Published:Updated:

என் ஊர்!

சுட்டெரிக்கும் வெயிலைப் பார்க்காத மண்ணு!

என் ஊர்!

சுட்டெரிக்கும் வெயிலைப் பார்க்காத மண்ணு!

Published:Updated:
##~##

'தில்’, 'தூள்’, 'கில்லி’ என்று ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியவர். விஜய் இரு வேடங்களில் நடித்த 'அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் இயக்குநர் பரதன், தனது நினைவில் நின்றாடும் சொந்தக் கிராமமான நெகமம் பற்றி நெகிழ்ந்து பகிர்கிறார்!

 ''கோடைக் காலம் வந்துட்டாப் போதும்... தண்ணீர் தளும்பி நிக்கிற தோட்டத்துக் கிணறுகளில் கூட்டாளிகளோட குதிச்சு நீச்சல் அடிக்கிறதுதான் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காய்ஞ்ச கற்றாழை மரத்தைத் துண்டு துண்டா வெட்டி, அதில் ஒரு துண்டு கற்றாழைத் துண்டை இடுப்பில் கட்டிக்கிட்டு கிணத்து தண்ணீல கும்மாளம் போடுவோம். உள் நீச்சல்... ஒளிஞ்சு விளையாடுறதுனு நீச்சலில் எங்க ஊர் பசங்க செம கில்லி! ஊர் முச்சூடும் எங்கே பார்த்தாலும், ஓங்கி ஒசந்த தென்னை மரங்கள்தான் தெரியும். அதனால், சுட்டு எரிக்கிற வெயிலையே பார்க்காத மண்ணு இது. ஆனி மாசம் தொடங்கிட்டா பாலக்காட்டு கணவாய் வழியே தென் மேற்குப் பருவக் காற்று சிலுசிலுனு பன்னீர் தெளிக்கும்.             

என் ஊர்!

20 வருஷங்களுக்கு முன்னாடி எல்லாம், கிராமங்கள்ல பூரி கிடையாது. எங்க ஸ்கூலுக்குப் பக்கத்தில் இருந்த மாதவ ஐயர் ஹோட்டல்ல கண்ணாடி அலமாரியில பொதுபொதுன்னு ஊதி இருக்கிற பொன் நிற பூரியை அடுக்கிவெச்சு இருப்பாங்க. சுத்துப்பட்டு ஊரே அந்த பூரிக்கு அடிமை. காலணா இல்லைனா எட்டணா விலைனு நினைக்கிறேன். வாரத்தில் ஒருநாள் வீட்டுல அந்தப் பூரியை வாங்கிக் கொடுப்பாங்க. ஆடி அமாவாசை சமயத்துல காங்கேயம் காளைகள் பூட்டின ரேக்ளா வண்டிகள் நூற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி திருமூர்த்தி மலைக் கோயிலுக்குப் போகும். அங்க அருவித் தண்ணி யில குளிச்சுட்டு கட்டுச்சாதம் சாப்பிட்டு ஊர் திரும்பும்போது போட்டி போட்டு வண்டிகளை ஓட்டுவோம்.

அன்னிக்கு எங்க ஊரின் ஹீரோ நெகமம் கந்தசாமி எம்.எல்.ஏ. தான். அதிரடிக்குப் பெயர் போனவர். அவர் எம்.எல்.ஏ-வாக இருந்தவரைக்கும், அவர் சார்ந்த கட்சியைத் தவிர மாற்றுக் கட்சி கொடி எங்க ஊர்ல பறந்ததே இல்லை. ஊர்ல நாடகம் போட்டுக்கிட்டு சுத்துன என்னைக் கொண்டுபோய் திரைப்பட கல்லூரியில் சேர்த்ததும் அவர்தான்.

கந்த புராணத்தில் வரும் நியம ரிஷிங்கிறவர் பிரதிஷ்டை செய்து வைத்த பழமை பெற்ற சிவன் கோயில் இங்கே பிரதானம். நியமபுரி என்கிற பேர்தான் மருவி இப்ப நெகமம்னு ஆயிடுச்சு. இங்கே ஐப்பசியில நடக்கிற ஆவலப்பம்பட்டி மாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழாவும், வைகாசியில வர்ற கரப்பாடி காளியம்மன் கோயில் தேர்த் திருவிழாவும் பன்னிரண்டு பட்டி ஜனங்களும் கொண்டாடும் திருவிழாக்கள். மா விளக்கு, பூச்சட்டி எடுத்து முடிஞ்ச கடைசி நாள்தான் இளசுகளுக்குச் சந்தோஷம். அன்னிக்குத்தான் மஞ்சள் நீர் விளையாட்டு. மாமன் - மச்சான் முறைக்காரங்க ஒருத்தர் மேல ஒருத் தர் மஞ்சத் தண்ணியை ஊத்தி விளையாடுவோம். சில  இளசுங்க, பிரியமானங்கவ மேல மஞ்சத் தண்ணியை ஊத்திட்டு வெட்கப்பட்டு ஓடி ஒளிஞ்சிக்கிற காட்சியே, ஓர் அழகான காதல் கவிதை.

இப்போகூட சென்னையோட வெயிலைத் தணிக்க நான் இளநீர் வாங்கி குடிக்கும்போதெல்லாம், குளுகுளுனு ஊர்ல இருக்கிற உணர்வு ஏற்படுது. ஏன்னா, அது என் தோட்டத்து இளநீராக்கூட இருக்கலாம்!

சந்திப்பு: ஜி.பழனிச்சாமி, படம்: தி.விஜய்                

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism