Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

''மயிலாப்பூர் மயானத்தில் பிரபாகரன்!''மனம் திறக்கிறார் இயக்குனர் ஜனநாதன்

##~##

''நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே மயிலாப்பூர் தேவடித் தெருவில் உள்ள வீட்டில் தான்!''-மலரும் நினைவுகளில் நீந்துகிறார் இயக்குநர் ஜனநாதன்.

'' 'தேவடி’ என்பது ஓர் உருதுச் சொல். தமிழில் 'வாசல்’ என்று பொருள். மயிலாப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது கோயில்கள்தான். அதற்கு இணையாக, பெரிய பெரிய பள்ளிவாசல்களும்  உண்டு. குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவர்களை பள்ளிவாசல்களுக்கு அழைத்து போய், ஓதி ஊதுவார்கள். அப்படி ஊதினால், நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. அப்படி என் மேல் ஊதிய அந்தக் காற்று இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது. மற்றொருபுறம் சாந்தோம் சர்ச். பிரார்த்தனை, விழா, விசேஷம் என சர்ச்சில் பல நாட்கள் கழிந்தன. வீட்டுக்கு அருகிலேயே கபாலீஸ்வரர் கோயில். தோழர்களுடனான எங்களுடைய மாலை நேரச் சந்திப்புகள் கபாலீஸ்வரர் கோயில் படிக்கட்டுகளில்தான் நடக்கும். இப்படி சுற்றிலும் வழிபாட்டுத் தலங்கள் சூழ வாழ்ந்தாலும் நான் நாத்திகனாகவே வளர்ந்தேன்.

என் ஊர்!

எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் வந்தாலும் எப்போதும் எனக்கு இறை நம்பிக்கை ஏற்பட்டதே இல்லை. அது ஏன் என்பதும்  தெரியவில்லை. எங்கள் வீட்டிலும் பூஜைகள் நடந்ததாக நினைவில் இல்லை. திராவிட இயக்கச் சூழலில் வளர்ந்ததால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம்.

நடுத்தெருவில் இருந்த வன்னியர் சங்க ஆரம்பப் பாடசாலையில்தான் என் துவக்கக் கல்வி. பிறகு, சாந்தோம் உயர்நிலைப் பள்ளி. எஸ்.எஸ்.எல்.சி வரை அங்குதான் படித்தேன். அதற்கு மேல் படிக்காவிட்டாலும், ரொட்டிக்காரத் தெருவை என் இன்னொரு பள்ளி என்பேன். அங்குதான் பல தோழர்களின் அறிமுகங்கள் கிடைத்தன. மார்க்சியம் பேசும் தோழர்கள். அந்தச் சந்திப்புகளில் நான் கற்றது நிறைய. 'உலகத்தை மாற்றி அமைக்கும் சக்தி மார்க்சியத்துக்கு மட்டுமே உண்டு’ என்று அன்று கொண்ட கோட்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளேன். பாவல் சங்கர், பாவை சந்திரன், டி.எஸ்.எஸ்.மணி, எஸ்.நடராஜன், பாஸ்கர் ராய், கணேசன், காசிநாதன் போன்ற தோழர்களுடனான சந்திப்புகள் பெருகப் பெருக... தமிழ்த் தேசியம், மார்க்சியம் குறித்த கருத்துக்கள் விசாலமாகின.

பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் முதல் அண்ணா சமாதி வரையிலான எங்களுடைய விளையாட்டுக் களம் மிக மிகப் பெரியது. பள்ளிப் பாடப் புத்தகத்தில், 'மெரினா, உலகத்தின் இரண்டாம் மிகப் பெரிய அழகிய கடற்கரை’ எனப் படித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'நாம டெய்லி விளையாடுற இடத்தையா இப்படி எழுதி இருக்காங்க. இது உண்மையா, இல்லை பொய்யா?’ என்ற ஆச்சர்யம். சென்னையில் லைட் ஹவுஸ், எனக்குத் தெரிந்தே கட்டப்பட்டது. நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பாலன் என்பவர்தான் அதற்கு அப்போது இன்சார்ஜ்.  லைட் ஹவுஸ் பாலன் என்றே அழைப்பார்கள். லைட் ஹவுஸை பலர் மேலே ஏறி பார்த்து இருக்கலாம்.  ஆனால், நான் பாலனின் உதவியுடன் அதன் லென்ஸையே பார்த்தவன்.

என் ஊர்!

மயிலாப்பூர், கடற்கரை ஓரப் பகுதி என்பதால், கப்பல் மாலுமிகளாக பல நாடுகளைச் சுற்றிய மனிதர்கள் இங்கு அதிகம். ஆறு மாதங்கள் - ஒரு வருடம் என நீண்ட  இடைவெளிக்குப் பின் வருவார்கள். அவர்களில் பலர் என் நண்பர்கள். தங்களின் உலகப் பயண அனுபவங்களைக் கடை விரிப்பார்கள். ஒரு செட் கடலுக்குப் போக... மறு செட் கரைக்கு  வர... என மாலுமிகள் போக்குவரத்து என்பது நடந்துகொண்டே இருக்கும். அதனால், எனக்குக் கப்பல் மீது மிகப் பெரிய ஆர்வம். அப்போது மாலுமி ஆக வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. அது நடக்கவில்லை. பிறகு, சென்னை துறைமுகத்தில் டாலி கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தேன். 'இயற்கை’ படத்தின் கதைக்களமாக துறைமுகம் அமைந்ததும் அந்தப் பாதிப்பில்தான். அப்போது சினிமா ஆர்வம் இல்லை.

மயிலை அம்பேத்கர் பாலம் பக்கம் உள்ள சுடுகாடு. நாங்கள் விளையாடிய இடம், என் நண்பர்கள், உறவினர்கள் சிலரை எரியூட்டிய இடம் என்பதால், சுடு காட்டுக்கும் எங்களுக்கும் தொடர்பு உண்டு. ஒரு சம்ப வம்... மயிலை சுடுகாட்டை என் மனதைவிட்டு நீங்காமல் வைத்து இருக்கிறது. புலவர் புலமைப்பித்தனின் மகள் கண்ணகி இறந்தபோது, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வந்திருந்தார். கூடவே, ஐந்து வாகனங்களில் புலிகள். எத்தனையோ இறப்புகளைத் தன்  கண் எதிரே பார்த்தவர், புலமைப்பித்தனைக் கட்டி அணைத்து தேற்றிக்கொண்டு இருந்தார். அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். இறுதிச் சடங்குகளின்போது, எந்த வார்த்தைப் பரிமாற்றங்களும் இன்றி, அவரின் உடல் மொழிகளுக்கு ஏற்ப புலிகள் செயல்பட்டனர். ஈமச்சடங்கு முடிந்தது. 'புறப்படலாம்’ என அவர் எதுவும் வாய்விட்டுச் சொல்லவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஐந்து வாகனங்களும் ஒரே நேரத்தில் விர்ர்ரென விரைந்து  வந்தன. அவர் அருகே நின்ற வேனின் பக்கவாட்டுக் கதவு திறந்துகொள்ள,  லேசாகக் காலடி எடுத்தவரின் கையை உள்ளே இருந்த புலித் தோழர்கள் பிடிக்க, மின்னல் வேகத்தில் புழுதியைக் கிளப்பியபடி வேன்கள் பறந்தது இன்றும் நெஞ்சில்  இருக்கிறது.

சிறு வயதில் சினிமா ரசிகனாக ஓடி ஓடிப் படங்கள் பார்த்த காமதேனு, லிபர்டி, ஆனந்த், வெலிங் டன், கெயிட்டி, சித்ரா, பாரகன், பிளாசா, சன், குளோப், கபாலி தியேட்டர்கள் இன்று வேறொன்றாக மாறியோ... மூடப்பட்டோவிட்டன. ஒரு ரசிகனாக இந்த வருத்தம் இருந்தாலும்... இன்று சத்யம், ஐநாக்ஸ், எஸ்கேப் என மல்ட்டிபிளெக்ஸ்களின் வருகை... ஒரு சினிமாக்காரனாக எனக்கு மகிழ்ச்சி.

இன்றும் சில வெறுமையான பொழுதுகளில்... தேவடித் தெரு, ரொட்டிக்காரத் தெரு, வன்னியர் சங்க பாடசாலை, கபாலீஸ்வரர் கோயில் படிக்கட்டுகள் என நினைவுகள் வந்து வந்து போகும். மார்க்சிஸ்டாக இந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டாலும்... ஓர் எளிய மனிதனாக சில ஏமாற்றங்களைத்  தவிர்க்க முடியவில்லை!''

- ம.கா. செந்தில்குமார், படங்கள்: சொ. பாலசுப்பிரமணியன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு