Published:Updated:

சுஜாதாவின் ‘பத்து செகண்ட் முத்தம்’ - அப்பவே அப்படி! #WriterSujatha

சுஜாதாவின் ‘பத்து செகண்ட் முத்தம்’ - அப்பவே அப்படி! #WriterSujatha
சுஜாதாவின் ‘பத்து செகண்ட் முத்தம்’ - அப்பவே அப்படி! #WriterSujatha

சில நாட்களுக்கு முன், ‘பி.வி.சிந்துவிடம் மொபைலைத் திருப்பிக் கொடுத்தார் பயிற்சியாளர் கோபிசந்த்... ஐஸ்க்ரீம் சாப்பிட அனுமதி அளித்தார்’ என்றெல்லாம் செய்திகளில் அடிபடும்போது தேஜாவூ போல, ரொம்ப வருஷம் முந்தியே எங்கயோ படிச்சிருக்கோமே என்று பொறி தட்டிக்கொண்டே இருந்தது. 

வீட்டுக்குப் போய் புத்தக அலமாரியைக் கலைத்துப் போட்டு கண்டுபிடித்துவிட்டேன்! 

பத்து செகண்ட் முத்தம்! 

வாத்தியார் சுஜாதா எழுதிய நாவல்தான் இது.

இப்படி ஆரம்பிக்கிறது.

‘துப்பாக்கி மெதுவாக உயர்த்தப்பட்டது.

ஒரு விரல் அதன் விசையில் தயாராகியது..

‘ட்டப்!’

கதை இதுதான்:-

தன் அக்கா மகள் ரசி-யை சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரத்தகுதியானவள் என்று அவளது சிறுவயதிலேயே கண்டுகொள்கிறார் ராஜ்மோகன். வீட்டில் பேசுகிறார். ‘கல்யாணம் பண்ணிட்டு எங்கவேணா கூட்டிட்டுப் போ’ என்கிறார்கள். இவருக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. அவளது திறமை மீது அபார நம்பிக்கை. எப்படியோ பேசி, அவர்கள் குடும்பக் கடனை அடைக்க ஒரு தொகையைக் (2000 ரூபாய்!)  கொடுத்து ரசியை கூட்டிவந்து பயிற்சி அளிக்கிறார். டெல்லியில் போட்டி. ஒரு பத்திரிகையின் நிருபரும்,  (மனோகர்), கேமராமேனும் (த்ரிபாத்தி)  இவளது பேட்டிக்காக பின்னாலேயே அலைகிறார்கள்.

 ராஜ்மோகனுக்கு அது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. திட்டிவிடுகிறார். ரசியையும் திட்டுகிறார். மனோவோ, ‘இவன்கிட்ட இருந்து அவளைப் பிரிச்சு, என்கிட்ட வரவெச்சு..’ என்று சபதமெல்லாம் போடுகிறான்.

ஏஷியாட்டில் மின்னலெனப் பறந்து பெயர் வாங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிருபர் - மனோகர் - வலையில் விழுந்துவிடுகிறாள். ராஜ்மோகனை உதாசினப்படுத்துகிறாள். 

’நீ கல்யாணம், குழந்தை குட்டி என்று டிபிகல் குடும்பப் பெண்ணாக ஆகவேண்டிய ஆளில்லை. உன் கால்கள் ஓடுவதற்கென்றே படைக்கப்பட்டவை’ என்று சொல்கிறார் ராஜ்மோகன். 

ஒரு கோச்சாக, ஸ்டிரிக்டாக இருக்கும் ராஜ்மோகன் என்ன செய்கிறார்.. ரசி என்ன செய்கிறாள் என்பதை.. யெஸ்.. அதுதான்.. கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் சுஜாதா.

சுஜாதா எதில் எக்ஸ்பர்ட் என்று நான் சொல்வது சூரியனுக்கு டார்ச் வகையில் சேரும் என்றாலும்.. புத்தகத்தின் ஒரு சில சுஜாதாடா மொமண்ட்ஸ்

#சுஜாதாடா மொமண்ட்-1

ரசி? என்னடா பேர் இது.. என்று பார்த்தால் தமிழரசியைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அந்தப் பெயர் வடநாட்டில், ஈஸியாக அப்படித்தான் உச்சரிக்கப்படுகிறது. 

#சுஜாதாடா மொமண்ட்-2

கதையின் சில பகுதிகளில் வாத்தியாரின் ஜம்ப்.  

தமிழரசி, அவள் இஷ்டத்திற்கு விரோதமாக ராஜ்மோகனால் ஓர் அறையில் அடைக்கப்பட்டிருக்க, போலீஸ் கேஸ் கொடுக்கிறான் மனோகர். கோர்ட்டில் வாதம்.

இரண்டு பக்கங்களுக்கு இந்த வாதம் போகிறது. 

கடைசியில்..

 “ஓகே. ஐல் இஷ்யூ எ ஸர்ச் வாரண்ட். அந்தப் பெண்ணை என் முன் கொண்டு வந்து நிறுத்தி அவளை நான் விசாரிக்க விரும்புகிறேன்”

“அதேதான் நாங்களும் கோருவது. உங்களுக்கு இதற்கு அதிகாரம் இருக்கிறது. செக்‌ஷன் நைன்ட்டி எய்ட்”

கோர்ட்டை விட்டு வெளியே வரும்போது வக்கீல் “த்ரிபாத்தி, பெண் அங்கேதானே இருக்கிறாள்? இல்லையென்றால் மாஜிஸ்டிரேட் ரொம்பக் கோபித்துக் கொள்வார்” என்றான்.

புரிகிறதா?

கோர்ட்டில் நீதிபதியின் தீர்ப்பு, கோர்ட் நடைமுறைகள் எக்செட்ரா எக்செட்ராவை ஒரே ஜம்பில் கடந்து விட்டார். திரை பாணி இது. 
பல இடங்களில் இப்படித்தான். 

நான் ஒரு நல்ல படமா உன்னை அழைச்சுட்டுப் போறேன் என்று மனோகர் சொல்வதற்கு அடுத்த வரியாக, தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் ‘எப்படி இருந்தது?” என்றான் - வருகிறது. இதைப் படிக்க ஈஸி. எழுதவும் ஈஸிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால்,  எப்படிக் கூட்டிக் கொண்டு போனான், எந்தத் தியேட்டர், எப்படி அமர்ந்தார்கள், என்ன படம் என்பதையெல்லாம் எழுதாமலே - தேவையில்லை இதெல்லாம் என்று - எழுதும்போதே எடிட்டராக சிந்திப்பது - சுஜாதாயிஸம்.  

#சுஜாதாடா மொமண்ட்-3

ஒரு குருவி வாங்க ஆசைப்படுகிறாள் தமிழரசி. 

மனோகர்: ‘அதையெல்லாம் வளர்க்கிறது கஷ்டம்”

“வளர்க்கறதுக்கில்லை. வாங்கிக் கூட்டில இருந்து திறந்து வெளிய விட்டுர்றதுக்கு” என்றாள்.

“சரிதான். வெளிய விட்டாப் பத்து நிமிஷத்தில செத்துப் போயிரும். காக்கா, பருந்து ஏதாவது அல்வாத்துண்டு மாதிரி கொத்திக்கிட்டுப் போயிரும். சில பறவைகளை எல்லாம் வெளிய விடக்கூடாது!” 

-கபாலி ஞாபகம் வருகிறதா?  

#சுஜாதாடா மொமண்ட்-4

நாவலின் தலைப்பு. பத்து செகண்ட் முத்தம். அதாவது, நூறுமீட்டர் ஸ்ப்பிண்ட் ஓட்டத்தை 11.7 செகண்டில் சாதித்த தமிழரசியை, ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்த பத்து செகண்டில் ஓடச் சொல்கிறார் கோச் ராஜ்மோகன். ‘10 செகண்ட்ல நூறு மீட்டர் தூரத்துல இருக்கற டேப்பை முத்தமிடணும்’ என்கிறார். அதுதான் பத்து செகண்ட் முத்தம்.  

ஏஷியாட்டில், ஓட்டம் முடிந்து ஐஸ்க்ரீம் சாப்பிடும் இளைஞர்களைப் பார்த்துக் கொண்டே மாமாவை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் தமிழரசி. “ம்ஹும்.. எதுவும் கிடையாது” என்று மறுக்கிறார் மாமா. ‘முடிஞ்சப்பறம்?” முடிஞ்சப்பறம் ஒலிம்பிக் என்று ஐஸ்க்ரீமுக்கு தடை விதிக்கிறார். 

ஐஸ்க்ரீமுக்கு தடை விதிக்கறதெல்லாம் காலங்காலமா நடக்கறதுதான். ஆனால்,  இது நாவலுக்கான கண்டெண்ட் எழுதலாம் என்பதுதான் ஓர் எழுத்தாளனாக சுஜாதா நிற்கிற இடம்.  

1983ல் டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்த சமயத்தில் எழுதப்பட்டது.

கதையின் க்ளைமாக்ஸ் மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. - எகெய்ன் - எனக்கு. ‘சார்.. தொடரை முடிச்சுடலாம் சார்’ என்று கேட்டிருப்பார்களோ என நினைக்கிற வகையில் அவசரவசர முடிவு. ‘நீயெல்லாம் கருத்து சொல்ற பாரேன்’ன்னு மேல இருந்து திட்றது கேட்குது.. ஸாரி வாத்யாரே.

கோபிசந்தும், பி.வி.சிந்துவும் டாபிகலாக இருக்கும் இன்றைய தேதியில், இதை உடனடியாகப் படமாக்கலாம் என்றொரு எண்ணம் வந்தது. யோசித்தால், இறுதிச்சுற்று உட்பட பல ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்களும் இந்த வகைதானே?

-பரிசல் கிருஷ்ணா