Published:Updated:

கதை கதையாம் காரணமாம்!

கதை கதையாம் காரணமாம்!

##~##

கோவை மாவட்டத்தில் சில பேருந்து நிறுத்தப் பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்து இருக்கும் சில சுவாரஸ்ய கதைகள் இங்கே...    

 ஒலம்பஸ், கோவை.

கதை கதையாம் காரணமாம்!

லிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்பதே உண்மையான பெயர். அது மருவி, ஒலம்பஸ் ஆகிவிட்டது. பெயர்க் காரணத்துக்கு உரியவர், ஒரு விளையாட்டு வீரர். சுமார் 70 ஆண்டு களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டவர் நாகப்பத் தேவர். ஆனால், இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் அப்போது ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவில்லை. அதற்கு அடுத்த முறையும் போரின் பாதிப்புகளால் ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போனது இவரது துரதிருஷ்டம்.

அப்போது கோவையின் கலெக்டராக இருந்த மோரிஸ் என்கிற ஆங்கிலேயர் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி, இவரது வீடு அருகே அமைந்திருந்த பேருந்து நிறுத்தத்துக்கு 'ஒலிம்பிக்ஸ்’ என்று பெயரிட்டார். அதன் பின் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும், நாகப்பத் தேவர் தனது வீட்டின் முன் ஒலிம்பிக் கொடி ஏற்றி, ஒலிம்பிக் தீபத்தைத் தனது தெருவில் ஏந்தி வருவதை வழக்கமாக்கிக்கொண்டார். நிறைவேறாத ஒலிம்பிக் ஆசையுடனேயே கடந்த 2007-ம் ஆண்டு இறந்துவிட்டார் நாகப்பத் தேவர்!

ஹோப்ஸ் காலேஜ், கோவை

கதை கதையாம் காரணமாம்!

ரண்டாம் உலகப் போர் முடிவுற்ற சமயம். போரின் பாதிப்புகளால் சீர்குலைந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆங்கிலேய அரசின் வரைவுக் குழு, மெட்ராஸ் மகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிட்டது. அதையட்டி, 1945-ம் ஆண்டு கோவையில் ஜி.டி.நாயுடுவால் தொடங்கப்பட்டதுதான் ஆர்த்தர் ஹோப்ஸ் பொறியியல் கல்லூரி. பின்பு, 1950-ல் இந்தக் கல்லூரி கவர்மென்ட் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தடாகம் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது!

     லாலி ரோடு, கோவை

கதை கதையாம் காரணமாம்!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் அன் றைய சென்னை மகாணத்தின் கவர் னராக இருந்த ஆர்த்தர் லாலி என்பவர், சைதாப்பேட்டையில் ஒரு விவசாயக் கல்லூரியைத் தொடங்கினார். ஆனால், மெட்ராஸின் தட்பவெப்ப நிலை, விவசாயக் கல்லூரிக்கு சரிபட்டு வரவில்லை. இதனால், 1906-ம் ஆண்டு கல்லூரியை கோவைக்கு மாற்றினார்கள். இதனால் இன்றைக்கும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் இருக்கும் இந்தப் பகுதிக்கு லாலி ரோடு என்று பெயர்!

       எஸ்.ஆர்.சி. மில், திருப்பூர்.

70-களில் திருப்பூரின் அடையாளமாக இருந்தது எஸ்.ஆர்.சி. மில். ஸ்ரீ ராமலிங்க சூடாம்பிகை மில் என்பதன் சுருக்கமே எஸ்.ஆர்.சி. அப்போது எல்லாம் இந்த மில்லில் வேலை செய்வதே தனி கௌரவம்.  மில்லின் சங்கு சத்தம்தான் ஊருக்கே மணி சொன்னது. மூன்று ஷிஃப்ட்களாக சுமார் 2 ஆயிரம் பணியாளர்களுடன் இயங்கிய இந்த மில், காலப்போக்கில் நிர்வாகக் குளறுபடிகளாலும் தொழில் துறை மந்தம் காரணமாகவும் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. இன்று கல் பெயர்ந்த சுவர் களுடன் இருக்கும் மில்லின் பெயர் மட்டுமே பழம்பெருமை பேசுகிறது!

         புஷ்பா தியேட்டர், திருப்பூர்.

கதை கதையாம் காரணமாம்!

திருப்பூரின் இதயப் பகுதியில் இருக்கிறது புஷ்பா பேருந்து நிறுத்தம். ஆனால், தியேட்டர் இன்று இல்லை. காதர் பாட்ஷா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து கடந்த 1954-ம் ஆண்டு இந்த தியேட்டரை உருவாக்கினார்கள். அன்றைய காலகட்டத்தில் கொங்கு மண்டலத்திலேயே பால் கனியுடன் கட்டப்பட்ட ஒரே தியேட்டர் இதுதான். முன்னதாக 1950-ல் நடந்த இந்த தியேட்டரின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்து சிறப்பித்தார் இந்தியாவின் அப்போதைய நிதி அமைச்சர் கோபால ரெட்டி.

இத் தியேட்டரில்  திரைப்படங்கள் மட்டுமின்றி, கட்சிகளின் பொதுக் கூட்டங்களும், கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டு உள்ளன. கண்ணதாசன், நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத் போன்ற திராவிட இயக்க தளபதிகள் முழங்கிய இடம் இது. நிர்வாக காரணங்களால் கடந்த 99-ம் ஆண்டு மூடப்பட்ட புஷ்பா தியேட்டர், இன்றுவரை திறக்கப்படவே இல்லை!

- பா.விஜய்சந்தர்
  படங்கள்: தி.விஜய், வெ.பாலாஜி

அடுத்த கட்டுரைக்கு