Published:Updated:

காக்கா குளியல்... கான்க்ரீட் மெசேஜ்!

காக்கா குளியல்... கான்க்ரீட் மெசேஜ்!

##~##

மூன்றாவது உலகப் போர் தண்ணீருக்காக மூண்டாலும் ஆச்சர்யம் இல்லை. அந்த அளவுக்குக் கொஞ்சமே கொஞ்சம் பூமியில் ஒளிந்து இருக்கும் நீர் வளத்தைக் கபளீகரம் செய்து வருகிறது மனித இனம்! இதை மனதில் வைத்தோ என்னவோ, மிகவும் தொலைநோக்காக ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளிக்கச் சொல்லித் தருகிறார் தர்ம புரி,நாயக்கன் கொட்டாயைச் சேர்ந்த கோவிந்த ராஜ்.

 இவர்,  ஆராய்ச்சியாளரோ, பேராசிரியரோ இல்லை. ஆடு மேய்க்கும் சம்சாரி. சந்திக்கச் சென்றபோது நாயக்கன்கொட்டாய் அரசு ஆரம்பப் பள்ளியில் விழிப்பு உணர்வுக் குளி யல்(!) நடத்திக்கொண்டு இருந்தார்கோவிந்த ராஜ். ''கண்ணுங்களா... தண்ணிக்காக நாம எவ்வளவு கஷ்டப்படுறோம். இந்தத் தர்மபுரியில சுத்தமான தண்ணீர் இல்லை. ஃபுளோரைடு கலந்த தண்ணீர்தான். அதனால, தண்ணியை எப்படிச் சிக்கனமாப் பயன்படுத்துறதுனு சொல்லித் தர்றேன்'' என்பவர், ஒரு வாளியில் ஒன்றரை லிட்டர் தண்ணீரை அளந்து எடுத்துக் கொள்கிறார். முதலில் அரை டம்ளர் தண்ணீரை தலையில் ஊற்றி தலையில் ஷாம்பு தேய்த்து நுரை பொங்கத் தேய்க் கிறார். பிறகு ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, தலையை அலசிக்கொள்கிறார். தொடர்ந்து இன்னொரு டம்ளர் தண்ணீர் தலைக்கு அர்ப்பணம். ''ஷாம்பு சுத்தமாப் போகணும்... இல்லாட்டி உடம்புக்குக் கெடுதல்!'' என்பது இடையே வந்து விழும் டிப்ஸ். இரண்டரை டம்ளர் தண்ணீரில் தலைக் குளியல் முடிந்திருக்க, அந்த ஈரத்திலேயே உடல் மொத்தமும் நனைந்து இருந்தது.

காக்கா குளியல்... கான்க்ரீட் மெசேஜ்!

சோப்புப் போட்டு உடலை நன்றாகத் தேய்த்தவர், இரண்டு டம்ளர் தண்ணீரில் முகம் உட்பட உடல் முழுவதையும் தண் ணீரால் கழுவுகிறார். ஐந்து நிமிடங்களில் மொத்தக் குளியலும் முடிந்து, வாளியில் ஒரு டம்ளர் தண்ணீர் மிச்சம் வேறு இருக்கிறது. குழந்தைகளிடம் இருந்து செம க்ளாப்ஸ்!    

இவரை ஊக்குவிப்பது அந்தப் பள்ளியின் ஆசி ரியர் கனகராஜ். ''குடும்பச் சூழல் காரணமாக படிப்பை ஐந்தாவதுடன் நிறுத்திய கோவிந்தராஜ், ஆடு மேய்க்க காடு மேடாப் போவார். வெக்கை தாங்காம சுரைக் குடுவையில் கொண்டுபோன தண்ணீரில் மதிய நேரத்தில் காக்கா குளியல் போடுவார். இந்த விஷயத்தை என்கிட்ட சொன் னப்பதான், சிக்கனக் குளியல் எண்ணம் உதித்தது. சமீபத்தில் 'சிறு துளி’ அமைப்பு சார்பாக, கோவையில் கோவிந்தராஜை மேடை ஏத்துனாங்க. அங்கே ஒரு லிட்டர் தண்ணீரிலேயே சுத்தபத்தமா குளிச்சுக் காட்டினார்!'' என்கிறார் உற்சாக மாக!

  - எஸ்.ராஜாசெல்லம்,படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு