Published:Updated:

நீலமூஞ்சி வில்லன் ராக்ஸ்! - எக்ஸ் மென் : அபோகலிப்ஸ்

Vikatan Correspondent
நீலமூஞ்சி வில்லன் ராக்ஸ்! - எக்ஸ் மென் : அபோகலிப்ஸ்
நீலமூஞ்சி வில்லன் ராக்ஸ்! - எக்ஸ் மென் : அபோகலிப்ஸ்

முன்குறிப்பு : எக்ஸ்-மென் படங்களின் முந்தைய பாகங்களை பார்த்தவர்கள் மட்டும் , படம் பார்த்தல் நலம். இல்லையெனில், சின்னத்தம்பி பட கவுண்டமணி போல் தனியாக கை தட்ட வேண்டியதிருக்கும். ஆனால், படத்தை பார்ப்பவர்களுக்கு முந்தைய பாகங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை நிச்சயம் தூண்டுகிறது எக்ஸ்-மென் அபோகலிப்ஸ்.

அபோகலிப்ஸ் படத்தின் முதல் ட்ரெய்லரில், ராம், கிருஷ்ணா,யாவுஹே என பல முறை இந்த உலகில் அவதரித்து இருக்கிறேன் என வில்லன் வசனம் பேச, பெரும் சர்ச்சையை கிளப்பியது. நீலக்கலர் வில்லன் தான் ராமரா என வட இந்தியாவில் இணைய ரீதியான புரட்சி வெடித்தது. சில ஆயிரம் வருடங்களுக்கு முன் எகிப்த்தை முதல் மியூட்டன்ட் En Sabah Nur என் சபா நுர் ஆள்கிறார். உடன் இருப்பவர்கள் செய்யும் துரோகத்தால், அவர் நினைத்தது நிறைவேறாமல், உயிரோடு புதைந்துவிடுகிறார்.1983-ம் ஆண்டு அவர் மீண்டும் எழ, 'எப்படி இருந்த உலகம் இப்படி ஆயிடுச்சு என வருத்தப்பட்டு' அதை அழித்துவிட்டு மீண்டும் கட்ட முயற்சிக்கிறார். இதை எக்ஸ்-மென் குழு முறியடித்தார்களா என்பதே X-Men: Apocalypse எக்ஸ்-மென்: அபோகலிப்ஸ் படத்தின் கதை.

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான எக்ஸ்-மென்: டேஸ் ஆஃப் ப்யூச்சர் பாஸ்ட் 1973 காலகட்டத்தில் நடந்தது. இன்று வெளியான அபோகலிப்ஸ் 1983-ம் ஆண்டு நிகழும் விதம் எடுக்கப்பட்டிருக்கிறது . மேக்னெட்டோ (மைக்கல் ஃபாஸ்பெண்டர் ) அவரது சக்திகளை மறைத்து, மனைவி, குழந்தை சகிதமாக போலாந்தில் தஞ்சம் புகுந்து இருக்கிறார். முதல் இரு பாகங்களில் அசத்திய ஸ்காட்டை , சார்லஸின் பள்ளியில் சேர்க்க வருகிறார் ஸ்காட்டின் அண்ணன் அலெக்ஸ் சம்மர்ஸ்(ஐந்தாவது பாகத்தில் நெஞ்சில் இருந்து நெருப்பு விடுவாரே அவர்). சிறுவயது ஜியன் க்ரேவாக , கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் சான்சா ஸ்டார்க் அசத்தியிருக்கிறார். வில்லனை இறுதியில் கொல்லும் ஹீரோவே சான்சா தான். முந்தைய பாகங்களில் ஸ்டார்மாக அசத்திய ஹாலே பெர்ரிக்கு, பதிலாக அலெக்ஸான்ரா ஷிப் நடித்து இருக்கிறார். மிஸ்டிக்காக ஜெனிஃபெர் லாரென்ஸ் இந்தமுறை சார்லஸ் அணியில் இணைகிறார்


நீல மூஞ்சி வில்லன் ' 4 ஹார்ஸ்மென் ' படையை (ஸ்டார்ம்,ஆஞ்சல், சைலாக், மேக்நெட்டோ ) உருவாக்கி உலகை அழிக்க ஆரம்பிக்க; மறுமுனையில் எக்ஸ்-மென் படை தன்னால் முடிந்தவரை அவரோடு போராடுகிறது.

டேஸ் ஆஃப் ப்யூச்சர் பாஸ்ட்டில்  பலருக்கும் பிடித்த காட்சி, ஒரு அறைக்குள் க்விக்சில்வர் மின்னல் வேகத்தில் செய்யும் சாகசங்கள் தான். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், அதே ரீதியில் ஒரு காட்சியை இந்தப்படத்திலும் வைத்து இருக்கிறார். படத்தின் காமெடியன், ஸ்ட்ரெஸ் பஸ்டர் எல்லாமே க்விக்சில்வர் தான். படத்தின் மற்றுமொரு ட்விஸ்ட் க்விக்சில்வர் மெக்நெட்டோவின் மகனாம்.(நம்புங்க பாஸ்). ஒரே நிமிடமே வந்தாலும், எக்ஸ்-மென் ரசிகர்கள் ஸ்ட்ரைக்கரின் அந்தக் கட்டிடத்தில் காட்டியதில் இருந்தே குஷியாகிவிட்டார்கள். பெட்டி திறக்கப்பட்டு, வோல்வரீன் வெளிவரும்போதெல்லாம், சில்வர் கைகளில் சில்லறைகளை சிதறவிட்டனர் வோல்வரின் ரசிகர்கள்.

எல்லா பாகங்களையும் 99.99% இணைத்து ரசிகர்களுக்கு நோஸ்டால்ஜியா ஃபீல் கொடுத்த இயக்குனர், எழுத்தாளர் ப்ரையன் சிங்கருக்கு ஒரு பூங்கொத்து.இருந்தாலும் ,இந்த நீல மூஞ்சி வில்லன், கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இருந்தால், படம் இன்னும் கலக்கலாக வந்து இருக்கும்.


Watch:  X Men Apocalypse Trailer: