Published:Updated:

என் ஊர்!

நீ யாமுல ஆடி பூவெடுக்க!

என் ஊர்!

நீ யாமுல ஆடி பூவெடுக்க!

Published:Updated:
##~##

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் ஊர் வீரநாராயணமங்கலம்பற்றியும், தன் குதூகல இளமைப் பருவம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார்.

 ''நாகர்கோவில் பக்கத்துல 'வீரநாராயணமங்கலம்’ கிராமம்தான் என் ஊர். மொத்தமே 120 வீடுங்கதான் இருக்கும். பெரும்பாலும் சொந்தக்காரங்களா இருப்பாங்க. உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நாஞ்சில் நாட்டில் தி.மு.க வேர்விட்ட காலத்துல, அதோட இரண்டாவது கிளையை எங்க ஊர்லதான் தொடங்கினாங்க. அதனால சின்ன வயசுலேயே கடவுள் மறுப்பு பேச்சு கேட்டு வளர்ந்தேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக் கிழமைதான் எல்லாக் கடைகளுக்கும் விடுமுறை. அன்னிக்குத்தான் அரசியல் பொதுக் கூட்டங்கள் நடக்கும். காமராஜரில் இருந்து நேரு வரை நாகர்கோவில் வந்தால், அது வெள்ளிக்கிழமையாகத்தான் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

ஒரு பக்கம் திராவிட இயக்கக் கருத்துக்கள் கேட்டு வளர்ந்தாலும், இன்னொரு பக்கம் ஆலயச் சடங் குகள், திருவிழாக்கள் மீதும் ஈடுபாடு உண்டு.  எங்க பகுதி கோயில் 'கொடை விழா’க்களில், வில்லுப் பாட்டு, கணியான் கூத்து, பம்பை, நையாண்டி மேளம், முரசு, தவில்னு வாத்தியங்களின் ஓசை ஒலித்துக்கொண்டே இருக்கும். சாமி ஆடுபவரைக் 'கோமரத்தாடி’ன்னு சொல்லு வோம். அவருக்குத்தான்  ஆராசனை (அருள்) வரும். பிரமாண்டமாக் குவிச்சு போட்டுருக்கிற பூ படையல்ல இருந்து அவர் ஆடிக்கிட்டே 'கமுகம் பூ’வை மட்டும் எடுப்பார். இதைப் 'பூவெடுத்தல்’னு சொல்வோம். இன்னிக்கும் அந்தப் பகுதிகளில் சேட்டை பண்ற பசங்களைப் பார்த்தா, 'நீ யாமுல ஆடி பூவெடுக்க!’ன்னு திட்டுவாங்க. பள்ளிக் காலத்திலேயே நான் கேட்ட திராவிடக் கருத்துக்களும், பார்த்த கோயில் விழாக்களும் ஒண்ணு சேர்ந்துதான் நாஞ்சில் நாடனை உருவாக்கியது.

என் ஊர்!

பள்ளிக் காலத்தில் குளமும் ஆறும்தான் பெரிய பொழுதுபோக்கு. கூடவே குச்சிப்புள்ள, கள்ளன்-போலீஸ் விளையாடுவோம். விளையாடுற பசங்க கழட்டிவைக்கிற பை, சட்டை, பனியனுக்கு நான்தான் காவக்காரன். எம்.எஸ்சி. முடிச்சு வேலைக்குப் போற வரைக்கும் ஏர் ஓட்டுறது, மரம் அடிக்குறதுன்னு விவசாயம் சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செஞ்சுருக்கேன்.

எனக்கு உலகம் புரியவைச்சதில் முக்கியப் பங்கு எங்க ஊர் தமிழர் நூல் நிலையத்துக்கு உண்டு. அந்தக் காலத்திலேயே இங்கே எல்லா நாளிதழ்களும் வார இதழ்களும் வரும். வரலாற்றுப் புத்தகங்களும் நிறையவே இருக்கும். ஊரில் நூலக வளர்ச்சிக்காக நூலக வரி பிரிப்பாங்க. நெல் அறுவடை முடிஞ்சதும், ஒரு மரக்கா நெல்லை வரியாக் கொடுக்கணும். நாஞ்சில் நாட்டில் எல்லா ஊர்லயும் இதுபோல நல்ல தரமான நூலகங்கள் உண்டு. உளுந்தம் சோறு, கூட்டாஞ்சோறுன்னு எதுவெச்சாலும், ஆவி பறக்க வாசனை அடுத்த வீட்டுக்குப் போயிரும். சின்ன ஊர்ங்கிறதால யார் வீட்டுல என்ன குழம்பு வைக்குறாங்கனு எல்லாருக்குமே தெரியும்.

ஊருல உள்ள பெண்கள் எல்லாரும் சேர்ந்து நாகர்கோவில் டவுனுக்குப் படம் பார்க்கப் போவாங்க.அவங்க கூட நானும் கிளம்பிப் போயிடுவேன். பெண்களை மாட்டு வண்டியில் கூட்டிட்டுப் போய் விடற ஒரு ஆம்பளை, படம் முடிஞ்சதும் திரும்ப வந்து கூட்டிட்டுப் போவாரு. சில நேரங்களில் ஆம்பளைங்க வராட்டா, 'பழவூர் பெரியம்மா’ன்னு ஒரு பாட்டிதான் இன்சார்ஜ்.  அவங்க சேலையை மடிச்சுவிட்டு, வேட்டி மாதிரி கட்டிக்குவாங்க. கூடவே தலையிலும்  ஒரு தலப்பாகை  கட்டிக் கிருவாங்க. பாக்கிறதுக்கு ஆம்பளை மாதிரியே தெரியும். நெஞ்சை நிமித்தி ஆம்பளை மாதிரி நடந்து எல்லாரையும் பத்திரமாக் கூட்டிட்டு வந்திருவாங்க.

ஊர்ல ஆலமரம் அதிகமா இருக்கும். காரணம் எங்க பகுதிகளில் நிச்சயதார்த்தம் நடக்கும்போது ஆலங்கம்பை வெட்டி அதுக்கு குங்குமம், சந்தனம் தடவிப் பந்தக்கால் நடுவோம். கல்யாணம் முடிஞ்சதும் அந்த ஆலங்கம்பை எடுத்து, ஆத்தங்கரைகளில் நட்டுவெச்சுடுவாங்க. அதைத் திருமணம் முடிஞ்ச  குடும்பத்துக்காரங்களே தண்ணீர்விட்டுப் பராமரிப்பாங்க.

ஆறு, குளம், ஏரி, கால்நடைகள், இயற்கைக் காட்சிகள்னு பக்கா கிராமத்தானாக வலம் வந்த  நான், கல்லூரிப் படிப்பு முடிச்சதும் பம்பாய்க்கு வேலைக்குப் போயிட்டேன். அங்கு இருந்தாலும் எனக்குள் உள்ளூர் நினைவுகள் ஏற்படுத்திய தாக்கம்தான் நாஞ்சில்நாடனின் படைப்புகள்!''

- என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism