Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

மயில் உலாவும் மண்!

##~##

கார்ட்டூனிஸ்ட் கண்ணா. தமிழ் பத்திரிகை உலகின் ரசனை ஓவியர். ஜோக்குகளின்  நையாண்டி கார்ட்டூன்கள்... கண்ணா ஸ்பெஷல். விகடனில் வெளிவரும் 'லூஸுப் பையனின்’ படக் கதை கார்ட்டூன்களுக்குத் தத்ரூப உயிர் கொடுப்பது கண்ணாவின் கற்பனைதான். தான் பிறந்த மண் ணான தொண்டாமுத்தூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார் கண்ணா...

 ''தொண்டாமுத்தூர் அருகே உள்ள வலையப் பாளையம் கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தை ஒட்டி இருக்கும் எங்கள் வயக்காடு. வானம் பார்த்த பூமி. கடலை, சோளம் பயிரிடுவோம். யானை, காட்டுப் பன்றிகளுக்குப் போக, மீதம் எங்களுக்குக் கிடைக்கும். ஆனாலும், மலை எங் களை கைவிடவில்லை. தாத்தா, அப்பா, பெரியப்பா, சித்தப்பாக்கள் அதிகாலை மலை மீது ஏறுவார்கள். காய்ந்த மரங்களை வெட்டி, தொண்டாமுத்தூர் சந்தையில் விற்பார்கள். 70-களின் தொடக்கத்தில்தான் கோவையில் மில்களின் சாம்ராஜ்யம் தொடங்கியது. காடு, மேடு அலையாமல் எட்டு மணி நேரம்வேலை. கைநிறைய சம்பளம். கூட்டம், கூட்டமாக மக்கள் மில் வேலைக்கு ஓடினார்கள். கோவையின் இன் றைய வளர்ச்சிக்கு வித்திட்டது அந்தத் தொழிலும் தொழிலாளர்களும்தான்.

என் ஊர்!

சுமார் 20 கிராமங்களின் முக்கியத் திருவிழா, சித்திரை மாதம் 'நோம்பி கட்டுவது’. ஒவ்வொரு ஆண்டும் அம்மனுக்கு பூ போட்டு பார்ப்பார்கள். அம்மன் அனுமதி அளித்தால் மட்டுமே நோம்பி. அதனால், எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நோம்பி வரும் என்று சொல்ல முடியாது. நோம்பி யின் சிறப்பு, 'எருது கட்டு’. மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் எருதுகள், அசுர பலம்கொண் டவை. ஒவ்வொரு கிராமம் சார்பிலும் விழாவுக்காக ஓர் எருதுவை பிடித்து வர வேண்டும். இளந்தாரிகள் எருது பிடிக்க மலை மீது கூட்டமாக ஏறுவார்கள். இரண்டு, மூன்று நாட்களானாலும் எருதுடன்தான் ஊருக்குள் வர வேண்டும். பிடித்து வந்த எருதினை ஊர் பொது இடத்தில் கட்டிப் போட்டு அதற்கு முன்பாக ஜமா வைப்பார்கள். 'ஜமா’ என்றால், சுமார் 20 பேர் விதவிதமான பறைகள், கொம்பு வாத்தியம், தப்பட்டை போன்ற அசுர வாத்தியங் களை இசைப்பது. 10 கி.மீ. தாண்டிக்கூட பறை ஓசை கேட்கும். நான்கைந்து நாட்களில் அந்த முரட்டு இசைக்கு முன் எருது பழகிப் பணிந்து விடும்.

என் ஊர்!

நோம்பியின் கடைசி நாளன்று ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் எருதுகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்து, அதை நான்கைந்து பேர் சேர்ந்து தலைக்கு மேலாகத் தூக்கி அம்மனை தரிசிக்க வைப்பார்கள். பின்னர் அதைக் காட்டுக்குள் கொண்டுவிடுவார்கள். ஆனால், அம்மன் அனுமதி அளிக்காததால், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா நடக்கவில்லை.

என் ஊர்!

நான் படித்த சுப்ரமணியம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியை மறக்கவே முடியாது. துவக்கப் பள்ளி குழந்தைகளுக்கே அரசியல் அரிச்சுவடு கற்றுக் கொடுத்த பள்ளி அது. அங்கு 'பாலர் சபை’ உண்டு. ஆறு மாதத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்களைத் தேர்வு செய்வார்கள். கை உயர்த்தி ஆதரவு தெரி விப்பதன் மூலம்  ஓட்டுப் பதிவு நடக்கும். அரை மணி நேரத்தில் சட்டசபை பதவிகள் நிரம்பிவிடும். நான் மூன்று முறை உணவுத் துறை அமைச்சராகவும், இரு முறை உள்துறை அமைச்சராகவும், ஒரு முறை விவசாயத் துறை அமைச்சராகவும் இருந்து உள்ளேன்.

பல்வேறு சாதிகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கும் ஊர் இது. இன்று பிழைப்பு என்ற நிர்ப்பந் தத்துக்காக சென்னையில் வசிக்கிறேன். ஆனால், நெஞ்சம் முழுக்க நிறைந்து இருக்கிறது தொண்டா முத்தூர்!''

சந்திப்பு: டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: வி.ராஜேஷ், சொ.பாலசுப்ரமணியன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு