Published:Updated:

''பிறர் நலன் பேணுவதே உண்மையான வழிபாடு!''

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

''பிறர் நலன் பேணுவதே உண்மையான வழிபாடு!''

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

Published:Updated:
''பிறர் நலன் பேணுவதே உண்மையான வழிபாடு!''
##~##
''ஆ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்மிகம் என்ற சொல் ஆன்மாவிலிருந்து முகிழ்த்துள்ளது. ஆன்மா என்பது உயிர். சமைத்தல் என்ற சொல்லில் இருந்து தோன்றியதுதான் சமயம் என்ற சொல். உண்ணமுடியாத பொருட்களை உண்ணுவதற்கு ஏற்ப சமைத்துப் பக்குவப் படுத்துவதைப்போல, உடலில் உயிரைப் பக்குவப்படுத்துவது சமயக் கோட்பாடு!'' - அர்த்தங்களோடு ஆரம்பிக்கிறார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். 

''நம் சமய வாழ்க்கை உடல் நலம் பேணும், உயிர் நலம் பேணும் வாழ்வை வலியுறுத்துகிறது. 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்கிறது திருமந்திரம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நமது தமிழ் வழக்கு. இதைத்தான் ஒரு தமிழ்ப்பாடல் மிக அருமையாகச் சொல்கிறது...

'அரும்பு கோணிடில் மலராகும்!
இரும்பு கோணிடில் கலன் ஆகும்!
கரும்பு கோணிடில் பாகு ஆகும்!
நரம்பு கோணிடில் நாமென் செய்குவோம்!’

உடல் நலத்தைப் பேணுவதன் அவசியத்தை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது. நம் திருக்கோயில்களில் பல மலை உச்சியிலும் கடற் கரை ஓரத்திலும் ஆற்றங்கரை ஓரத்திலும் வளமான வயல்வெளிப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன. கோயில்களின் அகன்ற மதில் சுவர்களும் திறந்த விசாலமான வெளிச் சுற்றுகளும் தூய்மையான காற்றை அள்ளி வருகின்றன. வழிபாடு முடிந்ததும் திருக்கோயில் தரையில் சிறிது நேரம் அமர்ந்து எழுந்திருக்கும் வழக்கம்கூட அங்குள்ள சுத்தமான காற்றை சுவாசித்து ஆரோக்கியமடைவதற்காக வந்த வழக்கம்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

''பிறர் நலன் பேணுவதே உண்மையான வழிபாடு!''

இறைவனை மனத்தில் இறுத்தி கோயிலின் திருச் சுற்றில் நல்ல காற்றை சுவாசித்தபடி நீண்ட தூரம் நடப்பது உடலுக்கான இயல்பான பயிற்சி. அந்த நேரத்தில் மனம் இறைவனை மட்டுமே சிந்திப்பதால், மன ஒருமைப்பாடும் ஏற்படுகிறது. ஆன்மிக வழியில் சொன்னால் இதைத் தட்டாமல் செய்து மக்கள் தங்களின் உடம்பை அனிச்சையாய் ஆரோக்கியப்படுத்திக்கொள்வார்கள் என்பதும் இதில் பொதிந்து கிடக்கும் உண்மை!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை அதிகாலையில் மூன்று முறை சுற்றி வந்தால் உடற்பயிற்சி! அப்போது மனதானது புறச்சிந்தனைகளை தவிர்த்து இறைவனை நோக்கி சிந்திப்பதால் அகப்பயிற்சியும் கிடைக்கிறது. இறைவனை வழிபடுகிற சாக்கில் மலை ஏறுவதும் கடற்கரைக் காற்றை உள்வாங்கிக் கொள்வதும்கூட உடல் ஆரோக்கியம்தான்! ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தல விருட்சங்கள் இருக்கின்றன. ஊர் தோன்றுவதற்கு முன்பு அந்த தல விருட்சங்கள்- மரங்கள் நிறைந்த வனமாக இருந்திருக்கும். நமக்குத் தேவையான உயிர்க்காற்றைக் கொடையாகக் கொடுக்கும் மரங்களையும், சுற்றுச்

சூழலைப் பாதுகாக்கும் மரங்களையும், பாதுகாக்கச் சொல்கிறது இன்றைய அறிவியல் உலகம். ஆனால், இதைத்தான் அந்தக் காலத்திலேயே தல விருட்சங்கள் என்ற பெயரில் மரங்களை புனிதமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது ஆன்மிக உலகம்.

'அட்டாங்க யோகம்’ (பிரணாயாமம்) என்று சொல்லப்படுகின்ற மூச்சுப் பயிற்சிகூட இறை வழிபாட்டின் ஓர் அங்கமே! கோயில்களில் செய்யப்படும் சரியை என்று சொல்லப்படுகின்ற உளவாரப் பணிகளும் தேகத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கக் கூடியவை. இறை வழிபாட்டின் அடுத்த நிலை தியான பயிற்சி. புற சிந்தனையிலிருந்து மனதை விடுவித்து அக சிந்தனையாக இறைவனை எண்ணுவதே தியானம். இது, உளவியல் மேம்பாட் டுக்கும் மனநலத்துக்கும் நமது சிந்தனை செயலாற்ற லுக்கும் ஊக்குவிப்பாக அமைகிறது.

திருக்கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதமும் ஆரோக்கியத்துக்கான அருமருந்துதான். சுண்டல், பருப்பு உள்ளிட்ட தானிய பிரசாதங்களில் புரதம் பொதிந்திருக்கிறது. துளசி தீர்த்தம், வில்வ தீர்த்தம் எல்லாம் நோய் தீர்க்கும் மருந்துகள். வைத்தீஸ்வரன் கோயிலில் தரப்படும் திருச்சாந்து உருண்டையை தொடர்ந்து 45 நாட்கள் உண்டு வந்தால் தீராத வயிற்றுவலியும் தீர்கிறது. பழநி உள்ளிட்ட தலங்களில் இறைவனுக்குச் சாற்றப்பட்டு வழங்கப் படும் சந்தனக் குழம்புகள் நோய் தீர்க்கும் மருந்தாக  இருக்கின்றன!'' -அர்த்தமுள்ள புன்னகையுடன் தொடர்கிறார் அடிகளார்.

''பிறர் நலன் பேணுவதே உண்மையான வழிபாடு!''

''மார்கழியில் சைவ, வைணவ கோயில்களில் முறையே திருப்பாவை, திருவெம்பாவை வழிபாடுகள் நடைபெறும். மார்கழி மாதத்தில் ஓசோன் படலமானது பூமிக்கு அருகில் வரும். அப்போது பனிபடர்ந்த அதிகாலையில் உடலையும் உயிரையும் வாட்டுகிற அளவுக்கு குளிர் நிலவும். அதனை விரட்டி நன்நீரில் நீராடி இறைவனின் திருநாமத்தையே சிந்தித்து பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டே பெண்கள் வீதிவலம் வருவது இயற்கையோடு சம்பந்தப்பட்ட ஆன்மிகம். சஷ்டி விரதம் உள்ளிட்ட இறைவனின் பெயரால் மேற்கொள்ளப்படும் கடுமையான விரதங்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. ஒருவேளை உணவை எடுத்துக்கொண்டோ அல்லது மூன்று வேளையும் உண்ணாமல் இருந்தோ இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பது உடலின் இயக்கத்துக்கு சீரான பயிற்சியாக அமைகிறது. இந்த விரதங்களால் உடலில் உள்ள நச்சுக்களும் தேவையற்ற கழிவுகளும் வெளியேறி, உடம்பு ஆரோக்கிய நிலையை அடைகிறது.

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு ஆது ஆமே!

- இந்தத் திருமந்திரப் பாடலின் அர்த்தம் என்ன தெரியுமா? ஆண்டவனுக்கு மட்டுமே செய்வது, நடமாடும் கோயிலாய் இருக்கும் அடியவர்க்குச் செய்தது ஆகாது. அடியவர்க்கு ஒன்று கொடுத்தால் அது ஆண்டவனுக்கே கொடுத்தது ஆகும்!

அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இதய நோயாளி கணவன் உயிர் பிழைக்க அவனது மனைவி இறைவனை வேண்டுகிறாள். 'இறைவா எனது மாங்கல்யத்தை காப்பாற்றிக் கொடு; உனக்கு என் வீட்டுப் பசு மாட்டை தானமாகத் தருகிறேன்’ என்று. இறைவனின் அருளோ மருத்துவ மகிமையோ தெரியவில்லை... அவளது தாலி காப்பாற்றப்படுகிறது. அப்போது தனது வேண்டுதல் பற்றி மெதுவாய் சொல்கிறாள் மனைவி. அதைக் கேட்டு மீண்டும் இதயத் தாக்கு வந்துவிடும் அளவுக்கு அவனுக்கு கோபம் வருகிறது. 'யாரைக் கேட்டு நீ வேண்டுதல் வைத்தாய்? வேறு ஏதாவது சிறிய பொருளை காணிக்கை தருவதாக வேண்டி இருக்கலாமே’ என்றவன், பசுவையும் தன் வீட்டுப் பூனைக்குட்டியையும் எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போனான். 'பசுவின் விலை ஒரு ரூபாய்’ என்று கூவியவன், 'இந்த பசுவை வாங்குபவர்கள் இதன் பாலைக் குடித்து வளர்ந்த பூனையையும் வாங்க வேண்டும்; பூனை விலை மூவாயிரம் ரூபாய்’ என்றான்.

''பிறர் நலன் பேணுவதே உண்மையான வழிபாடு!''

இதற்குச் சம்மதித்து இரண்டையும் ஒருவன் வாங்கினான். கோயிலுக்குப்போய், 'பசு விற்ற காசு ஒரு ரூபாய்’ என்று சொல்லி கோயில் உண்டியலில் ஒரு ரூபாயை போட்டுவிட்டு, வீட்டுக்கு நடையைக் கட்டினான் கணவன். அவன் போவதற்குள்ளாக அவன் விற்ற பூனை வீட்டில் இருந்தது. அதை வாங்கியவனோ, 'இந்தப் பூனை உன் வீட்டிற்கே வந்துவிட்டது. நீதான் அதை எனக்குப் பிடித்துக் கொடுக்க வேண்டும்’ என்றான். பூனையை பிடிப்பதற்காக வேகமாக ஓடியவன் வழுக்கி விழுந்தான்; மீண்டும் இதயத் தாக்கு!

மருத்துவமனையில் மருத்துவர் ஒரு மருந்தை எழுதிக் கொடுக்கிறார். 'இதன் விலை என்னவாக இருக்கும்?’ என்கிறாள் அவனது மனைவி. 'மூவாயிரம் இருக்கும்’ என்கிறார் மருத்துவர். ஆண்டவன் தனது கணக்கை நேர் செய்து கொண்டான். ஆண்டவனை ஏமாற்ற நினைத்த மானிடன் ஏமாந்து போனான்.

வழிபாடு என்பது கொடுக்கல் வாங்கலோ வர்த்தக பேரமோ இல்லை; உடலையும் உள்ளத் தையும் மேம்படுத்துகிற பயிற்சி.

காசிக்குப் போய் நீராடிவிட்டு, காரைக்குடிக்கு வந்து, 'பக்கத்து வீட்டுக்காரன் இன்னுமா நல்லா இருக்கான்?’ என்று கேட்பது ஆரோக்கியமான ஆன்மிகம் இல்லை. தன்னலமற்று பிறர் நலம் பேணுகின்ற சிந்தனையே உண்மையான வழிபாடு. அந்த வழிபாடு நம்மையும் உலகையும் நலமாக வளமாக வாழவைக்கும்!'' - வாழ்வியல் மந்திரங்களை வழங்கி ஆசி கொடுத்து அனுப்புகிறார் அடிகளார்.

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism