Published:Updated:

தேவதைகளாய் இருத்தல் வரம்! #BeAnAngelDay

தேவதைகளாய் இருத்தல் வரம்! #BeAnAngelDay
தேவதைகளாய் இருத்தல் வரம்! #BeAnAngelDay

தேவதைகளாய் இருத்தல் வரம்! #BeAnAngelDay

தேவதைகளாய் இருத்தல் வரம்! #BeAnAngelDay

தேவதைகளாகவும், தேவனாகவும் இரு! #BeAnAngelDay 

ஒவ்வொரு நாளையும் ஏதோவொரு சிறப்பான தினமாகத்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதேபோல இன்றும் ஒரு வித்தியாசமான தினம். 1993 -ஆம் ஆண்டிலிருந்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி # Be An Angel Day யாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நம்மில் பலருக்கு நம் தாய் தேவதையாகத் தெரிவார். சிலருக்கு அவர்களின் காதலி தேவதையாகத் தெரிவார். இன்னும் சிலருக்கு அவர்களின் மனைவியோ, மகளோ தேவதையாகத் காட்சியளிப்பார். அதேபோல் அவர்களுக்கும் நீங்கள் தேவனாகத் தெரியலாம். தெரிந்தவர்கள் மட்டுமே தேவனாகவும், தேவதையாகவும் இருக்கவேண்டும் என்பதில்லை. கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ கிளம்பிச் செல்லும் வழியில் துப்பட்டாவைக் காற்றில் அலையவிட்டபடிக் கடந்து சென்று மின்னற்பொழுதில் நம்மை காதலில் விழ வைக்கும் இளம்பெண்ணும், பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது சிக்னலில் வந்து வண்டியின் பின்னால் மோதிப் பதற்றமும் மிரட்சியுமாய் சாரி கேட்கும் அழகான பெண்ணும் உங்களுக்கு தேவதைகளாய் தோன்றலாம். ஆனால் இன்னும் ஏராளமான தேவதைகள், தேவன்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். காரணம், இது அவர்கள் சூழ் உலகு.  

ஏதோவொரு கணத்தில், நீங்கள் தனியனாக உணரும்போது, உங்களை அலைபேசியில் அழைத்து கடற்கரைக்கு வரச் சொல்லும் நண்பனின் உருவிலோ, ஹோட்டலில் சாப்பிடும்போது விக்கிக் கொள்கையில் கடனே என எழுந்து செல்லாமல், அவசரமாக ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துத் தலையில் தட்டும் யாரோ ஒரு அண்ணன்/ அக்காவின் உருவிலோ கூட தேவதைகள் காட்சி தரலாம். தேவதைகளுக்கு பால்/ உறவு/ உருவம் என எந்த பேதமும் கிடையாது.

காலையில் உங்கள் வீட்டு வாசலில் இறங்கி வரும்போது கூடைக் காய்கறிகளைத் தூக்கிவிடச்சொல்லி உதவி கேட்கும் தேவதைகளுக்கு நீங்கள் தேவதையாகவோ, தேவனாகவோ தெரியலாம்.  பஞ்சரான பைக் அருகில் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் அவசரத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்து அவரது நன்றியைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கிளம்பும் நீங்கள் அவருக்குத் தேவனாகத் தெரியலாம். காலையில் அலுவலகத்துக்கு அவசர அவசரமாகக் கிளம்பி சாப்பிடக்கூட நேரமில்லாமல் பேருந்தில் ஏறி இருக்கை இல்லாமல் தலைவலியோடு நின்று கொண்டிருக்கையில் யாராவது உங்களை அமரச்சொல்லி எழுந்து நின்றால் அந்தக்கனம் உங்களுக்கு எப்படியிருக்கும்? அதே உணர்வை நீங்களும் ஏன் இன்னொருவருக்குக் கொடுக்கக் கூடாது?

யாரோ ஒரு பாட்டி, உறவினர்களின் துணையில்லாமல் நீங்கள் காத்திருக்கும் ரயிலில் வந்து தனது டிக்கெட்டுக்குரிய பெட்டியைத் தேடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு துணையாக இருக்கையைக் கண்டுபிடித்துக்கொடுத்து அமரச்செய்து ஆசுவாசப்படுத்துவதற்கு உங்களுக்கு அதிகபட்சம் பத்து நிமிடம் தேவைப்படுமா? எப்படி இருப்பினும், அந்த நேரத்தில் ஹெட்போனைக் காதில் மாட்டி மூன்று பாடல்களைக் கேட்டிருக்கப் போகிறீர்கள். இசைக்கு பதில் இயலாத ஒருவரின் கடைசி நிமிடப் படபடப்பைக் குறைத்திருக்கிறீர்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்?

சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது தினமும் ஒருவராவது மூன்றுசக்கர மிதிவண்டியில் கைகளால் கஷ்டப்பட்டுச் சுற்றியபடி நமக்கு முன்னால் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நீங்கள் போகும் சிறிதுதூரமாவது அந்த வண்டியைத் தள்ளியபடியே சென்றால் அவருக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? நம் தெருப்பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இலவசமாக ட்யூஷன் சொல்லிக் கொடுத்து அவர்களின் கண்களில் உங்களுக்கான அன்பை ருசிக்கத் தெரிந்தால் போதும். நீங்கள் தேவதைகளாகி விட்டீர்கள்.

தேவதைகளாய் இருத்தல் வரம்! #BeAnAngelDay

ஆபத்திலிருந்து ரட்சிப்பவராகவும், அநேகப் பொழுதுகளில் அன்பை அள்ளி அள்ளித் தெளிப்பவராகவும் உங்களது கண்களில் புலப்படும் அத்தனைபேரும் தேவதைகள்தாம். தீயணைப்பாளராக, ஆம்புலன்ஸ் வண்டி டிரைவராக, நிவாரணப் பணியாளராக, செவிலியராகப் பலப்பல நேரங்களில் யாரெனத் தெரியாதவர்களின் துயர் துடைக்கத் தினந்தினம் கஷ்டப்படுபவர்களின் தினம் இது. அவர்கள் நமக்கு உதவும்போது மட்டும் நன்றி சொல்வதில் எந்தச் சிறப்பும் இல்லை. அதையும் கூட அவர்கள் எதிர்பார்ப்பது இல்லை. "தாங்க் காட்!" எனக் கடவுளுக்கு நன்றி சொல்லும் நாம், நமக்கு உதவி செய்தவர்களை உண்மையாகவே மறந்து விடுகிறோம். 

இன்றைய நாளை அவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு வாய்ப்பாகக் கருதி நீங்கள் தேவதைகளாகவும், தேவன்களாகவும் நினைக்கும் சிலருக்கு உதவிகள் செய்து தேவதைகளாகுங்கள். வியர்த்து வழிந்தபடி அரக்கப்பறக்க சமைத்துக் கொண்டிருக்கும் மனைவிக்கோ, அம்மாவுக்கோ காய்கறி வெட்டிக் கொடுங்கள். தினமும் மாலைப்பொழுதுகளில் செல்லும் பூங்காவை இன்று ஒருநாள் மட்டுமாவது நீங்கள் சுத்தப்படுத்துங்கள். உங்களால் இனி பயன்படுத்த முடியாத பழைய துணிகளை இல்லாதவருக்கு கொடுத்து உதவுங்கள். தூக்க முடியாமல் இரண்டு தண்ணீர்க் குடங்களை தூக்கிவரும் பக்கத்துவீட்டுப் பெண்ணை வெறுமனே பாவமாகப் பார்த்தபடி கடக்காமல் ஒரு குடத்தை தூக்கி அவர் வீட்டில் கொடுங்கள். அடுத்த பத்துக் குடங்கள் தூக்குவதற்கான மனஉறுதியையும் அது சேர்த்துக் கொடுக்கும். இப்படிச் சிலருக்கு நீங்களும் ஏதோ ஒரு வகையில் தேவதையாகத் தெரியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

தேவதையாகயிருத்தலும், தேவனாயிருத்தலும் ஆகப்பெரும் வரம்!

- விக்கி 

Save

அடுத்த கட்டுரைக்கு