##~##

சித்ரவதைகளுக்கு ஆளாகும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் பணியைப் 10 ஆண்டுகளாகச் செய்துகொண்டு இருக்கிறது மதுரையில் உள்ள 'மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு’!

 தமிழகம் முழுவதும் சித்ரவதைகளுக்கு ஆளான குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 378 குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து இருக்கும் மக்கள் கண்காணிப்பகம், அவர்களை எல்லாம் தனது செலவில் அவரவர் ஊரிலேயே  படிக்கவைத்துக்கொண்டு இருக்கிறது. இது போன்ற குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் 'குழந்தைகளின் கோடைக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியை மதுரையில் நடத்துகிறது மக்கள் கண்காணிப்பகம்.

மதுரையில் ஒரு சங்கமம்!

இந்த வருடம் ஆறு நாட்கள் அழகர்கோவில் அடிவாரத்தில் உள்ள மகாத்மா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வுக்கு 'சங்கமம் 2011’ என்று பெயர்!  

''அப்பாவுக்குக் காட்டு பொழப்புதான் தொழில். அவர் ஃப்ரெண்ட் மணி, வீரப்பனுக்கு அரிசி பருப்பு கொடுத்துட்டு இருந்தாராம். மணி யோட சேர்த்து அப்பாவையும் போலீஸ்காரங்க பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. அடைச்சுவெச்சிருந்து கரன்ட் ஷாக் கொடுத்ததுல, அவருக்கு கண் பார்வை பாதிச்சு, காதும் கேட்காமப் போயிருச்சு!'' மேட்டூர் பகுதியில் இருந்து வந்திருந்த ரமேஷ் குமாரின் சோகம் இது!

முகாமுக்கு இரண்டாவது முறையாக வந்து இருக்கும் ஈரோடு மணிகண்டன், ''விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்த அப்பாவை, வீரப்பனுக்குச் சோறு கொண்டுபோனதாச் சொல்லி பொய் கேஸ் போட்டுட்டாங்க. வீரப்பனே செத்துட்டான். அப்பா 20 வருஷமா கேஸுக்காக  அலைஞ்சுட்டு இருக்காரு!'' என்கிறார் வேதனை தொனிக்க.

மதுரையில் ஒரு சங்கமம்!

நாகை மாவட்டம் அக்கரைபேட்டையைச் சேர்ந்த வினிதா, ''எங்கப்பா இலங்கைக் கடலுக்குள்ள போய்த்தான் சங்கு பிடிச்சுட்டு வருவாரு. அங்கதான் சங்கு இருக்கும். அதுக்காகப் பல தடவை இலங்கை ஆர்மிகாரங்ககிட்டே  அடி வாங்கிருக்காரு. உலகக் கோப்பை கிரிக்கெட்ல இந்தியா ஜெயிச்ச அன்னிக்கு, எங்கப்பாவை இலங்கை ஆர்மிக்காரங்க துப்பாக்கியால நெஞ்சுல அடிச்சதுல எலும்பு ஒடைஞ்சு படுத்த படுக்கை ஆயிட்டாரு!'' என்றாள் கண் கலங்க.

வாழ்வு சிதைக்கப்பட்ட இந்தக் குழந்தைகளின் மனதுக்கு ஒத்தடம் அளிக்கும் விதமாக, சோகத்தை  மறக்கச் செய்யும் வகையில், கேளிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

''தன்னம்பிக்கை, தன்னை அறிதல், நினை வாற்றல், தங்களின் மகிழ்ச்சியை தாங்களே உருவாக்கிக்கொள்ளுதல்... இவற்றுக்கான பயிற்சிகளைத்தான் முகாமில் இந்தக் குழந்தை களுக்கு நாங்கள் கொடுக்கிறோம். எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்ற அடிப்படை ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறோம். மாலையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் திறமைகளைக் கண்டுபிடித்து அதை வளர்க்கப் பயிற்சி அளிக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தக் குழந்தைகளில் பலர் நிச்சயம் சமூகத்தில் நல்ல  நிலையை எட்டி இருப்பார்கள். அதற்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம்!'' என்கிறார் முகாமின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் சாலமன்.

நல்லது நடக்கட்டும்!

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு