ஸ்பெஷல் -1
Published:Updated:

சாதனையாளர்களின் தூக்கம்?! : ஹாய் மதன் கேள்வி பதில்

சாதனையாளர்களின் தூக்கம்?! : ஹாய் மதன் கேள்வி பதில்

##~##
எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.

அந்தக் கால அரசர்கள் காலத்தில் 'இன்டர்வியூ’ எப்படி நடந்திருக்கும்?

இந்தக் காலம் மாதிரிதான்! அரசருக்குப் பிடித்துப் போய்விட்டால், பெரும் பதவி! குஜராத் மீது படை எடுக்கச் சென்ற அலாவுதீன் கில்ஜி, அங்கே ஓர் இந்து இளைஞனைப் பார்த்து காதல் வயப்பட்டார். கூடவே அவனை டெல்லிக்கு அழைத்துச் சென்று அமைச்சராகவும், பிரதான தளபதியாகவும், வைப்பாட்டியுமாக ஆக்கிக்கொண்டார். அவன்தான் பிற்பாடு மதம் மாறி 'மாலிக் கஃபூர்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, கடைசியில் நன்றி இல்லாமல் சுல்தானுக்கு விஷம் தந்து கொலை செய்தான். பரம்பரையாக அரசவைகளில் பணிபுரிந்தவர்களும் உண்டு. அவர்கள் ஸ்பெஷலாக பயிற்சி பெற்று, அரசவையில் குறிப்பிட்ட பணிக்காகத் தயார் ஆவார்கள். டை கட்டிக்கொண்டு 'இன்டர்வியூ’ எல்லாம் கிடையாது!

த.முருகன், கடலூர்-2.

தமிழ் சினிமா கதாநாயகர்கள் ஏ.கே. 47 துப்பாக்கியில் இருந்து குண்டுகள் அவர்களை நோக்கி புறப்பட்ட பிறகு, ஒதுங்கி வழிவிடுகிறார்களே... அது சாத்தியமா? அதன் வேகம் என்ன?

நீங்க வேற! பாய்ந்து வரும் 'புல்லட்’டை கையில் பிடிக்கும் ஹீரோக்கள்கூட இங்கு உண்டு! சில ஹாலிவுட் படங்களில்கூட இப்படிக் காட்டுகிறார்கள். (ஆனால், அங்கே ஹீரோ அமானுஷ்ய சக்தி உள்ள கதாபாத்திரமாக இருப்பார். உ.ம்: Matrix) ஒரு நல்ல, சராசரி துப்பாக்கியில் இருந்து வெளிப்படும்போதே புல்லட் விநாடிக்கு 1,000 அடி வேகத்துக்குப் பாயும். பிறகு, வேகம் 3,000 அடிக்கு மேல் அதிகரிக்கும். இத்தனையும் ஒரு விநாடிக்குள். அமெரிக்க கௌ-பாய் படங்களில் மலை உச்சியில் இருந்து ஹீரோ சுடுவதையும், வெகு தூரத்தில் குதிரையில் போகும் வில்லன் - சுட்ட மறு கணமே கீழே விழுந்து இறப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆகவே, ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டால், 200 அடி தூரத்தில் நிற்கும் எதிரி கால் விநாடிக்குள் காலி. எப்படித் தலையை நகர்த்தி புல்லட்டை 'தாண்டிச் செல்ல’ வைக்க முடியும்?! ஆனால், திரையில் இப்படிப்பட்ட காட்சியைப் பார்க்கும்போது ஜோராகத்தானே இருக்கிறது!

க.நா.இராஜேஸ்வரன், ஈரோடு.

செக்ஸியான புத்தகம் ஏதாவது சர்வதேச அளவில் உயர்ந்த விருதைப் பெற்று இருக்கிறதா?

விருது பெரிய விஷயம் அல்ல. சர்வதேச அளவில் பெரும் புகழ் பெற்ற ஒரே ஒரு புத்தகத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அது - சேட்டர் லி சீமாட்டியின் காதல் (Lady Chatterley's Lover). டி.ஹெச்.லாரன்ஸ் 1928-ம் ஆண்டில் எழுதிய இந்தப் புத்தகத்தை முதன்முதலில் பெங்குவின் பிரசுரம் 1960-ல் வெளியிட்டபோது, அநேகமாக அத்தனை நாடுகளும் 'ஆபாசம்’ (obscene) என்று சொல்லி புத்தகத்துக்குத் தடை விதித்தன. கடைசியில் உலகமே கவனித்த வழக்கில், இது செக்ஸ் புத்தகம் (pomography) அல்ல; சிறந்த இலக்கியம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பெரிய இலக்கிய மேதைகள் எல்லோரும் இந்த வழக்கில் புத்தகத்துக்கு ஆதரவாக சாட்சியம் சொன்னார்கள். திருமணம் ஆன பணக்காரப் பெண்மணி, தோட்டக்காரரிடம் காதல் (செக்ஸ்) வயப்படுவதுதான் கதை. உலகளவில் பிறகு தடை நீங்கினாலும், இந்தியாவில் வழக்கம் போல தடையை நீக்க மறுத்துவிட்டார்கள்!

சாதனையாளர்களின் தூக்கம்?! : ஹாய் மதன் கேள்வி பதில்

டி.வரதன், திருவாரூர்.

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கொய்யா, மாங்காய் போன்றவற்றை அணில் கடித்துவிடுகிறது. அகிம்சை வழியில் அதனைத் தடுக்க ஒரு வழி சொல்லுங்களேன்?

அதனைத் தடுக்காமல் இருப்பதுதான் அகிம்சை வழி. உண்மையில் அணில்களுக்கும் பறவைகளுக்கும் சொந்தமான கொய்யாவையும் மாங்காயையும்தான் நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்!

ஜெ.விஜயகுமாரி, சென்னை-17.

சாதனையாளர்களின் தூக்கம்?! : ஹாய் மதன் கேள்வி பதில்

சாதனையாளர்கள் தினமும் நான்கு மணி நேரம்தான் தூங்குவார்கள். அது போதும் என்கிறார்களே, அது உண்மையா? (நீங்கள் நிறைய தூங்குவீர்கள் என்பது என் ஊகம்!)

அதெல்லாம் சும்மா! விழித்து இருக்கும்போது நீங்கள் எவ்வளவு முனைப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். லியனார்டோ டாவின்சியும், ஐன்ஸ்டீனும் நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை, அரை மணியாவது தூங்குவார்கள் என்று நான் படித்து இருக்கிறேன். ஆங்கில இலக்கிய மேதை ஜான்சன் மதியம் 12 மணிக்குப் பிறகுதான் படுக்கையில் இருந்து தூங்கி முடித்து எழுந்திருப்பார். பிரெஞ்சு தத்துவ மேதை பாஸ்கல் பகல் முழுவதும் தூங்கி, அவ்வப்போது எழுந்து உட்கார்ந்து எழுதுவார்! ஆனால், உலக மக்களிடையே தூக்கம் குறைந்துகொண்டு வருகிறது என்பது உண்மை. 1990-ல் ஒன்பது மணி நேரம் தூங்கிய மக்கள், இப்போது ஏழு மணி நேரம்தான்

சாதனையாளர்களின் தூக்கம்?! : ஹாய் மதன் கேள்வி பதில்

தூங்குகிறார்கள். இதற்கு டி.வி-யும் ஒரு காரணம்!

ஹெச்.கீதா, பெங்களூரு-8.

'டம்ளர்’ என்று ஏன் டம்ளருக்கு(!) பெயர்? Tumble என்றால் தடுக்கி விழுவது என்றுதானே அர்த்தம்?

அதனால்தான்! ஒரு காலத்தில் டம்ளரை டேபிளில் வைக்க முடியாதபடி, அதன் அடிப் பாகத்தை ரவுண்டாகத்தான் தயாரித்தார்கள். அதாவது டம்ளரில் இருப்பதை முழுவதும் குடிக்காமல் கீழே (கவிழ்த்து) வைக்க முடியாது! பிறகுதான் டம்ளரின் அடிப் பாகம் Flat ஆக ஆனது. இது ஆங்கில வார்த்தைதான் என்றாலும், டம்ளர் என்று அதை இன்னமும் அழைத்துக்கொண்டு இருப்பது இந்தியர்கள் மட்டுமே!