Published:Updated:

சென்னையில் நடந்த கொரிய இசைவிழா!

சென்னையில் நடந்த கொரிய இசைவிழா!
சென்னையில் நடந்த கொரிய இசைவிழா!

சென்னையில் நடந்த கொரிய இசைவிழா!

சென்னையில் நடந்த கொரிய இசைவிழா!

கொரிய தொடர்கள் உலகின் பல்வேறு இடங்களில் பிரபலமாகி வருகின்றன. தமிழ்நாட்டிலும் தான். இப்போதெல்லாம் எந்த கல்லூரி மனைவியிடம் கேட்டாலும் குறைந்தது பத்து தொடர்களை பார்த்ததாக கூறுகிறார்கள். அந்த தொடர்களின் பின்னால் ஒலிக்கப்படும் பாடல்கள் பெண்களை கவர்ந்திழுக்கின்றன.

அதைப் பற்றிய தேடல்களில் k-pop குறித்த அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கிறது. மேற்கத்திய இசையையும் அவர்களின் (கொரிய மக்களின்) இசையையும் ஒன்று சேர்த்து வழங்குவதே K-pop ஸ்டைலாகும். இதில் பல்வேறு நபர்கள் சேர்ந்து ஒரு குழுவை (பெண்கள் குழு, ஆண்கள் குழு) அமைக்கிறார்கள்.  இந்த பாடகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க வேண்டும். பாடிக் கொண்டே ஆடும் இக்குழுவினர்,  தங்களுக்கான ஆல்பங்களை அமைத்து வெளியிடுகிறார்கள். இந்த பாடகர்கள் வெற்றியடைந்தால், தொலைகாட்சித் தொடரில் நடிக்கும் நடிகர்களாகவும் மாறி விடுகிறார்கள். தற்போது நடிக்கும் நடிகர் நடிகைகளில் பெரும்பாலானோர், இசைத் துறையிலிருந்து வந்தவர்கள்தான்.

பல மில்லியன் டாலர் துறையாக மாறியிருக்கும் k-pop உலகம், இந்தியாவிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நம்மூரில் ஆல்பம் செய்து விற்கும் கலாச்சாரம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை. இருப்பினும் இந்த kpop துறை யூ-டியூப் இருக்கும் வரை இந்தியாவில், முக்கியமாக இளைய தலைமுறையிடம் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை.

கொரிய தூதரகமும் கொரிய கலாசார குழுமமான இன்கோ அமைப்பும் சேர்ந்து இந்திய அளவில் சென்னை உட்பட ஆறு மாநிலங்களில் k-pop போட்டிகளை நடத்தின. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதற்கு ஜாக்கி சான் தலைமையிலான JJCC K-POP Group உறுப்பினர்கள்,  நடுவராக வந்திருந்தனர். அந்த போட்டியில் பிரியங்கா என்ற பெங்காலி பெண், பாடும் பிரிவிலும், 3+4 குரூப், (டெல்லி) ஆடுதல் பிரிவிலும் முதல் பரிசு பெற்றனர். இவர்களை இலவசமாக கொரியா அழைத்து செல்கிறது இந்த அமைப்பு.

சென்னையில் நடந்த கொரிய இசைவிழா!

நிகழ்ச்சியில் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் மட்டுமே பார்த்து ஆசைப்பட்ட பல்வேறு கொரிய உணவுகள் இலவசமாக கிடைத்தன. மாணவர்களுக்கும் ரசிகர்களுக்கும் இது ஒரு விருந்தாகவே அமைந்தது. இந்த கொரிய உணவுத் திருவிழாவை சென்னையில் வசிக்கும் கொரிய மக்கள் முன்னின்று நடத்தினர். நம் ஊர் ஊறுகாயைப் போல் உண்ணப்படும் கிம்சியும்(kimchi) அங்கு வைக்கப்பட்டிருந்தது. நம்மை போலவே அரிசி சாதம்தான் அவர்களுடைய அன்றாட உணவு என்பதால்  அதில் செய்த தொக்போகியும்(tteobokki) பரிமாறப்பட்டது.

அங்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த லீ ஹே ஜின் என்ற கொரிய பெண்ணிடம், சென்னையில் எவ்வளவு காலமாக வசிக்கிறீர்கள்? இங்கே அமைதியாக வாழ்கிறீர்களா ...என்று கேட்டதற்கு,  “நான் இங்கு இரண்டு வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். வசதியாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த உணவு நாண் மற்றும் சிக்கன் செட்டிநாடு" என சிரித்துக்கொண்டே பதிலளித்தார் . தனது குழந்தைகள் “ட்ங்கா மாரி” பாடலை மிகவும் விரும்பி பாடுவார்கள் என்று சொன்னவர் அதை நமக்கு பாடியும் காண்பித்தார்.

அடுத்த நாள் மாலையில் நிகழ்ச்சிகள் கொண்டாட்டமாக தொடங்கின. JJCC k-pop  குழுமத்தில் இருந்து வந்திருந்த 'எடி' ( eddy ) உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு, ஆடி பாடி ரசிகர்களை மகிழ்வித்தது. ரசிகர்களுடனான சந்திப்பிலும், பங்கேற்றது. இந்த குழுமம் ஜாக்கி சான் தலைமையில் “Jackie Chan Joint Cultures” என்ற பார்வையில் ஹிப்-ஹாப் குரூபாக 2014 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்து, பாடி நடனம் ஆடியிருக்கிறார்கள் இக்குழுவினர். 

இக்குழுவில் இடம்பெற்ற எடியுடனான நேர்காணல் இங்கே...

இந்திய ரசிகர்களை பற்றிய உங்கள் கருத்து?

எனக்கு மட்டும் இல்லை. குழுவில் இருக்கும் எனது நண்பர்களுக்கும் இந்திய ரசிகர்களின் உற்சாகமும் வரவேற்பும்,   மகிழ்ச்சியடைய செய்கின்றன. இதற்காகவே இன்னொரு முறை இங்கு வந்து நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.

முதன் முறை சென்னையில் இருப்பதை பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?

சென்னையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறியபோதே எங்களால் நம்ப முடியவில்லை. அதுவே இப்போது உண்மையாகி இருக்கிறது.

சென்னையில் நடந்த கொரிய இசைவிழா!

இங்கு நிகழ்ச்சி நடத்தியதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.  வாய்ப்பு கிடைத்தால் இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த  ஆர்வமாக உள்ளோம்.

தமிழ் மக்கள் கொரிய மொழி பேசுவதை கேட்டிருக்கிறீர்களா?

ஆம். ஏர்போர்ட்டில் கூட எங்களிடம் நிறைய மக்கள் கொரியனில் பேசினார்கள். அவர்களுடைய உச்சரிப்பும் மிக அழகாக இருந்தது எங்களுக்கு கூட தமிழ் வார்த்தைகள் பலவும் கற்று தந்தார்கள்.


தமிழ் - கொரிய மொழிகளுக்கு இடையே ஒற்றுமைகள் இருப்பதை கவனித்தீர்களா? உதாரணத்திற்கு ‘அம்மா’, ‘அப்பா’ ஆகிய சொற்களை இருவருமே பயன்படுத்துகிறோமே?

ஆமாம். அதை நான் ஒத்துக் கொள்கிறேன். அதைப்பற்றி தெரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.

சமூகத்தில் இசையின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என நினைக்கிறீர்கள்?

சமூகத்தின் மீது மட்டுமல்ல. மக்களின் துயரத்தை போக்குவதற்கும் அவர்களின் மனதை லேசாக்குவதற்கும் இசையே அவர்களுக்கு துணை நிற்கிறது.  

இந்தியாவின் பிரபலங்கள் யாரையாவது தெரியுமா?

ஆமாம். ஷாரூக்கானை தெரியும். அவரது படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். நடிகர்களின் பெயர் தெரியவில்லை. ஆனால் 3 இடியட்ஸ் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ரசித்து பார்த்த படம்.


ரஜினிகாந்த் ஷாரூக்கான் பாடலுக்கு நடனமாடி இருக்கிறீர்கள். உங்களுக்கு நடிகர் ரஜினிகாந்தை பற்றி தெரியுமா? லுங்கி டான்ஸ் பாடல் பற்றி எப்படி தெரிய வந்தது?

நிகழ்ச்சிக்கு முன், ரசிகர்களுக்காக இந்திய பாடலுக்கு ஆட, இணையத்தில் பிரபல பாடல்களை தேடி வந்தோம். அதில் இந்த பாடலே அதிக ரசிகர்களால் கேட்கப்பட்டிருந்தது. குழுவில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்தே இப்பாடலை தேர்ந்தெடுத்தோம்.

உங்களது குழு ஜாக்கி சான்  தலைமையில் அமைக்கபட்டிருக்கிறது. அவருடனான உங்களது உறவு எப்படி ?

 முன்பு தலைவர் போலதான் அவரை நாங்கள் பார்த்தோம். இப்போது ஒரு அண்ணனாக, அப்பாவாக பல நேரங்களில் ஆசிரியராக இருக்கிறார். மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று தரும்போது மட்டுமல்லாது வாழ்க்கை முறை, பண்புகள் என தந்தையை போலவே இருந்து வழிகாட்டுகிறார்.

உலகத்தின் பல்வேறு இடங்களில் உங்களுக்கு இளைஞர்களும் பெண்களுமே அதிக அளவில் ரசிகர்களாக உள்ளார்கள். எல்லா வயதினரையும் கவர்ந்திழுக்க என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

 நாங்கள் பல்வேறு விதமான பாடல்களை உருவாக்குகிறோம். மெல்லிசை, ராப் பாடல்கள், ஜாஸ் என அனைத்து விதமான இசையையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை. விதவிதமான பாடல்கள் மூலம் அனைத்து வயதினரின் மனதில் இடம் பிடிப்போம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.

அடுத்து உங்களது இசை பயணத்தை எங்கு திட்டமிட்டு இருக்குறீர்கள்?

 அடுத்ததாக ஜப்பானில் முதல் நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். ஹாங்காங், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல உள்ளோம். அடுத்த ஆல்பம் அடுத்த ஆண்டில் வெளிவரும் என்றே நம்புகிறோம்.

உங்களது நண்பர்களும் பாடகராகவில்லை என்றால் நடிகர்களாக ஆசை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போதும் வாய்ப்பு இருக்கிறதே? உங்களுக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை இல்லையா?

என் குழு நண்பர்கள் அனைவருக்குமே நடிகராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. நடித்தால், மக்கள் எங்களை ஒரு கதாபாத்திரமாகவே நினைவு வைத்திருப்பார்கள். அதற்காகவே நடிகராக வேண்டும் என்ற ஆசைப்படுகிறோம். என்னை பொறுத்தவரை நான் அடுத்த ஜாக்கி சானாக ஆக வேண்டும் என்பதே என் கனவு. அவர் எனது ஆசிரியர் என்பதால் அவரை விடவும் பிரபலமான மார்ஷியல் ஆர்ட் கலைஞராக வேண்டும் என்பதே என் ஆசை.
 

-அ.அருணசுபா
(மாணவ பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு