Published:Updated:

என் ஊர்!

''விடுதலையின் குறியீடு வேலூர்!''

என் ஊர்!

''விடுதலையின் குறியீடு வேலூர்!''

Published:Updated:
##~##

''வேலூர் என்றால் வெய்யிலும் வறட்சியும் என்று குறை சொல்பவர்கள் உண்டு. எது இருந்ததோ இல்லையோ, இருக்கிறதோ இல்லையோ வீரமும் மண் மீதான நேசமும் நிரம்பப் பெற்றது, வேலூர். 'வேலூர் புரட்சி’ என்று வரலாறு பதிந்து உள்ள வரிகளே இதை நினைவுபடுத்தும்'' என்கிறார் குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான லதா!

''வெய்யிலூர் என்ற பெயரே வேலூர் என்று மாறிப்போனது என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்வது உண்டு. தமிழகத்தின் வெயில் பிரதேசங் களில் வேலூருக்குத் தனி இடம் உண்டு. வேலூர் என்னும் வார்த்தை வெயிலையும் சேர்த்தே அழைத்து வருகிறது. ஆனால், வேலூர் மக்களின் மனம் குளிர்ச்சியானது. வேலூர் கோட்டையைப் பார்க்க நாங்கள் சிறுவயதில் வரும்போது பழைய பேருந்து நிலையத்தில் இருந்து என்னைக் கைப்பிடித்து அழைத்து வருவார் என் ஆசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

சிறுவயதில் பிரமிப்பாகப் பார்ப்பேன். இப்போது நான் என் பிள்ளைகளைக் கோட்டைக்கு அழைத்துச் செல்லும்போது, என் பிரமிப்பின்  அகலம் இன்னும் அதிகமாகிறது. கோட்டை நுழைவாயிலில் இரண்டு பக்கமும் பீரங்கிகள் அப்போது இருந்தன. அதனைத் தொட்டு பார்க்கும்போது நமக்குள்ளே சுதந்திரக் கனவுகள் வந்து போகும். கோட்டைக்கு உள்ளே அடர்ந்த மரங்கள் அப்போது அதிகமாக காட்சி தந்தன. மரங்களின் நிழல்களில் நாங்கள் விளையா டிய தருணம் வாழ்வில் மறக்க முடியாதது.

வேலூர் கோட்டை குறித்த மற்றவர்கள் பார் வைக்கும் எங்கள் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. யாரின் ஆதிக்கத்துக்கும் அடங்க மறுக்கும் விடுதலையின் வெளிப்பாடாகத்தான் வேலூர் கோட்டையைப் பார்க்கிறோம். புதிய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் முத்து மண்டபம் இன்னொரு சரித்திரச் சான்று. இலங்கையில் உள்ள கண்டியை ஆண்டு வந்தவன் விக்கிரம ராஜசிங்கன்.  இவனது நல்லாட்சியை விரும்பாத ஆங்கிலேய அரசு, எவ்வளவோ சதி வேலைகளைச் செய்து அவனைச் சாய்க்கப் பார்த்தது. ஆனாலும் அந்நியச் சதிகள் எதற்கும் அவன் அசைந்து கொடுக்கவில்லை. இறுதியாக சிம்மனின் தம்பியைக் கைக்குள் போட் டுத் தனது சதி வலையைப் பின்னத்தொடங்கியது ஆங்கிலேய அரசு. 'இலங்கைக் கடல் பகுதியில் உள்ள வணிகர்களின் பாக்கு மூட்டைகளைக் கள வாடுகிறது சிம்மனின் அரசு’ என்று நொண்டிச் சாக்குச் சொல்லி, கண்டி மீது போர் தொடுத்தனர் ஆங்கிலேயர்கள். இதற்கு மன்னனின் தம்பியும் உடந்தையாக இருந்தது காலக்கொடுமை. பல முறை போர்புரிந்த பிறகே, கண்டியைக் கைப்பற்றினர் ஆங்கிலேயர்கள். மன்னனையும் அவனது குடும்பத் தையும் கைது செய்த ஆங்கிலேய அரசு, வேலூர் கோட்டையில்தான் அவர்களைச் சிறைவைத்தது. 16 ஆண்டுகள் சிறைவாசத்திலேயே தன் வாழ்க்கையைக் கழித்தான் சிம்மன். தற்போது வேலூர் கோட்டைக்குள் செயல்படும் வட்டாட்சியர் அலுவலகத்தில்தான் இரும்புக் கம்பிக்குள் இருந்தான். இறுதியில் வெளி உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே வேலூர் சிறையிலேயே 1832-ல் இறந்து போனான். இப்படி சுதந்திர உணர்வுக்கான சாட்சியங்களுக்கும் வேலூர் மண்ணுக்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு.

என் ஊர்!

வேலூரின் இன்னொரு சிறப்பம்சம் சி.எம்.சி. மருத்துவமனை. இந்த ஊர் மக்களைவிட வெளிநாட்டவர், வெளிமாநிலத்தினர் தான் இந்த மருத்துவமனையால் அதிகம் பலன் அடைந்தவர்கள். முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தால் துவங்கப்பட்ட அரியூர் நூற்பாலை மிகவும் புகழ்பெற்று விளங்கியது. ஆனால், பின்னாளில் அது மூடப்பட்டு பல தொழிலாளர்கள் வேலை இழந்தது பெரும் சோகம். நூற்றாண்டைக் கடந்து செயல்படும் ஊரிசு கல்லூரியில்தான் இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்தார்.

ஒருபுறம் பெருமைகளைப் பட்டியல் இட்டாலும், நீர் ஆதா ரமும் தொழில் வளமும் குறைவாக உள்ள ஊராக வேலூர் உள்ளதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதற்குக் காரணம் முதலா ளித்துவத்தின் லாப வெறிதான்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் சுற்றுப்புறச் சூழலைக் காயப்படுத்தினால் இயற்கை நம்மைக் கைவிடத்தான் செய்யும். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தொடர்ந்து நிற்பது, இப்போதுபோல் எப்போதும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றுடன் வேலூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதும்தான் ஒரு கம்யூனிஸ்டான  என் கடமையாகக் கருதுகிறேன்!''

படங்கள்: ச.வெங்கடேசன்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism