Published:Updated:

ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம்

ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம்
ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம்

ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம்

ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம்

ஒரு மெல்லிய நீரோடை போல துவங்கும் இந்த நாவல் அதனுள் இத்தனை அழுத்தமான ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கருத்தினை வைத்திருக்கும் என படிக்க துவங்கும்போது யாரும் உணர்ந்திட மாட்டார்கள். நைஜீரிய எழுத்தாளர் 'சிமாமந்தா எங்கோசி அடிச்சி' எழுதியுள்ள 'ஊதாநிறச் செம்பருத்தி' அது வெளியாகிய 2003-ம் காலப்பகுதியிலேயே பெரும் கவனம் பெற்றது. 

அரசியல் ஸ்திரதன்மையற்ற நைஜிரியாவில் நிகழ்கிறது கதை. தாய்,தந்தை, நாயகி, அவளுக்கொரு அண்ணன் என சின்னஞ்சிறு பணக்கார கத்தோலிக்க குடும்பம். தீவிர மதப்பற்றுள்ள அப்பா. அவர் மீது பயமும் மரியாதையும் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நடுங்குகிறது அந்த குடும்பம். ஆனால் அப்பாவிற்கோ கடவுளின் மீதும் மதத்தின் மீதும் பயம், மரியாதை. அவரின் கனவெல்லாம் அவ்வூரின் சிறந்த கத்தோலிக்கராக தான் கருதப்படவேண்டும் என்பதுதான் அதற்காக சொந்த தகப்பனை கூட வறுமையில் வாடவிடுபவர். 

நாயகி காம்ப்ளி, அவளின் தாய் பியாட்ரிஸ், காம்ப்ளியின் அத்தை இஃபியோமா, அவரின் மகள் அமக்கா என நான்கு பெண்களை சுற்றிப்பின்னப்பட்ட கதை. செல்வ வளமிக்க அதே சமயம் சிரிக்கக்கூட அதீத கட்டுப்பாடுகள் நிறைந்த நாயகியின் குடும்பமும், நினைத்ததை பேசும் உரிமைகொண்ட தந்தையை இழந்த வறுமை வாட்டும் அத்தை இஃபியோமாவின் குடும்பமும் என இரண்டு குடும்பங்கள் முன்வைக்கப்படுகின்றன. கணவனை கொன்று விட்டதாக ஊரார் குற்றம் சொன்னாலும் அது குறித்து சட்டை செய்யாமல் தன் பிள்ளைகளை கல்வியின் பால் பற்றுகொண்டு வளர்க்க முற்படும் இஃபியோமாவும், ஒரு நாளின் சாதாரணக்கடமைகளை கூட கணவனின் அட்டவணைப்படிதான் செய்ய வேண்டியிருக்கும் பரிதாப பியாட்ரிஸும் முந்திய தலைமுறையின் இரண்டு அடையாளங்களாக இருக்கின்றனர். வகுப்பில் இரண்டாம் ரேங்க் வாங்கியதற்காகக்கூட தந்தையின் கடுமையான தண்டனைக்குள்ளாகும் காம்ப்ளி, நினைத்ததை வெளிப்படையாய் பேசுகின்ற, தன் விருப்பங்களை துணிச்சலாக வெளியில் சொல்லும் காம்ப்ளியின் அத்தை மகள் அமக்கா என  நவீன தலைமுறையின் இரண்டு பெண் அடையாளங்களை நாவலின் வழியாக அடிச்சி காட்சிப்படுத்துகிறார். 

குடும்ப அமைப்பில் ஆணாதிக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை அம்பலப்படுத்தும் இந்த நாவல், அதற்கு நாடு பேதம் இல்லை என்றும் உணர்த்துகிறது. இந்த நாவலின் கதை நிகழும் பகுதியை இந்தியா, இலங்கை, கிழக்காசியா என காலனி நாடுகள் எவற்றை களமாக வைத்து எழுதினாலும் இயல்பாக பொருந்திப்போகும் என்பதுதான் ஆச்சர்யமான ஒன்று.

பின்காலனிய காலகட்டத்தில் நிகழும் இந்த கதையில் மேற்கு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு சுரண்டலுக்கு பயன்படுத்திக்கொண்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றன என்றும், அவை சென்ற பின்னரும் அந்நாடுகள் அறிமுகப்படுத்திய மதங்களும்,மொழியும் எவ்வாறு தொடர்ந்து அதிகாரங்களை செலுத்திவருகின்றது என்பதையும், உள்ளூரின் மதமும், சிறுதெய்வங்களும், மொழியும் இரண்டாம் தரமாக பின்தள்ளப்படுவதையும் கதையின் நடையிலேயே அம்பலப்படுத்திவிடுகிறார் ஆசிரியர்.

அதே போல குடும்ப வன்முறை என்பதை ஆண் எப்படி வெகு சாதாரணமாக நியாயப்படுத்துகிறான் என்பதை நாயகி காம்ப்ளியின் தந்தையின் பாத்திரம் வெளிபடுத்தப்படுகிறது. தினமும் காலையும் மாலையும் கடவுளை தொழும், எந்நேரமும் கையில் பைபிளை வைத்திருக்கும் பக்திமானான யூஜின் சின்ன தவறுகளுக்கு கூட மனைவி, மகள் மகனை என தன் குடும்பத்தினைரை தண்டனைக்குள்ளாக்குகிறார். தான் அடிப்பது அவர்களை திருத்தத்தான் என்கிற எண்ணத்தோடே அதை செய்கிறார். 'ஒரு தவறை திருத்துகிறேன் என்கிற பெயரில் தாமும் ஒரு தவறைத்தான் செய்கிறோம்' என்கிற எண்ணம் துளியுமின்றி அவர் செயல்படுவதை நாம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கமுடியும். 

இந்த நாவலின் ஆசிரியை சிமாமெந்தா எங்கோசி அடிச்சி நைஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர்.தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். தீவிர பெண்ணியவாதியான இவர் ஆப்ரிக்க பெண்ணியவாதிகளின் அடையாளமாக கருதப்படுபவர். இந்த நாவல் 2005-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விருது பெற்றது. தற்போது இந்த நாவலை பேராசிரியர் பிரேம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.அணங்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

-வரவனையான்

அடுத்த கட்டுரைக்கு