Published:Updated:

''நான் மரம் பேசுகிறேன்!''


‘‘மழை, நிழல் மட்டுமல்ல... பறவைகளுக்கு வசிப்பிடமும், கால்நடைகளுக்குத் தழையும், மனிதர்களுக்குச் சகலமும் தருகிறேன். மண்ணரிப்பையும் தடுக்கிறேன். இப்படி எல்லோருக்கும் எல்லாமும் தரும் என்னை, ஏன் வெட்டுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் அழிந்துவிடுகிறேன். அது இயற்கை. அதை, மாற்ற முடியாது. ஆனால், சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், உயர் அழுத்த மின்பாதை கோபுரம் அமைத்தல் போன்ற காரணங்களால் என்னை அகற்றுகிறார்களே... அதை, எங்கே போய்ச் சொல்வது? என் பயன் அறியாத சில மானிட ஜென்மங்கள், போராட்டம் என்ற பெயரில் என்னை வெட்டிச் சாய்க்கின்றன. இப்படித் தினந்தோறும் நான் அழிக்கப்படுவதால், சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைகிறது... வெப்பச்சலனம் ஏற்படுகிறது... மழைப்பொழிவு குறைகிறது. இதற்கு எல்லாம் யார் காரணம்? நீங்கள்தானே... இப்படி என்னைப்பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றன. இதையெல்லாம் சொல்வது யாராக இருக்கலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம்... நான் மரம்தான் பேசுகிறேன்.

‘‘என்னைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாமே?’’

என்னை (மரம்) நடும் விழா ஒன்றில் அமைச்சர் தலைமையில், என் இன சகநண்பர்கள் 100 பேர் அங்கே நடப்பட்டனர். சில மாதங்கள் கழித்து, ‘என் சகநண்பர்களில் எத்தனை பேர் பிழைத்திருக்கின்றனர்’ என்று உதவியாளரிடம் கேட்டார் அமைச்சர். ‘நடப்பட்டவர்கள் 100 பேர்... செத்தவர்கள் 101 பேர்’ என்றார் உதவியாளர். ‘அது எப்படி?’ என்று கேட்ட அமைச்சரிடம், ‘எங்களை நடுவதற்கு 100 பேரை (கிளைகளை) வெட்டியதில், இருந்த மொத்த (மரமும்) பரம்பரையும் செத்துவிட்டது’ என்றாராம் உதவியாளர். இப்படித்தான், என்னை நடும் விழா என்ற பெயரில், உயிரோடு இருக்கிற எங்களைச் சாகடிக்கும் நிகழ்வுகள் அரசியல்வாதிகளால் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ‘நீரின்றி அமையாது உலகு’ என்று சொல்கிறோமே தவிர, அதற்கு மூலகாரணமாய் இருக்கும் என்னை வளர்க்கக் கவனம் செலுத்துவது இல்லை. இன்றைய காலகட்டத்தில் என்னை நடுவதற்குக் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, நன்றாய் இருக்கிற என்னைக் காப்பாற்றவாவது நடவடிக்கை எடுக்கலாமே?

பிரபலங்களின் பசுமை அமைப்புகள்!

ஒவ்வோர் ஆண்டும், ‘வறுமை ஒழிப்பு நாள்’ என்று அறிவித்து பிறந்த நாள் விழா எடுத்துவந்த விஜயகாந்த், இந்த ஆண்டு ‘பசுமைத் தமிழகம்’ என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி எங்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார். ‘இதன்மூலம் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு என் நண்பர்கள் 1,000 பேர் (மரக்கன்றுகள்) வீதம் 234 தொகுதிகளிலும் எங்களை நடவேண்டும். நடப்பட்ட என் நண்பர்களைத் தண்ணீர் ஊற்றி ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும்’ என்று என் நண்பர்களைத் தூக்கிக்கொடுத்து, தன் கட்சித் தொண்டர்களுக்குக் கோரிக்கைவைத்தார். சுற்றுப்புறச் சூழலுக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும் ‘பசுமைத் தாயகம்’ என்கிற ஓர் அமைப்பைத் தொடங்கிக் கடந்த 1995-ம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். அவருடைய இந்தத் தொண்டைக் கண்டும் நான் மகிழ்கிறேன். ‘பசுமை கலாம் திட்டம்’ மூலம் என் இன சகநண்பர்களை நட்டுவரும் நடிகர் விவேக், ‘எங்களை வளர்க்கும் விழிப்பு உணர்வை மாணவர்கள், கிராமத்து மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் வளர மழைநீர் தேவை. அதற்கு நாங்கள் தேவை. எங்களை வளர்த்து, வளத்தைப் பெருக்குவீர்’ என்று சென்னையில் நடைபெற்ற என்னை நடும் விழா ஒன்றில், அவர் பேசியிருந்தது எங்களுக்குப் பெருமையாய் இருந்தது.

எழுத்தாளர் மீ.ப.சோமு-வின் வியப்பு!

19-ம் நூற்றாண்டில் ஜெகதீஸ் சந்திரபோஸ் என்ற இந்திய விஞ்ஞானி, எங்களுக்குரிய உணர்ச்சி, அறிவு நிலைகளை எடுத்துக்காட்டி மெய்ப்பித்தார். அவற்றைப் பிற விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். ‘புல்லும் மரனும் ஓரறிவு இனவே’ என எங்களுக்கும் உயிர் உண்டு என்பதைத் தமிழர், தொல்காப்பிய காலத்திலேயே எழுதியுள்ளனர். அத்தோடு, பல்வேறு வகையான காரணப் பெயர்களையும் கொடுத்திருந்தனர். ஒருமுறை, குளிர்பிரதேசமான அயர்லாந்துக்குச் சென்ற எழுத்தாளர் மீ.ப.சோமு, அங்கிருந்த அரசினர் தோட்டத்தில் அழகாய் வளர்ந்திருந்த என் சகநண்பர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாராம். ‘எப்படி இவைகளை வளர்க்க முடிந்தது’ என்று அந்தத் தோட்டத்தின் தலைவரிடம் கேட்டுள்ளார். ‘பெரிய கொட்டகை போன்ற கூடாரம் அமைத்து அதில் மின்சார விளக்குகளைப் பொருத்தி அவற்றின்மூலம் வெப்பமான சூழலை உண்டாக்கி வளர்த்தேன்’ என்றாராம் அவர். குளிர்பிரதேசம் மிகுந்த அந்த நாட்டில்கூட என்னை வளர்ப்பதற்காக எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

சிந்துவெளி நாகரிகத்தில் வழிபாடு!

பழங்குடி மக்களிடையே பெரும்பாலும் நாங்களே குலமரபுச் சின்னங்களாக இருந்துள்ளோம். மூவேந்தர்களாகிய சேரன் (பனை), சோழன் (அத்தி), பாண்டியன் (வேம்பு) ஆகியோருக்கும் குலமரபுச் சின்னங்களாக இருந்துள்ளோம். சிந்துவெளி நாகரிகத்தில் எங்கள் வழிபாடு இடம்பெற்றுள்ளது. அவர்களின் முத்திரைகளில் என் சகநண்பர்கள் (அரச மரங்கள்) அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அசோக சக்கரவர்த்திகூட சாலை ஓரங்களில் எங்களை வளர்க்கச் செய்தார் என வரலாறு குறிப்பிடுகிறது.

பேராசிரியர் டி.எம்.தாஸின் ஆய்வு!

அந்தக் காலத்தில் மக்கள் எங்களை வணங்கி இருக்கிறார்கள். இன்றும் எங்களை வழிபட்டு வருகிறார்கள். சுபகாரியங்கள் அனைத்துக்கும் நாங்கள் பயன்படுகிறோம். வீடு, காடு, கோயில் என என் சகநண்பர்கள் தரம் பிரிக்கப்பட்டோம். ஆல், அரசு, வேம்பு ஆகிய நண்பர்கள் ‘மும்மரங்கள்’ என அழைக்கப்பட்டார்கள். இவற்றுக்குக் கீழேதான் தெய்வப் படங்களைவைத்து மனிதர்கள் வழிபட்டு வருகின்றனர். அதேபோல் மருத்துவத்துக்கும் பயன்படுகிறோம். சித்த மருத்துவத்தில் எங்களைப் பற்றிய பயன்கள் நிறையச் சொல்லப்பட்டிருக்கின்றன. என்னால் மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை ஆய்வுசெய்து வெளியிட்டிருக்கிறார் பேராசிரியர் டி.எம்.தாஸ். ‘பல குளிர்சாதன இயந்திரங்கள் ஒருநாள் முழுவதும் தொடர்ச்சியாக இயங்குவதால் ஏற்படும் குளிர்ச்சியை, நான் (ஒரு மரம்) என் நிழல் மூலம் தந்து உதவுகிறேன். ஓர் ஆண்டுக்கு 18 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஓர் ஏக்கரில் உள்ள என் சகநண்பர்கள் தருகிறார்கள்’ என்று அதில் தெரிவித்துள்ளார் டி.எம்.தாஸ்.

ஆஸ்திரேலிய அரசின் தடை!

உலக நாடுகளில் எல்லாம் நான் எப்படி வளர்க்கப்படுகிறேன் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் மாத்தளை சோமு. ‘ஆஸ்திரேலியா நாட்டில் என்னை வெட்ட அரசு தடை செய்துள்ளது. வீட்டின் கூரையில் விழுந்துவிடும் என்றாலும் அதை வெட்ட உடனே அனுமதி கிடைக்காது. நிபந்தனையோடுதான் வெட்டப்பட வேண்டும். புதிய வீட்டமைப்புத் திட்டங்களை உருவாக்கும்போது என்னை வெட்டுவதைத் தவிர்த்தே அனுமதி கொடுப்பார்கள். தப்பித்தவறி என்னை வெட்ட வேண்டும் என்றால், அதற்கு ஈடாக என் சகநண்பரை நடவேண்டும். அத்தோடு 10,000 முதல் 15,000 ஆஸ்திரேலிய டாலர் பணத்தைப் பிணைத்தொகையாகக் கட்டவேண்டும். நட்ட என் சகநண்பரின் வளர்ச்சியில் திருப்தி ஏற்பட்டால்தான் அந்தத் தொகை திரும்பக் கிடைக்கும்.

‘மரங்களின் மாதா’ வங்காரி மாதாய்!

ஜெர்மனி, சுவிஸ், பிரிட்டன், கனடா, நார்வே போன்ற நாடுகளில் எங்களை வெட்ட அனுமதிப்பதில்லை. ஆனால், இவர்களின் தேவைகளுக்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெட்டப்பட்ட என் சகநண்பர்களை இறக்குமதி செய்கின்றனர். ஆப்பிரிக்காவில் என் நடுகையைப் பேரியக்கமாக மாற்றி நோபல் பரிசை வென்றவர் வங்காரி மாதாய். இவர் ஆரம்பித்த ‘பசுமைப்பட்டி இயக்க’த்தால் இதுவரைக்கும் கென்யா உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் என் சகநண்பர்கள் பல கோடிக்கும் மேல் வளர்ந்துள்ளனர். அதனால்தான் லங்காரி மாதாய், ‘எங்களின் (மரங்களின்) மாதா’
என்று அழைக்கப்படுகிறார்.

திருவண்ணாமலை சம்பவம்!

பசுமையை நேசிக்கும் சுவிட்சர்லாந்து மக்கள், எங்களை அவசியம் வெட்டுவதாய் இருந்தால்கூட பலதடவை யோசித்துதான் முடிவு எடுக்கிறார்கள். தங்களுடைய திருமண, பிறந்த நாட்களின்போதுகூட நினைவாக எங்களை நடுவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கட்டுரையாளர் மாத்தளை சோமு, தன்னுடைய ‘வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்’ நூலில் என்னைப்பற்றி நிறைய தகவல்களைத் தந்துள்ளார். ஆனால், இங்கே அப்படியா நடக்கிறது? அரசியல்வாதிகள் அவர்களின் பிறந்தநாளின்போது என்னைவைப்பதோடு சரி... அடுத்தநாள் நான் இருக்கிறேனா என்பதைக்கூடப் பார்க்கமாட்டார்கள். அதுபோல் வெட்டுவதற்கு எந்தத் தயவுதாட்சண்யமும் பார்க்கமாட்டார்கள். திருவண்ணாமலையில் இரவோடு இரவாக என் நண்பர்கள் பொக்லைன் இயந்திரங்களால் பிடுங்கி எறியப்பட்ட சம்பவம் மிகக் கொடூரமானது.

உயிர்துறந்த பிஷ்னோய் சமூகத்தினர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவர்கள் பிஷ்னோய் சமூகத்தினர். இவர்கள் எங்களைப் பாதுகாக்க தம் உயிரையும் ஈந்துள்ளனர் என்பது வரலாறு. 1731-ல் மார்வாரின் மன்னராக இருந்த அபய்சிங், ஜோத்பூர் கோட்டையைக் கட்டுவதற்காக அருகில் உள்ள கேச்சாட்லி கிராமத்தில் இருந்த எங்கள் இன நண்பர்களை (வன்னி மரங்களை) வெட்டி வரும்படி கிரிதாரி தாஸ் ஹக்கீம் எனும் தளபதிக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, அங்கு சென்ற தளபதிக்கு அம்ருதாதேவி பிஷ்னோய் என்ற பெண் தலைமையில் பலர்கூடி எங்கள் இன நண்பர்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி, அங்கு நின்றிருந்த 363 பேரையும் தாக்கிவிட்டு எங்கள் இன நண்பர்களை வெட்டிச் சென்றார் தளபதி கிரிதாரி. தன் தவற்றை உணர்ந்த மன்னர், அந்தச் சமுதாய மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அங்குள்ள எங்கள் இன நண்பர்களைப் பாதுகாப்பதற்கும் உத்தரவிட்டார். இதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் இந்த இன மக்கள் கேச்சாட்லி கிராமத்தில் கூடி விழா எடுக்கின்றனர். என் இன நண்பர்களைக் காக்க உயிர்துறந்த அம்ருதாதேவியின் பெயரில் மத்திய வனத்துறை அமைச்சகமும், ராஜஸ்தான் மாநில அரசுகளும் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கின்றன என்பதும் எங்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.  

‘பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ பயன் இல்லை!’

என்னை வெட்டினால் எவ்வளவு இழப்புகள் ஏற்படும் என்பதை நன்கறிந்தவர் சுற்றுச்சூழலியலாளர் முகிலன். அவர் எனக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். என்னைப் பற்றி அவர், ‘ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகளை வைக்கவேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு இருக்கின்றன. வெட்டப்பட்ட எந்த இடத்திலும் மரங்கள் நடப்படவில்லை. இதற்குப் பொறுப்பு டோல்கேட் நிறுவனத்தினர். இதில், அவர்கள் அக்கறையின்றிச் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கமும், அதிகாரிகளும் ஆதரவாக உள்ளனர். ஆனால், டோல்கேட் வசூல் மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. மரக்கன்றுகளைவைத்துப் பாதுகாக்கும் நிறுவனங்களுக்கே டோல்கேட் உரிமை வழங்கவேண்டும். உச்ச நீதிமன்றம் சொன்ன எந்த வழிமுறைகளையும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தண்ணீர் ஊற்றி மரக்கன்றுவைப்பதைப் போன்று படங்கள்தான் வெளிவருகின்றன. ஆனால் தொடர்ந்து அதைப் பராமரிப்பதில்லை. இது ஒருநாள் கூத்து. அரசாங்கத்தில் 65 லட்சம் மரக்கன்றுகள் வைத்ததாகச் செலவுக் கணக்கைக் காட்டுகின்றனர். ஆனால், அடுத்த ஒரு வருடத்தில் இதில், எத்தனை பிழைத்திருக்கின்றன என்று யாரும் சொல்வதில்லை. அத்தோடு, இந்த மண்ணுக்கு ஏற்ற பாரம்பர்ய மரங்களை வைக்காமல், எதற்குமே உதவாத மரங்களை வைக்கின்றனர். இதனால் பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை’ என்று தன் ஆதங்கத்தை எங்களுக்காகக் குமுறுகிறார் முகிலன்.

மரங்களை வளர்க்க வழிமுறைகள்!

என் நலம்விரும்பியான கோவை நாராயணசாமி, ‘முதலில் ஒன்றியங்கள்தோறும் சர்வே செய்து கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். பிறகு அந்த நிலங்களைச் சீர்செய்ய வேண்டும். மூன்று அடி உயரமுள்ள உள்நாட்டு ரக மரங்களான வாகை, புரசு, அரசம், புளி, வேம்பு, கொன்றை, பன்னீர் பூ, பூவரசு, பனை, செர்ரி, ஆச்சா, சீனி புளி, புங்கன், நாவல், புன்னை போன்ற மரங்களை அதில் நட்டு வளர்த்தால் நல்ல பயன் கிடைக்கும். மேற்கண்ட முறையில் ஒன்றியம்தோறும் சுமார் 50 ஹெக்டேர் நிலத்தில் இதுபோன்று மரம் வளர்த்தால், அந்தப் பகுதியில் 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை வெப்பம் குறைய வாய்ப்புண்டு. மேலும், ஆண்டுதோறும் 3 செ.மீ மழை கூடுதலாகப் பொழியும். இதைச் செயல்படுத்த ஒன்றியம்தோறும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகள் முதலில் 50 ஹெக்டேர் நிலத்தினை ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும். பிறகு, சமூக ஆர்வலர்களுடன் இணைந்து முதல் ஆண்டில் 20,000 மரங்கள் வளர்ப்பதற்கான நர்சரி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஓர் ஒன்றியத்தில், இதுபோன்ற 10 நர்சரிகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம் 2 லட்சம் மரங்களை ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யமுடியும்’ என்று என்னை வளர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார்.

என்னுடைய ஆவல் என்னவென்றால், ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடம் ஒவ்வொரு மரக்கன்றுகளை வழங்கி, பராமரிக்கச் செய்தாலே... அவர்களைப்போல நாங்களும் வளர்வோம்.’’  

- ஜெ.பிரகாஷ்

படம்: ரமேஷ் கந்தசாமி