Published:Updated:

சிறைக்குச் செல்லும் நாய்கள்!

சிறைக்குச் செல்லும் நாய்கள்!

சிறைக்குச் செல்லும் நாய்கள்!

சிறைக்குச் செல்லும் நாய்கள்!

Published:Updated:
##~##

விறைத்த காக்கி அணியும் காவல் துறையில் வியப்பை அளிப் பது துப்பறியும் நாய் படை! கஞ்சா கணேசன்களில் ஆரம்பித்து பாம் பக்கிரிகள் வரை யாரும் இவர்களிடம் இருந்து தப்ப முடியாது.  கோவையில்தான் மோப்ப நாய்களுக்கான பயிற்சி மையம் செயல்படுகிறது.

 சமீபத்தில் சிறைத் துறையில் துப்பறியும் நாய்களைப் பயன்படுத்த நினைத்த தமிழக அரசு, அதற்காக 10 நாய்க் குட்டிகளை வாங்கி கோவை பயிற்சி மையத்துக்கு அனுப்பியது.  இந்த நாய்கள் அனைத்தும் இப்போது தீவிரப் பயிற்சியில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறைக்குச் செல்லும் நாய்கள்!

மையத்தின் பயிற்சியாளரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சௌந்தரராஜனிடம் பேசினோம். ''சுமார் 225 கோடி உணர்வு செல்களைக் கொண்டது நாய். வெடி பொருள், போதைப் பொருள் மாதிரியான விஷயங்களைக் கண்டுபிடிக்கிற பணியில் நாய்களை ஈடுபடுத்தக் காரணமே, இந்த உணர்வு செல்கள்தான். ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாகப் பிரித்து நாய்கள் உணர்ந்துவிடும். பொது மக்கள் மத்தியில் கூச்சம் இல்லாமல் செயல்படுகின்ற ஜெர்மன் ஷெப்பர்டு, லேப் ராடர், டாபர்மென், கோல்டன் ரெட்ரீவர் ஆகிய நான்கு ரக நாய் களைத்தான் இந்தப் பயிற்சிக்குப் பயன்படுத்துகிறோம்.

சிறைக்குச் செல்லும் நாய்கள்!

பயிற்சி நாய்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் உண்டு. காதுகள், கண்கள், மூக்கு, கால்கள் இவை எல் லாம் சரியாக இயங்கக்கூடிய துறு துறு என்று இருக்கும் நாய்க் குட்டி களைத் தேர்வு செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவோம். கூடவே, 'கென்னல் க்ளப் ஆஃப் இந்தியா’வின் தகுதிச் சான்றிதழும் அவசியம்.  நாய்க் குட்டியின் முதல் நான்கு மாதங்கள் பயிற்சி கிடையாது. அதற்குப் பதிலாக, சிறு விளையாட்டுகள், மொழிப் பயிற்சி என்று சிறு விஷயங்களை கற்றுக்கொடுப்போம். இது கிட்டத்தட்ட ப்ரீ கேஜி போல!

நான்கு மாதம் முடிந்தவுடன், போதைப் பொருளைக் கண்டுபிடிக்க, வெடி பொருளைக் கண்டுபிடிக்க, கொலை, கொள்ளைகளில் துப்பறிய என்று தனித் தனியாகப் பயிற்சி கொடுப்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் தனி வாசனை உண்டு. தனித் தனி ரத்த வாடை உண்டு. இதை எல்லாம் மனிதர்களை முகர வைத்தும், ரத்தத் துளிகளை முகர வைத்தும் பயிற்சி அளிக்கிறோம்.

ஒரு சிமென்ட் குழாயில் கஞ்சா மாதிரியான போதைப் பொருளை எரித்து புகையை உள்ளே ஏற்றிவிடு வோம். குழாயின் ஒரு பக்கத்தை மட்டும் லேசாகத் திறந்து, பயிற்சி நாயை சுவாசிக்கவைப்போம். அந்த வாசனையைத் தன் எதிரியாக அந்த நாய் நினைக்கும் வகையிலான கமென்ட்டுகளைக் கொடுப்போம்.

சிறைக்குச் செல்லும் நாய்கள்!

எந்த ஒரு கட்டளையும் நாயின் மூளையில் பதியக் குறைந்தது 500 முறையாவது சொல்ல வேண்டும். இதேபோல்தான் வெடி பொருள் கண்டுபிடிப்புப் பயிற்சியும். போதைப் பொருளைக் கண்டுபிடித்தால், அந்த நாய் வாயால் கவ்வி இழுக்கலாம். ஆனால், வெடி பொருளைக் கண்டுபிடித்தால், அதைப் பார்த்து குரைத்துவிட்டு தள்ளி உட்காரப் பயிற்சி கொடுப்போம். இப்படி அடிப்படை பயிற்சி மூன்று மாதம், சிறப்புப் பயிற்சி ஆறு மாதம் என்று மொத்தம் ஒன்பது மாதங்கள் பயிற்சி. எட்டு ஆண்டுகள் வரை பணியில் இருக்கலாம். அதன் பிறகு ஓய்வு பெற்று, அரசு பென்ஷன் வாங்கி ஜாலியாக வாழ்க்கையை கழிக்கலாம். இப்போது பாருங்கள், இந்த ஜூனியர்ஸ் 10 பேரும் சிறைத் துறைக்குப் போகிறார்கள். இனி, எந்தச் சிறையிலும் கஞ்சா, மொபைல் போன் என எதையும்  கைதிகள் பதுக்கிவைக்க முடியாது. கைதிகள் தங்கள் செல்லுக்குள் புதைத்துவைத்தாலும் வெளியே இருந்தே அதை மோப்பம் பிடித்துவிடுவார்கள் இந்தச் சிங்கக் குட்டிகள்...'' நாய்களின் தாடையைத் தடவியபடியே பெருமையாகச் சொல்கிறார் சௌந்தர ராஜன்!

அப்படி போடுங்க... இனி, ஜெயிலுக்கு உள்ளே லஞ்சம் கொடுத்து யாரையும்  ஏமாத்த முடியாது!    

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ், ர.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism