Election bannerElection banner
Published:Updated:

கடிதம், கமல், வண்ணதாசன், சிறுவர் இலக்கியம்... - கிரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

கடிதம், கமல், வண்ணதாசன், சிறுவர் இலக்கியம்... - கிரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு
கடிதம், கமல், வண்ணதாசன், சிறுவர் இலக்கியம்... - கிரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

கடிதம், கமல், வண்ணதாசன், சிறுவர் இலக்கியம்... - கிரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

உங்களுக்கு யாரிடமிருந்தெனும் கடிதங்கள் வருகின்றனவா. நீங்கள் யாருக்கேனும் கடிதம் எழுதுகிறீர்களா? கு.அழகிரிசாமி பற்றிய நினைப்பு வருமா?

கடிதமழை ஓய்ந்து பலகாலம் ஆகிவிட்டதே. நினைக்கும் போது பெருமூச்சு விடத் தோன்றுகிறது. என்னுடைய மரத்தில் முதல் காய்ப்பே கடிதங்கள்தான். எனது முப்பது வயதுக்கு மேலேதான் கதைகள் என்று அரும்புவிடத் தோன்றின.

முறையான எழுத்துப் பயிற்சி கிடையாது. ழகர, ளகர, ரகர றகர மற்றும் ஒற்றுகள் போன்ற எழுத்துப்பிழைகள், வார்த்தை வாக்கியப் பிழைகள் என்று. 'கோதண்டம்' போன்ற தண்டனைகள் தரத்தக்க குற்றங்கள் கொண்டவன் அடியேன். இப்பேர்ப்பட்ட 'நிரட்சரகுட்சி'யானவனுக்கு ஒரு மத்திய அரசு சுதந்திரப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் பதவி தந்தார்களே; என்ன சொல்ல, இங்கே உள்ள தமிழ்ப் பேரறிஞர்கள் கடுமையாக என்னை எதிர்த்ததில் என்ன தப்பு?

ஆனாலும் எனது கடிதங்களுக்கு நண்பர்கள் மத்தியில் தனீ மவுசு இருந்தது. விடிந்தால்த் தெரியும் வெளிச்சம் கு.அழகிரிசாமி இல்லாமல் கடிதங்கள் கிடையாது.


கமலஹாசன், அவரது பிறந்த நாளில் உங்களைச் சந்தித்து ஒரு லட்சம் கொடுத்து கௌரவித்ததாக அறிகிறோம். அந்த சந்திப்பைப் பற்றிச் சொல்ல முடியுமா?

எதிர்பாராத ரசமான சந்திப்புதான். பதிவு செய்யலாம்.

சென்னைக்கு என்னால் வர முடியாத நிலை என்று சொல்லி விட்ட பிறகு, அவரே இங்கு வந்தார்.

கமலை நான் இவ்வளவு கிட்டத்தில் வைத்துப் பார்த்ததில்லை; தூரத்தில் வைத்தும் பார்த்ததில்லை.

அவரிடம் எனக்கு அதிசயமாகப் பட்டதைச் சொல்ல வேண்டாமா.

கிருஷ்ணரைப் பார்க்க சுதாமா என்கிற குசெலர் கிழிந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு போனாராம். என்னைப் பாக்க வந்த கமலும் கிழிந்த கால்ச் சட்டையை மாட்டிக் கொண்டுதான் வந்தார்!

அந்த வெளிர் நீல நிற முழுக்கால்ச் சட்டையின் ரெண்டு மூட்டுகளிலும் கிழிந்து ஓட்டை விழுந்திருந்தது.

'அட, இது என்ன' என்று தோன்றியது.

அவரிடம் எனது முதல்ப் பேச்சே இப்படி ஆரம்பமானது. ''பாண்டிச்சேரிக்கென்றே போட்டுக்கிட்டு வந்தீகளா இப்படி?"

கமல் எத்தனை மாதிரியெல்லாமோ சிரிக்கத் தெரிந்தவரல்லவா. அதிலிருந்து சத்தமில்லாத ஒரு சிரிப்பைச் சிரித்தார். பதில் பேசவில்லை படு அடக்கம்!

அவருடைய சுபாவம் இது இல்லை என்பது தெரியும் பேசலாமே என்று நான் கேட்டதும், தன்னோடு வந்த ஒருவரைக் காட்டிப் பேச ஆரம்பித்தார்.

இவங்க என் நற்பணி மனத்தைச் சேந்தவங்க. இவங்களுக்கு நீங்க எதாவது சொல்லுங்க என்றார்.

அந்த அன்பர் எங்களுக்கு அருகில் தரையில் உட்கார்ந்திருந்தார். எல்லோருக்கும் உட்கார நாற்காலி போட முடியாத சிறிய இடம் அது. என் அருகில் நாற்காலியில் சுகா (நெல்லைக் கண்ணன் அவர்களுடைய பிள்ளையாண்டான்) கமலோடு வந்தவர் உட்காந்திருந்தார். எனதுஇடது பக்கம் நாற்காலியில் கமல்.

சுகாவையும் நான் அப்போதுதான் பார்க்கிறேன். எனக்குப் பேச்சை எப்படி ஆரம்பிக்க என்று தெரியவில்லை. புத்திமதி போல எதையாவது சொன்னால் மடத்தனமாக இருக்கும். உபதேசமாகச் சொல்ல நான் ஒன்றும் மகிழ்வானந்தா சுவாமிகள் இல்லை.

"சுகா, ஒரு ராகம் பாடுமேம்" என்றும் அவரை இப்போது சொல்ல முடியாது. சொன்னால் பாடுவார்தான்; எனக்கும் ஆசை உண்டு; இப்போ இவர்கள் வந்தது அதுக்காக இல்லையே. இப்படி யோசித்துக் கொண்டிருந்தவன் அந்த நற்பணி அன்பரைப் பார்த்து

"உங்களுக்குக் கமல் என்கிற ஒரு அருமையானவர் கிடைத்திருக்கிறார்" என்று என் வாய் பேச ஆரம்பித்தது!

வாய் சும்மா இருக்காதே. ஆரம்பித்துவிட்டால் நிறுத்துகிறதுதான் சிரமம்.

ஒரு பைசா கொடுத்து பேசக் கூப்பாட்டு விட்டு ஒம்பது பைசா தந்து நிறுத்தச் சொன்னார்களாம்! வாய்களின் சங்கதியே இப்படித்தான். விசயம் இல்லாமல் பேசுகிறதும் எழுதுகிறதும் படு சுலபம்.

சினிமாக்காரர்கள் இருக்கும் இடத்தில் தடுக்கி விழிந்தாலும் ஒரு சினிமா மேல்த்தான் விழணும். இளவட்டம் என்று இருப்பவன் ஒவ்வொருவனுக்கும் ஒரு அழகிக் கன்னிகை பேரில் ஒரு கனவு இருக்கும் என்று ஒருவர் சொல்ல, குணாவுக்கு அபிராமி கிடைத்தது போல என்று நான் சொன்னதும், கமல் வேறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்தவரின் காது - கண் போல் திருப்பாது என்றாலும் - என் பக்கம் கேட்கிறது தெரிந்தது. 

குணா எனக்குப் பிடித்த படம். அதில் நடிக்கும் அபிராமி என்னுடைய சென்னாதேவி போல் இல்லை எனக்கு.

ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் அழகு, என்று சொல்லி, எப்படி அது என்று விவரித்தேன்.

உலகமெல்லாம் சீதாதேவியின் அழகு பற்றி வியந்து கொண்டிருந்த போது கிஷ்கிந்தை நகரத்துப் பெண்களுக்கு, அதிலும் தங்கள் கணவன் மார்களைப் போரில் பறிகொடுத்துவிட்டு விதவைக் கோலத்தில் இருந்த பெண் குரங்குகளுக்கு, அப்பேர்ப்பட்ட அழகுபட்ட - சீதையைப் பார்க்கணுமே என்று தோன்றி விட்டதாம்.

பார்க்க முடியாது போலிருக்கே? அவர்கள் அவசரம் அப்படி.

கொஞ்சம் தாமதித்தாலும் பரதன் தீயில் பாய்ந்து செத்துப் போவனா -----------

இவர்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் இந்த தியாகிகளைக் கண்ணெடுத்தும் பார்க்காமல் பாராமுகமாகப் போய்விடுவது சரிக்கிடையாது என்றுபட்டது சீதைக்கு.

அவள் ராமனிடம் ஒரு வார்த்தை சொன்னபோது, விமானத்தை தாழப் பறக்க வைத்து எல்லாரும் சீதையைப் பார்க்கிறபடி போகட்டும் என்று உத்தரவிட்டான் ராமன்.

விமானம் தரையை ஒட்டிப் பறந்தது. எல்லாப் பெண்களும் சீத்தாதேவியைப் பார்த்தார்கள். முக்கியமாக பின் அழகையே கவனித்தார்கள்.

ஏமாற்றமே ஏற்பட்டது கிஷ்கிந்தையில் பெண்கள் அனைவருக்கும்!

விமானம் போகடும் போகட்டும் என்று சொல்லி விட்டார்கள். போய்விட்டது.

சீதையின் அழகில் அப்படி என்ன குறை கண்டார்கள் இந்த பெண்கள்?

எல்லாம் சரிதான்; வால் இல்லையே என்கிறார்கள் இவர்கள்!

இப்போது நாம் பார்க்கிற டி.வி. ராமாயணக் கதைகளில் வருகிற எந்தப் பெண் வானரங்களுக்கும் நமது கலைஇயக்குனர்கள் வால் வைப்பதில்லை!

இப்படி நான் சொல்லி முடித்ததும் கமல்கால்ப் புன்னகைபூத்தார்.

நாங்கள் வீட்டில் உள்ளவர்கள் போக கமலோடு வந்தவர்கள் மட்டும்தான் இருந்தோம். வேற ஒரு கொசு கூட வரவில்லை. என் நண்பர் நாயக்கர் மட்டும் கமல் வருவதற்கு முன்னாலேயே வந்திருந்தார்.

அநியாயத்துக்கு இப்படி ஒரு சின்னக் கூட்டம் கூட இல்லாமல் இருக்கே என்று தோன்றிக் கொண்டே இருந்தது!

கமல் சாருக்குக் குடிக்கக் காபி டீ என்று எதைக் கொடுக்க என்றும் யோசனை மனசுக்குள்.

கமல் பாவநாசத்துத் திருக்கு மீசை வைத்திருந்தார். கூழோ பாயசமோ தர முடியாது; மீசைக்குத் தரும் மரியாதை இல்லை அது.

எங்கள் சிறிய மருமகள நாச்சியாரு கமல் வருவதற்கு முன்னாடியே தயாராகக் கொஞ்சம் முருங்கை இலை பறித்து வைத்திருந்தாள். எல்லாருக்கும் ஒரு பெரிய்ய மடக்கு அளவுக்கு சிறிய சிறிய தம்ளர்களில் முருங்கையிலை சூப் தயாரித்து, குடிக்கும் சூட்டில் தாம்பாளத்தில் வைத்து எல்லோருக்கும் நீட்டினாள். அனைவரும் எடுத்துக் கொண்டோம்.

கமல் அதை எப்படிக் குடிப்பார் எனு நான் ஒருச் சாயந்த பார்வையில் கவனித்துக் கொண்டிருந்தேன். 

பெரும்பாலானவர்கள் மேல் உதட்டின் அளவுக்குக் கீழே மீசை இறங்கி விடாமல் இருக்க அதைக் கவனமாக மேலே தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

மேலாக்கைப் பெண்கள் சரி செய்து கொண்டே இருந்து பிறகு அதே பழக்கமாகி விடுவது போலத்தான் இதுவும். மீசையைப் போல உபத்திரவம் வேற ஒன்றிலும் இல்லை.

என்ன செய்ய ஆம்பிளைக்கு அழகு மீசை என்று பெரியாட்கள் சொல்லி வைத்து விட்டார்களே.

மீசையைப் பற்றிய கதைகள் ஏராளம்! கட்டபொம்மு ராஜசபை ஆசனத்தில் வந்து அமர்ந்து விட்டால், கவிராயர்கள் கலைவாணர்கள் என்று வரீசையாக வந்து பாடுவார்கள் அவரைப் புகழ்ந்து.

புகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தவன் கதை உலகம் அறிந்ததுதான்.

கட்டபொம்முவின் கை விரல்கள் சதா மீசையில்த்தான் இருக்கும். அடப்பக்காரன் அவர் முகத்தையே கவனித்துக் கொண்டிருப்பான். கவிராயர் பாடி முடிந்ததும் தாம்பாளத்தில் எவ்வளவு வைக்க வேண்டும் என்று கட்டபொம்முவின் விரல்கள் நாசுக்காகத் தெரிவித்து விடும். இடது பக்க மீசையைத் தடவினால் இவ்வளவு, வலதுபக்க மீசையைத் தடவினால் இரண்டு மடங்கு, இடதும் வலது தடவினால் நாலு மடங்கு இப்படியெல்லாம் உண்டுமாம்.

பார்க்கிறவர்களுக்கு, ராஜா மீசையை ஒதுக்குகிறார் என்று மட்டும் தான் தெரியும்.

குறிப்பிட்ட சில சாதிகளில் ஆண்கள் கட்டாயம் மீசை வைத்துக் கொள்ள வேண்டும்.

சில சாதிகளில் மீசை கூடாது. வேண்டும் என்றுதான் பாரதி மீசை வைத்துக் கொண்டார்.

'சாஸ்திரத்துக்கு' மீசை வைத்துக் கொள்வதும் உண்டு. மூக்குக் கீழே ஒரு ஈ வந்து உட்கார்ந்து இருப்பது போலலிருந்து பிறகு அது இட்லர் மீசையாகி, மேலு தடுமட்டும் வரை அகலமும், அதன் பிறகு விழுதுகள் இருபக்கமும் வடிவது போலாகி, திடீரென்று பாம்பு படமெடுப்பது போல் சீறி எழுந்து காது வரையிலும் போய், அகலமாகும்.

மீசையின் நீளம் படு நீளமாகி ஒரு மைல் தூரம் வரை(!) இருப்பதாகக் கேள்விப்பட்டும் படத்திலும் பார்த்திருக்கிறோமே.

மீசைகளைப் பேணுவதே ஒரு தொழிலாக கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

''பதநீர் குடிக்கப் பட்டை மீசை" என்று சொல் உண்டு. அதைக் கண்ணால்ப் பார்த்திருக்கிறேன்.

ரசிகமணி அவர்களின் மீசை பற்றி தனியாகச் சொல்லணும்.

மீசை புராணத்தை இத்துடன் முடித்துக் கொள்வோமா. ஒன்றைத்தொட்டு ஒன்று வந்து கொண்டே இருக்கும். கமலின் வருகை ஒரு, வசந்தம் வந்து போனது போல என்றும் நினைவில் நிற்கும்.


சினிமாவுக்கும் உங்களுக்குமான தொடர்பு ?

கி.ரா.வுக்கும் சினிமாவுக்கும் ஏதோ ஒரு தொந்தம் இருக்கும் போலிருக்கு!

என் வீட்டிற்கு வந்த நடிகர்கள், சிவகுமார், ஆர்.பார்த்திபன், நாசர், கே.பாக்யராஜ் இப்படி....

ஒருநாள் என்னுடைய நண்பர் தளபதி கோபால கிருஷ்ணன் கோவில்பட்டியிலிருந்து என்னைப் பார்க்க மெனக்கிட்டுவந்தார். என் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரொம்பப் பேரை அப்படியேத் திரும்பிப் போயிருக்கிறார்கள். இவர் கையில் எனது முகவரியை வைத்துக் கொண்டிருக்கிறார். சரியாகத் தெருவுக்கும் வந்து விட்டார்.

(என்னுடைய மகன் பிரபி தேடி வந்த போதும் ஒரு தமாஷ் நேர்ந்தது. எனது பெயர்க்கு முன்னால் ரைட்டர் என்று  சொன்னதும் எந்த ஸ்டேஷனில் ரைட்டர் வேலை பார்க்கிறார் என்று கேட்டிருக்கிறார்கள்!)

ஆனால் இவர் சொன்னது எழுத்தாளர். அப்படி இங்கே யாரும் இல்லையே என்று சொல்லி விட்டார்கள். ஒரே ஒருத்தர் சொன்னாராம்: ''அட, நடிகர் நாசர் வந்த வீடா; இந்தா இதுதாம்" என்று காட்டினாராம்.


நண்பர் தளபதி என் வீட்டுக்குள் நுழையும் போதே நடிகர் நாசர் உங்க வீட்டுக்கு எப்போ வந்தார் என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

பாலியலில் நாம் உண்மையிலேயே சரியான வரலாற்றுப் பின்புலம் கொண்டவர்கள் தானா?

இந்தப் பாலியல் குறித்தப் புரிதலின்மை, பாலியல் வெறுமை எங்கிருந்து தொடங்குகிறது என்று நினைக்கிறீர்கள்.
பாலியல் வெறுமை என்பது அறியாமையிலிருந்து தொடங்குகிறது.
புரிதலின்மை என்பது மடத்தனத்திலிருந்து வருவது.
ஒரு பதிலை ஒன்பது பேர்கள் ஒன்பது விதமாகப் புரிந்து கொள்ளலாம்.
வரலாறு என்பது முடிந்து விடுவதில்லை. நமது பெரியவர்கள் இவைகளைப் பற்றி ஏராளமாகச் சொல்லியிருக்கிறார்கள். என்றாலும் நாம் உரித்த வாழைப் பழமே தேடுகிறவர்களாக இருக்கிறோம்.

 இந்தக் காலகட்டத்தில் சிறுவர் இலக்கியம் எவ்வளவு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?; சிறார் கதைகளும் எழுதியிருக்கிறீர்களே...

அதென்னெ ''இந்தக் காலகட்டத்தில்"? சிறுவர்களுக்கான, சிறுவர்களுடைய இலக்கியம் எப்பவும் வேண்டும்தான்.

"பிஞ்சுகள்" குழந்தைகள் குறுநாவலை நான் எழுதி நான் முடித்து வைத்த போது, ''இலக்கியச் சிந்தனை" அமைப்பிலிருந்து, கையெழுத்து பிரதிகளுக்கும் விருது கொடுப்போம் என்பதை அறிந்து அனுப்பினேன் விருதும் கிடைத்தது. அப்படி எழுதிய கையெழுத்துப் பிரதியை யாரும் - எந்தப் பிரபல இதழ்களும் - ரொம்ப நல்லா வந்திருக்கு; ஆனால் பிரசுரிக்க முடியாததற்கு வருந்துகிறோம் என்று சொல்லி விட்டார்கள்! அதனால் நேரடியாகப் புத்தகமாகவே வந்தது. அதற்கு அட்டைப்படம் வரைந்தவர் மதிப்பிற்குரிய ஆதிமூலம் அவர்கள் தான். 1979ஆம் ஆண்டு என்று ஞாபகம் மீராவே கொண்டு வந்தார்.

சிறுவர்களுக்கு எழுதும் போது நாம் சிறுவர்களாகவே ஆகிவிடுகிறோம். அது ஒரு ஆனந்தம்; படைப்பவருக்கும் படிப்பவருக்கும்.

கரிசல் இலக்கியத்தை உங்களைப் போன்றவர்கள் முன்னெடுத்ததைப் போல வேல ராமமூர்த்தி கருவக் காட்டு இலக்கியம் ஒன்று இருக்கிறது அதை நான் எழுதுகிறேன் என்கிறாரே.... 

இதற்கு பதில் ஒரே வரிதான்:
ஆயிரம் பூக்கள் மலரட்டுமே.

தோழர் ஜீவாவோடு நெருங்கிப் பழகியவர் நீங்கள். அவருடனான அனுபவங்கள் சொல்லுங்கள்..

தோழர் ஒரு வித்தியாசமான மாமனிதர். மேடைப் பேச்சை ஒரு கலையாகவே தந்தவர். எனது ஆயுளில் அப்படி ஒரு மேடைப் பேச்சைக் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை.

குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கும்.

மதம் பிடிக்காத அந்த யானையைப் பற்றி எனது எழுத்தில் இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன.

அனுபவம் என்று கேட்டதால் சொல்லுகிறேன் மீண்டும் இதை:

''புல்லாய் பூண்டாய் புழுவாய்..." என்ற தமிழ்ப் பாடலை மேடை தோறும் சொல்லி, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இந்தப் பாடல் அப்படியே சொல்கிறதெ என்று வியப்பார்கள். அதில் கல்லாய் மனிதராய் என்று வரும் இடம், எப்படித் திரும்பவும் புல்லிலிருந்து உயிர் வளர்ச்சி மீண்டும் கல்லாகும் என்று தோழரிடம் கேட்கவும், ''ஆமா... எப்படி அங்கே கல் வந்தது என்று யோசித்தார்.

''கல்லாய் மனிதராய் என்பதை
கல்லா மனிதராய் என்று போட்டுப்பாருங்கள்
என்றேன். அவர் முகத்தில் பிரகாசம் தோன்றியது.

ஜீவா அவர்கள் ரசிகமணியின் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாதவர். இந்தத் திருத்தத்தைக் கேட்டவுடன், ரசிகமணியின் திருத்தங்கள் அனைத்தையும் நான் பார்க்கணுமே. அவருடைய பேரனிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்களேன் என்று கேட்டுக் கொண்டார்.

எழுத்தாளர் வண்ணதாசனை அழைத்துக் கொண்டு போய் நீங்கள் தான் பள்ளியில் சேர்த்தீர்களா. அப்படி ஒரு முறை சொன்னதாக ஞாபகம். அப்போது தி.க.சி. என்ன செய்து கொண்டிருந்தார்.?

நினைத்துப் பார்க்கிற போது பல விசயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது; பல விசயங்கள் ஞாபகத்து வரமாட்டேனெக்கிறது. வண்ணதாசனிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளணும். ஆனாலும் சொல்லுகிறேன்:

அவனை நாங்கள் கல்யாணி கல்யாணி என்றுதான் கூப்பிடுகிறது. ஆண்பிள்ளைகளை இப்படிப் பெண்பெயர்களால் கூப்பிடுகிறது ஒரு சுவாரச்யம். தமிழில் இப்படிப் பெயர்கள் நிறைய்ய இருக்கிறது.  கோமதி, காந்தி, பேச்சி (அப்பன்) கஸ்தூரி இப்படி. கல்யாணி பெயரில் ஒரு ராகம் இருப்பதால் இன்னொரு விசேசம்.

கல்யாணியைக் கூட்டிக்கொண்டு போன அந்தப் பள்ளிக்கூடம், சுலோசன முதலியார் பாலத்தைக் கடந்து தாமிரபரணி ஆற்றங்கரையில், ''பிள்ளையை விட்டு விட்டுப் பிலாப்பழம் எடுக்கப்போன ஓடை"யையும் கடந்து போகணும். அனேகமாக அது வண்ணார்ப்பேட்டையாக இருக்கலாம்.

கல்யாணியை எந்த வகுப்பில்... அய்ந்தா ஆஹா ஞாபகமில்லை. டவுனில் எத்தனையோ பள்ளிகள் இருக்க வண்ணார்பேட்டைக்கு ஏன் போகணும்; ஞாபகம் இல்லை.

தி.க.சி. என்னோடு வரவில்லை என்பது மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு.

அந்நேரத்தில் அதேபள்ளிக்கு ''சாந்தி" இதழ் ஆசிரியர், தோழர் எஸ்.ஏ.முருகானந்தம் ஏன் அங்கே வந்தார் என்பது ஞாபகத்துக்கு வர மாட்டேன் என்கிறது.

எல்லாம் கனவில் நடந்தது போல் இருக்கிறது.

பிறந்தநாள் வணக்கங்கள் ஐயா!

-வெய்யில், கதிர்பாரதி
புகைப்படம்: புதுவை இளவேனில்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு