Published:Updated:

நிலத்தில் மட்டுமல்ல... நீரிலும் யோகா!

நிலத்தில் மட்டுமல்ல... நீரிலும் யோகா!
நிலத்தில் மட்டுமல்ல... நீரிலும் யோகா!


 

யோகா செய்திட யோகம் வேண்டும் என்பார்கள். அந்த வகையில்  அம்ருதா பெரிய அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். யோகா பயிற்சியில்  பத்து வயதில் ஆரம்பித்த ஆர்வம், இன்றைக்கு அம்ருதாவை பெரும் சாதனைகளுக்குச் சொந்தக்காரராக ஆக்கியிருக்கிறது. யோக சாஸ்திரத்தின் மூலங்களை விதைத்த பதஞ்சலி முனிவருக்கு, நடராஜப் பெருமானின் தரிசனம் கிடைத்த சிதம்பரம்தான் இவருடைய பிறந்த ஊர் என்பது கூடுதலான விசேஷம்!
 

2013-ல்,  ஏழு நிமிடங்கள் 'லகு வஜ்ராசனம்' செய்து லிம்கா ரெக்கார்ட் செய்தது, அடுத்த வருடமே 20 நிமிடங்களுக்கு அந்த ஆசனத்தைச் செய்து, தனது ரெகார்டை தானே முறியடித்தது... என நீள்கிறது இவரது சாதனைப் பட்டியல். எனினும் பேச்சிலும் பழக்கத்திலும் அப்படியொரு அடக்கம், அமைதி!
 

‘‘எல்லாம் யோகா செய்த மாயம்’’ என்று விழிகள் விரிய சிரிக்கிறார் அம்ருதா.
 

சொல்லுங்க... யோகால ஆர்வம் எப்படி...?
 

“சின்னவயசுல அம்மாக்கிட்ட கத்துக்கிட்டதுதான். கரெக்டா சொல்லணும்னா பத்து வயசுல ஆரம்பிச்சது. விளையாட்டாதான் துவங்கினேன் என்றாலும், மனசுலேயும் உடம்பு ரீதியாவும் அப்படியொரு பிட்னஸ்! விளையாட்டோ, படிப்போ எந்த விஷயமா இருந்தாலும் ரிசல்ட்டில் ஒரு துல்லியம் இருந்துச்சி. எல்லாத்துக்கும் காரணம் யோகாதான்னு உணர ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் யோகாவில் அதிகம் கவனம் செலுத்த துவங்கினேன். அதுமட்டுமில்லாம, ஆரம்பத்துல யோகா சம்பந்தமா நான் கலந்துக்கிட்ட போட்டிகள்ல அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகளும் உந்துதலா இருந்துச்சின்னு சொல்லலாம்!’’ என்றவர், ‘‘யோகாவில் தன் குரு நடராஜன் சார்’’ என்கிறார் பயபக்தியோடு.

அடுத்து அம்ருதாவிடம் அவரது சாதனைகள் குறித்து கேட்டோம்.
 

‘‘நிறைய போட்டிகள்... நிறைய பதக்கங்கள். 2013-ல் விளையாட்டா ஒரு விஷயம் செய்தேன். அதுவே சாதனையாயிடுச்சு’’ என்று ஒரு குழந்தையின் குதூகலத்தோடு சிரித்தவர், தொடர்ந்தார்.
 

‘‘லகு வஜ்ராசனம்னு சொல்வாங்க. அந்த ஆசனத்தை 7 நிமிடங்கள்  செய்தது, 2013-ல் லிம்கா ரெக்கார்ட் ஆனது. அடுத்த வருடம் அதே ஆசனத்தை 20 நிமிடங்களுக்குச் செய்து, முந்தைய வருட ரெகார்டை நானே பிரேக் செய்தேன்’’ என்கிறார் பெருமிதத்தோடு.
 

லகு வஜ்ராசனம் - பெயரே ஈஸியா செய்யலாம்னு சொல்லுதே. அப்புறம் எப்படி...?


நமது சந்தேகத்தைப் புரிந்தகொண்டவராக புன்னகைத்தவர், ‘‘சின்னப் பசங்க அதாவது சிறு வயதில் செய்வதற்கு ஈஸியா இருக்கும். டீன் ஏஜ்லயும், பெரியவங்களும் பண்றது கஷ்டம்’’ என்றவர், தனது அடுத் தடுத்த சாதனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
 

‘‘2015 மே மாதம், 2 மணி 45 நிமிடங்களில் 1008 ஆசனங்கள் செய்து, இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், தமிழ்நாடு புக் ஆஃப் ரெகார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்ல எல்லாம் இடம்பெற்றது மறக்க முடியாதது. குறிப்பா ‘வேகன் மாரத்தான்’!’’ என்றவரை இடை மறித்தோம்.
 

அதென்ன வேகன் மாரத்தான்?
 

‘‘இயற்கை உணவின் அவசியத்தை உணர்த்தும் ஒரு முயற்சியாக, தொடர்ந்து 27 மணி நேரம் யோகாவில் ஈடுபட்டது!’’ என்று கூறி சிரித்தவர் தொடர்ந்தார்.
 

‘‘ஒருமுறை வேகன் டயட் குறித்த அவசியத்தைப் பற்றி விவரித்த கடலூரைச் சேர்ந்த இயற்கை உணவு ஆர்வலரான சி.கே.அசோக்குமார் சார், வேகன் டயட் மூலம் சர்க்கரை நோய், புற்று நோயையெல்லாம் பூரணமா குணமாக்க முடியும்னு சொன்னார். அதாவது நான்வெஜ் மட்டுமல்ல, பால்பொருட்கள் கூட சேர்க்காம, சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வதுதான் வேகன் டயட். அசோக் சார் சொன்னது மனசில் அழுத்தமாக பதிஞ்சு போச்சு. என்னோட அப்பாவுக்கு சுகர் பிரச்னை, கொலஸ்டரால் அளவில்  நிறைய பிரச்னைகள் இருக்க, அவர் வேகன் டயட் ட்ரை பண்ணார். ரிசல்டும் நல்லா கிடைச்சது. இதை மற்றவங்களுக்கும் கொண்டு சேர்த்தால் நல்லாருக்குமேன்னு தோணுச்சு.
 

ஏற்கெனவே எங்க அம்மா, அவங்களோட கிளாசஸ்ல இதுபற்றி தொடர்ந்து சொல்லிக்கிட்டுதான் இருகாங்க. ஆனாலும், இதுகுறித்து  ஏதேனும் ஒருவகையில் சட்டுன்னு ஒரு கவன ஈர்ப்பு கொடுக்கலாமேன்னு    தோணுச்சி. அப்போதான் ஒரு விழிப்பு உணர்ச்சி நிகழ்வா ‘27 மணி நேரம் யோகா’ ஆக் ஷனை கையில் எடுத்தேன். அம்மாக்கு முதல்ல தயக்கம் இருந்தது. பிறகு அனுமதிச்சாங்க. அசோக்குமார் சாரும் உதவி பண்ணினார். அந்த ஆக் ஷன் சக்ஸஸ் ஆகி, நிறையபேரை கவனிக்க வெச்சதில் ரொம்ப சந்தோஷம்’’ என்று  சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் அம்ருதா.

அதற்குமுன்னதாக தானும் ஒரு ‘ரா வேகன்’ (raw vegan) ஆக,  ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.
 

இப்போது இணையதளம் மூலம், எல்லோருமே  தினமும் 30 நிமிடம் யோகா செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி வரும் அம்ருதா, 20 நாடுகளில் உள்ள, யோகாவில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் சிலருமாகச் சேர்ந்து யூடியூப் சேனலில், தங்களின் ரெகார்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் ஜூரிகளின் கவனத்தைப் பெற்று, இந்தத் துறையில் மென்மேலும் வளரமுடியும் என்கிறார் அம்ருதா.


எதிர்கால பிளான் என்ன என்று கேட்டால், ‘‘ஆக்வா யோகா’’ என்று பளிச்சென பதில் வருகிறது அம்ருதாவிடம் இருந்து.
 

‘அக்வா யோகா என்றால்..?
 

நீரில் யோகாசனம்... இதற்கான பயிற்சியில் இருக்கிறார் அம்ருதா. பூமியில் யோகா செய்யும்போது உடலின் சில பாகங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு வலியுண்டாகும். ஆனால் நீரில் செய்யும்போது உடல் இலகு வாகிவிடுவதால் பயிற்சியும் எளிதாகும்’’ என்கிறார் அம்ருதா.

இதற்கு, வெளிநாட்டில் உள்ள தோழி ஒருவர் உதவி செய்வதையும் நன்றியோடு பகிர்ந்துகொண்டவர், கின்னஸிலும் ரெக்கார்ட் பண்ணவேண்டும் என்ற தனது எதிர்கால கனவையும் கூறினார்.
 

" நிச்சயம் சாதிப்பீங்க..." என வாழ்த்தி விடைபெற்றோம்!

- சுபாகண்ணன்
படங்கள்: எஸ்.தேவராஜ்