந்திச்சேன். 'எப்படி இருக்கு நம்ம ஊர்?’னு கேட்டேன். 'ஏகத்துக்கும் மாறிப்போச்சு. தங்கமும், தரையும் ஏழைகளுக்கு எட்டாப் பொருள் ஆகி ருச்சு’ன்னு சொன்னப்ப உண்மை உறைச்சது.

பிறந்த மண்ணில் ஏற்பட்டு இருக்கும் இந்த மாற்றங்களை என்னாலும் உணர முடியுது. தெருவில் துள்ளி விளையாடிய குழந்தைகளை இப்போ பார்க்க முடியலை. மழைக் காலத் தாவரங்கள், பூக்கள், கிணத்து நீச்சல், அம்மி கொத்துறவங்க, சவுரி முடியை வாங்கிட்டு பலூன் கொடுக்கிறவங்க, கழைக் கூத்தாடிகள்னு நிறையப் பேர் காணாமப்போயிட்டாங்க.

சொந்த மண்ணையும் உறவுகளையும்விட்டு விலகிப்போய் திரவியம் தேடுறதுல எனக்கு விருப்பம் இல்லை. ஈன்ற குட்டிகளையே சுத்தி வர்ற பூனையைப்போலத்தான் நானும். சூரியனையே பார்த்துக்கொண்டு இருக்கும் சூரியகாந்தியைப்போல, வெளியில் இருந்தாலும் என் எண்ணம் எல்லாம் என் ஊரை நோக்கித்தான் இருக்குது. இப்போ நான் பார்க்கிறதுகூட முழங்கால் முட்டியெல்லாம் வலி எடுக்கும் இரும்பைப் பிளக்கும் வேலைதான். ஆனாலும், தர்மபுரி மாவட்டத்தின் கடைமடையான ஓசூரில் வேலை பார்க்கிறேன் என்பது மட்டும்தான் ஆறுதல். ஆனா, இப்போ அதையும் பிரிச்சு கிருஷ்ணகிரி ஆக்கிட்டாங்க.

ஊரோ, தேசமோ தன்னைத்தானே பிரிச்சுக்கிறது இல்லை. எல்லாமே நிர்வாக வசதிக்காக செய்யப்படுற எல்லைப் பிரிப்புகள்தான். ஆனா, வீடோ, தேசமோ பிரிகிறப்போ, அங்க பௌதீக பிரிவு மட்டும் இல்லாம, மனங்களும் பிளவுபடுது. ஊர்களை வெட்டுறதை போல ஒட்டுறதும் சாத்தியப்பட வேணும்னு ஒரு குழந்தையைபோல ஆசைப்படுறேன். அதனாலதான் என்கிட்ட யாராவது எந்த ஊர்னு கேட்டா, 'பூமி’ அல்லது 'பேரண்டம்’னு சொல்லத் தோணுது!''  

சந்திப்பு: எஸ்.ராஜாசெல்லம், படங்கள்:எம்.தமிழ்ச்செல்வன்

என் ஊர்!