பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!
##~## |
'''எல்லோரும் மையை வைத்துப் பாட்டு எழுதியபோது, பட்டுக்கோட்டை மட்டும் பாட்டாளிகளின் வியர்வையை வைத்துப் பாட்டு எழுதி னான்’ என்பார்கள். அதுபோலவேதான் விகடனும்... வெறும் மையை மட்டுமே வைத்து எழுதாமல் நேர்மை, உண்மையை வைத்து எழுதுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் அரணையூர் என்ற கிராமம். நாளிதழ்களே வராத பகுதி. இளையான்குடியில் கல்லூரி படித்த சமயம்தான், நூலகத்தில் விகடன் படிக்கக் கிடைத்தது. அப்போது எனக்கு சிறுகதைகள், திரைப் படங்கள் குறித்தான செய்திகளில்தான் அதிகத் தாக்கம்.
சென்னையில் சினிமா வாய்ப்புக்காக அலைந்த காலங்களில், விகடன் எனக்குப் பெரிய துணை. 76, அபிபுல்லா சாலையில் உள்ள அறிவுமதி அண்ணன் அலுவலகத்தில், நான், என் சகோதரர்கள் செல்வபாரதி, பழனிபாரதி, தம்பிகள் முத்துக்குமார், தபூசங்கர் ஆகியோர் ஒரு குடும்பமாக இருந்தோம். அண்ணனின் அறையில் எங்களுடன் விகடனும் ஓர் அங்கம்!

அதில் அண்ணனின், பழனிபாரதியின் கவிதைகள் வரும். தேர்வு எழுதிவிட்டுக் காத்திருக்கும் மாணவனைப்போல, திரைப்படங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் தருகிறார்கள் எனப் பார்க்கக் காத்திருப்போம்.
'ஒரு காட்சியின் தொடக்கமும் முடிவும் சிறுகதைபோல் இருக்கணும்’ என விகடனில் சுஜாதா அவர்கள் சொன்னது நினைவில் இருக்கிறது. விகடனில் வரும் தாக்கம் உள்ள சிறுகதைகளைத் துண்டித்துத் தனியாக எடுத்துவைக்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. விகடனில் வந்த பல துணுக்குகள் திரைப்படங்களில் காட்சிகளாக வைக்கப்பட்டு உள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம்!
ஊடகத்துக்கு என உள்ள நேர்மையை விகடன் ஒருபோதும் தாழ்த்திக்கொண்டதே இல்லை. ஆட்சி அதிகாரத்திடம் பணிந்து, ஊடகத்துக்கான சத்திய நேர்மையை அது ஒரு போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் ஈழப் போராட்டம் அதிக பட்சத் தகிப்புடன் பற்றியெரிந்த சமயம், விகடன் எடுத்த மிக உறுதியான நிலைப்பாடு மலைக்க வைக்கிறது. செய்திகளைச் சொல்வதற்கே தயங்கிப் பயந்து இருந்த காலகட்டத்தில், விகடன் துணிந்து சொன்னது. 'இது பணம் சம்பாதிப்பதற்கான வர்த்தகம்’ என்பதைத் தாண்டி, விகடன் உணர்வு பூர்வமாக உளமார நின்றதாகத்தான் நான் கருதுகிறேன்.
விகடனில் முதன்முதலில் என் நேர்காணல் எப்போது வந்தது என நினைவில் இல்லை. ஆனால், தலைவர் பிரபாகரனுடன் நான் இருக்கும் புகைப்படங்களுடன் வந்த பேட்டி என் வாழ்வில் மறக்க முடியாதது. தலைவர் பிரபாகரன் பேரைச் சொல்ல, எழுதத் தடை என்று இருந்த காலத்தில், தலைவருடன் நான் இருந்த படத்தை விகடன் துணிவோடு அட்டையிலேயே வெளியிட்டது.
நான் தனி மனிதன். எதையும் சந்திப்பேன். ஆனால், தமிழகச் சூழ்நிலையில் ஓர் ஊடகம் இப்படித் துணிவோடு செயல் படுவதுதான் பாராட்டுக்கு உரியது. இப்போதும் பல தமிழ்த் தம்பிகள் தங்கள் அலைபேசிகளில் நானும் தலைவரும் சேர்ந்து நிற்கும் படத்தைத்தான் வைத்திருக்கிறார்கள்!
அந்தப் பேட்டியைப் பார்க்கும்போது, படிக்கும்போது எல்லாம் என் நினைவுகள் தலைவரைச் சந்தித்த அந்த உன்னதத் தருணங்களில் மீண்டும் பயணிக்கும். இருவரும் சீருடையில் நின்றபடி போர்ப் பயிற்சி எடுத்தது, துப்பாக்கி பிடித்து அவர் எனக்கு சுடக் கற்றுத்தந்தது என ஏகப்பட்ட நினைவலை கள். சீருடை அணிந்து நின்ற என்னைப் பார்த்து பொய்ப் பொறாமையில், 'யோவ், தம்பி எப்புடி கிண்ணுனு இருக்கான் பாருய்யா. என்ன... நமக்குத்தான் வண்டி கொஞ்சம் பெருத்துடுச்சி’ என்று அவர் தன் வயிறு தடவி சிரித்தது என அந்த நேர்காணல் என்னுள் பல நினைவுகளைக் கிளறும்.
பெரியார் பாதையில் வளரும் என் போன்றோருக்கு ஊடகங்களின் மீது பொதுவாக வெறுப்புதான் இருக்கும். அதுவும் சமயங்களில், 'இது பார்ப்பனர் பத்திரிகை’ என்று முதல் பார்வையிலேயே நிராகரிப்பதுகூட நிகழும். அந்தப் பார்வையை உடைத்தது விகடன். வெறும் அரசியல் செய்தி, திரைப்படச் செய்தி என இல்லாமல், இலக்கியம், வேளாண்மை மீதான அக்கறை, அணு உலை பிரச்னை பற்றி ஆராய்வது, ஊழல், சுரண்டல் பற்றிச் சிந்திப்பது என விகடன் பயணிக்காத தளங்களே இல்லை.
இன்றும் அதில் ஒரு கதையோ, கட்டுரையோ, கவிதையோ வருவது என்பது பெரும் அங்கீகாரம். இத்தனை ஆண்டுகளாக ஈட்டிய நற்பெயரையும் நன்மதிப்பையும் தக்கவைப்பதற்கான, சரிவையே சந்திக்காமல் தொடர்ந்து இயங்குவதற்கான எரிபொருளை, தன் நேர்மையில் இருந்தே விகடன் சேமிக்கிறது. யார் தவறு செய்தாலும் குறிப்பிட்டுச் சுட்டும் விகடனின் விடாப்பிடி நேர்மை எனக்குப் பிடித்தது.
விகடனில் உள்ள தம்பிமார்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு எனக்குப் பழக்கப்பட்டவர்களாக இருந்தாலும், நாளைக்கு நானே ஏதேனும் தவறு இழைத்தால்... என்னைப்பற்றியும் குட்டி எழுதுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி அரசு செய்த தவறுகளை நேர்மையின் பக்கம் உறுதியாக நின்று மக்களிடம் கொண்டுசென்றது விகடன். அதிகாரத்திடம் வளைந்துகொடுக்கவில்லை. எந்த அரசு அப்படிச் செயல்பட்டா லும், விகடன் அதைச் சுட்டிக் காட்டும். பரவலான ஊடகங்கள் விருப்பு வெறுப்போடு ஒரு சார்பு நிலைப்பாடுகொண்டு செயல்படும் இந்தக் காலத்தில், 'சரி என்றால் சரி’, 'தவறு என்றால் தவறு’ என்ற விகடனின் துணிச்சல் வேறு யாருக்கும் வராது.
அரசு தொடர்ச்சியாக வன்மம்வைத்து என்னைச் சிறைப்படுத்தி, பிறகு நான் விடுதலைஆனபோது, 'திருப்பி அடிப்பேன்’ என்று எனக்குத் தொடர் எழுத ஒரு வாய்ப்பு தந்த துணிவு விகடன் குழுமத்தின் சிறப்பு. நானே பத்திரிகை நடத்தி இருந்தாலும், அதை எழுதத் துணிந்திருக்க மாட்டேன்.
ஈழக் களத்தில் யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோது, அதே யுத்த களத்தில் விகடனும் ஒரு போர் வீரனைப்போல் நின்று பயணித்தது. இந்திய அரசே அந்தப் போரை நடத்திக்கொண்டும், எல்லா ஊடகங்களும் அதை மறைத்துக்கொண்டும் இருந்தபோது, திமிறி எழுந்து ஈழக் காட்சிகளைக் கட்டுரைகளாகக் கொண்டுவந்து மக்களிடம் சேர்த்ததில் பெரும் பங்கு விகடனுக்கு உண்டு. அதன் மூலம் தன்னை இத்தனை வருடங்களும் நேசித்து வாசித்த கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நன்றிக்கடன் செலுத்திவிட்டது.
தமிழர்களுடைய தொன்மம், மரபு, வாழ்வியல் சார்ந்த படைப்பான கவிப்பேரரசுவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்’, 'கருவாச்சி காவியம்’ படைத்தது விகடன். இன்று என் தம்பி நா.முத்துக்குமாரின் 'அணிலாடும் முன்றில்’, நெல்லை கண்ணன் அய்யாவின் மகனும் என் சகோதரனுமான சுகாவின் 'மூங்கில் மூச்சு’, சமீபத்தில் நிறைவடைந்த அறிவுமதி அண்ணனின் 'மழைப் பேச்சு’ இவை எல்லாம் விகடனில் மட்டுமே எதிர்பார்க்கக் கூடியவை. விகடன் பக்கங்களைத் தொடர்ந்து அலங்கரிக்கும் அளவுக்கு நம் உடன்பிறந்தவர்கள் தரமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள் என நினைக்கும்போது பெருமிதத்தில் நெஞ்சு விம்முகிறது.

இப்படி, ஒரே சமயத்தில் பல தளங்களிலும் விகடனால் செறிவோடு பயணிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அக்கறையும் நோக்கமும் உள்ள தரமான ஆசிரியர் குழு. காஷ்மீரியப் பிரச்னையாகட்டும், தமிழீழப் பிரச்சனையாகட்டும், மீனவர் படுகொலை என எந்தப் பிரச்னையிலும் அதனுடைய பார்வையும், நோக்கமும் சரியாகவே இருப்பதற்கு இந்த இளைஞர் குழாம்தான் காரணம்.
இன்னும் பல நூற்றாண்டுகள் இதே உறுதியோடு விகடன் பயணிக்கும் என நம்புகிறேன்... விரும்பு கிறேன்... வாழ்த்துகிறேன்!''