Published:Updated:

சார்பட்டா பரம்பரை: வடசென்னை குத்துச்சண்டை வரலாறு! - விரிவான தகவல்கள்

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை ( விகடன் )

வடசென்னை என்றாலே கால்பந்து தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி குத்துச்சண்டை கோலோச்சிய காலம் ஒன்று உண்டு. ஏராளமான குத்துச்சண்டை வீரர்கள் வடசென்னையில் நிறைந்திருந்தார்கள்.

வடசென்னை என்றாலே கால்பந்து தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி குத்துச்சண்டை கோலோச்சிய காலம் ஒன்று உண்டு. ஏராளமான குத்துச்சண்டை வீரர்கள் வடசென்னையில் நிறைந்திருந்தார்கள். வீதிக்கு வீதி பயிற்சிப் பட்டறைகள் நடந்தன. திரைப்பட உச்ச நட்சத்திரங்களுக்கு எல்லாம் கிடைத்திராத அளப்பரிய ரசிகர்கூட்டம் குத்துச்சண்டை வீரர்களுக்கு இருந்தது. பிரதான வீரர்கள் பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டிகளை அமர இடமில்லாமல் நின்று கொண்டே கண்டுகளித்தார்கள் மக்கள். அந்தக் காலத்திலேயே வீரர்களுக்கு லட்சங்களைக் கொட்டிக்கொடுத்து, ஒப்பந்தம் போட்டு குத்துச்சண்டை போட்டிகளை நடத்தினார்கள் ஒப்பந்தகாரர்கள்.

தங்கள் விருப்பத்துக்குரிய வீரன் அடிவாங்குவதைச் சகிக்காமல், எதிர் வீரனை மட்டுமின்றி குத்துச்சண்டை நடந்த களத்தையே அடித்து துவம்சம் செய்த ரசிகர்களின் கதையெல்லாம் வடசென்னைக்குள் புதைந்திருக்கிறது. வடசென்னையின் வரலாற்றுப் பிரதிகளில் முழுமையாக பதிவு செய்யப்படாத பக்கங்களில் ஒன்று, குத்துச்சண்டை.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை
விகடன்

இன்றைக்கும், வடசென்னையில் குத்துச்சண்டையின் சுவடுகள் இருக்கின்றன. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல முன்னணி குத்துச்சண்டை வீரர்கள் மீனவர்களாகவும், தொழிலாளர்களாகவும் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர், அந்தப் பாரம்பரியத்தை அழியாமல் காக்கும் நோக்கில் குத்துச்சண்டை பயிற்சி மையங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சின்னப்பா பாக்சிங் கிளப், பத்தன் கிளப், சந்திரன் கிளப், தியாகராயா கிளப், எம்.கே.எம். பாக்சிங் கிளப் என 20க்கும் மேற்பட்ட பாக்சிங் கிளப்புகள் வடசென்னையில் செயல்படுகின்றன. பலநூறு இளைஞர்கள் ஆர்வமாக குத்துச்சண்டை பழகுகிறார்கள்.


குத்துச்சண்டை என்பது குருகுலமாக இருந்த காலம் அது. சார்பெட்டா பரம்பரை, இடியாப்ப நாயக்கர் பரம்பரை, சுண்ணாம்புக் குளம் பரம்பரை, சூளை எல்லப்ப செட்டியார் பரம்பரை என நான்கு பரம்பரைகள் இருந்தன. வடசென்னை பகுதியில் குத்துச்சண்டையை வளர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள் தான். குத்துச்சண்டை அவர்களின் விருப்பத்துக்குரிய பொழுதுபோக்கு. அதனால், தங்களிடம் வேலை பார்த்தவர்களேயே மோதவிடுவார்கள். அப்படி பாகுபட்டு உருவானவை தான் இந்த பரம்பரைகள். காலப்போக்கில் சுண்ணாம்புக்குளம் பரம்பரை, சார்பெட்டா பரம்பரையோடும், சூளை எல்லப்ப செட்டியார் பரம்பரை இடியாப்ப நாயக்கர் பரம்பரையோடும் இணைந்து விட்டன. இந்த பரம்பரைகளுக்குள் தான் சண்டை. இரண்டு பரம்பரைத் தலைவர்களும் கூடி சண்டைக்கு நாள் குறிப்பார்கள். ஒரே தண்டியான வீரர்கள் இரு தரப்பிலும் தேர்வு செய்யப்படுவார்கள். தர்மன், லெப்ட் மணி, ‘அக்கு’ துரை, தாஸ்,  எஸ்.ஏ. அருணாச்சலம், கே.சுந்தர்ராஜ், கித்தேரி முத்து, குப்புச்சாமி, டி.எம்.வீரப்பன், பலராமன், முனியாண்டி, ஆறுமுகம், டில்லிபாபு, வினாயகம், சண்முகம், மாணிக்கம், பத்தன், எல்லப்பன், கண்ணையா என்று இதில் ஏகப்பட்ட ஸ்டார்கள் உண்டு.  

ஒரு காலக்கட்டம் வரை, கௌரவ அடையாளமாக இருந்த குத்துச்சண்டை பிறகு வணிக வடிவெடுத்தது. முதலாளிகள், இரு பரம்பரையிலும் உள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்து, மோதவிட்டு, டிக்கெட் போட்டு விற்று காசு பார்த்தார்கள். இந்த பப்ளிக் பாக்சிங்குக்கு திரைப்படங்களுக்கு விளம்பரம் செய்வது போல, வீதி வீதியாகப் போய் விளம்பரம் செய்து, டிக்கெட் விற்பார்கள்.  நேரு ஸ்டேடியம், சூளை கண்ணப்பர் திடல், தண்டையார்பேட்டை டேப்லெட் மைதானம், மெரினா பீச் ஆகிய இடங்களில் சண்டை நடக்கும்.  
குத்துச்சண்டையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தமிழ் குத்துச்சண்டை, மற்றொன்று ஆங்கிலக் குத்துச்சண்டை. 1938 வரைக்கும் தமிழ்ச்சண்டை தான். தமிழ்ச்சண்டையில் முகத்தில் மட்டுமே குத்த வேண்டும். வேறு எந்த பாகத்துல அடிபட்டாலும் அடித்தவர் அவுட். இந்தச் சண்டை படு உக்கிரமாக இருக்குமாம். ஆங்கிலச்சண்டையில் தொப்புளுக்கு மேல் எங்கும் குத்தலாம். வெற்றி பெறுபவர்களுக்கு நிலம், பொருள் என ஏகப்பட்ட பரிசுகள் கொடுப்பார்கள்.  வீரர்களுக்கு நிறைய பணமும் கிடைத்தது. 

சேர் டிக்கெட், தரை டிக்கெட் என விதவிதமாக டிக்கெட் இருக்கும். முதலில் ஜூனியர் வீரர்கள் மோதுவார்கள். இறுதியில் முன்னணி வீரர்கள். போட்டியில் மோதும் வீரர், யாருடய சீடர், எத்தனை போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்ற தகவல்கள் பார்வையாளர்களுக்கு அச்சிட்டு தரப்படும். சினிமா தியேட்டரில் வரிசை கட்டி நின்று டிக்கெட் வாங்குவது போல் மக்கள் அன்று குத்துச்சண்டை டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் இந்த குத்துச்சண்டைகளுக்கு ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். தங்களுக்கு விருப்பமான வீரன் தோற்றுப்போகும் சூழலில் மக்கள் சேர்களை உடைப்பதும், சாலையில் வந்து ரகளை செய்வதும் கூட நடந்திருக்கிறது. 

1945ல் நிகழந்த சம்பவம் இது; ராயபுரம் எட்டியப்ப நாயக்கர் பள்ளித்திடலில் ஒரு பப்ளிக் பாக்சிங் நடந்தது. 25 ஆயிரம் பேருக்கு மேல் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். போட்டி உச்சத்தில் இருக்கும்போது, ரசிகர்கள் மாதிரி உள்ளே இருந்த சிலர் அரிவாள், கத்தி, சோடாபாட்டிலோடு உள்ளே இறங்கி ரகளை செய்தார்கள். பெருங்கலவரம் ஆகி விட்டது. அதன்பிறகு, பப்ளிக் பாக்சிங் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதோடு குத்துச்சண்டை காலம் முடிவுக்கு வந்து விட்டது. வீரர்கள் எல்லாம் வாழ்வாதாரம் தேடி வேறு வேலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள். அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்கு இந்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். 

இன்றும் ஆர்வத்தோடு இளைஞர்கள் குத்துச்சண்டை பயில வருகிறார்கள். ஆனால், அவர்களின் இலக்கு, ஒரு அரசு வேலை. ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிக்கும், வெண்கலத்துக்குமே போராடி தலைகுனிவோடு திரும்புவது நமக்கு வழக்கமாகி விட்டது. திறமையும், தகுதியும் கொண்ட பல வீரர்கள் புறக்கணிக்கப்படுவது தான் இந்த அவலத்துக்குக் காரணம். மரபுத்திறனோடு பிறந்து, தன் போக்கில் பயிற்சியெடுத்து, உள்ளூருக்குள்ளாகவே முடிந்துபோகும் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களை உரிய கவனமெடுத்துத் தகுதிப்படுத்தினால் இந்தியாவுக்கு தங்கப்பதக்கங்கள் குவியும்.

-வெ.நீலகண்டன்

அடுத்த கட்டுரைக்கு