Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

''என் வீட்டில் வானொலி இருந்தது!''

##~##

''ஆறு கரை புரண்டு ஓட, இரு பக்கமும் வயல் வெளிகள் பசுமையாகக் காட்சி தர... என அழகான முன்னுரை கொடுத்து, எனது ஊர் செட்டிக் குப்பத்தைப் பற்றி சொல்ல ஆசைதான். ஆனால், வறட்சி காரணமாக பெரிய ஏரி, ஓட்டேரி ஏரி என இரண்டு ஏரிகளும் வற்றிப்போனது எங்கள் கிராமத்தின் சோகம்!'' என்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவரும் புதிய அரசு அமைந்ததும் தற்காலிகச் சபாநாயகராகப் பொறுப்பு ஏற்ற கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. -வுமான செ.கு.தமிழரசன்.

''சுத்துப்பட்டு 15 கிராமங்களும் குப்பம் என்ற பெயரிலேயே அமையும். எனது தந்தை, முன்னாள் ராணுவ வீரர். அம்பேத்கர் மீது ஈடுபாடுகொண் டவர். எனக்கு ஏழு வயது இருக்கும்போது, எனது தந்தை குப்புசாமி, குடியாத்தம் சட்டமன்றத்தொகுதி யில் தி.மு.க. கூட்டணியில் இந்தியக் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்டுத் தோற்றார். 22 வருடங்களுக்குப் பிறகு, அதே குடியாத்தத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று நான் அப்போது நினைக்க வில்லை.   

என் ஊர்!

எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது  ஆதிக்கச் சாதி மாணவர்கள் எங்கள் பக்கத்தில் அமர்ந்து படிக்க மாட்டார்கள். அவர்களிடம் நாங்கள் பேசக் கூடாது, அவர்கள் பயன்படுத்தும் குடிநீரை நாங்கள் குடிக்கக் கூடாது. இப்படி மோசமான சாதி அனுபவங்களே சிறு வயதில் ஏராளம்.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மலை அடிவாரங்களுக்குச் சென்று மலைத் தேன் தேடு வோம். எங்களது தேடல்கள் அதிகம் தோல்வியில் தான் முடியும். ஆனாலும், மலைத் தேன் சேகரிக்கும் முயற்சியைக் கைவிட மாட்டோம். குடியேற்றம் (இப்போது குடியாத்தம்) நகராட்சி நெல்லூர் பேட் டையில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். அப்போது தான் எனது அப்பா, 'பாட நூல்கள் உன் வாழ்க் கையை உயர்த்திக்கொள்ள உதவும். ஆனால், ரூசோ, பெர்னாட்ஷா போன்றவர்களின் நூல்கள்தான் உன்னுடைய அறிவு வளர்ச்சியை அதிகரிக்கும்’ என்று சொல்லி, பல புத்தகங்களை வாங்கித் தரு வார். விடுமுறை நாட்களில் எனது கிராமத்தில் உள்ள ஏரிகளில் உட்கார்ந்து படிப்பேன். வீட்டுக்குச் சாப்பிட வரவில்லை என்றால் அம்மா களிகரைத்து பச்சை மிளகாயுடன் எடுத்து வருவார்கள்.

என் ஊர்!

அன்றைய காலகட்டங்களில் ஒரு வீட்டில் வானொலிப் பெட்டி இருந்தால், அவர்களுக்கு ஊரில் தனி மரியாதை. எனது தந்தை அப்போது சென்னையில் இருந்து வானொலிப் பெட்டி வாங்கி வந்தார். அப்போது நான் பெருமையாக என் தலையைக் கோதிக்கொண்டு என் வயசுப் பையன்களைப் பார்த்து பெருமையாகச் சிரித்தது இப்போதும் நினைவு இருக்கிறது. ஜவகர்லால் நேரு இறந்த சமயம். கிராமம் முழுவதும் என் வீட்டின் முன்னே நின்றுகொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் அவரது இறுதி ஊர்வலத்தை வர்ணித்தார்கள். எனது தந்தை அதனைப் புரியும்படி கிராமத்து மக்களுக்கு அழுதுகொண்டே சொன்னார். 63 ஆண்டுகளுக்கு முன்பே எங்களது கிராமத்தில் புத்தர் கோயிலைக் கட்டினோம். அம்பேத்கர் வழியில் பௌத்தத்தின் மீதுகொண்ட ஈடுபாட்டின் அடையாளம் அது.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்குச்  சென்னை வந்தேன். அங்கே பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டம், பி.ஹெச்டி  முடித்துவிட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் கிராமத்துக்கே திரும்பினேன். இப்போது என் முகத்தை மறந்து இருப்பார்கள் என்று நினைத்தால், ''வாடா மாப்ளே, எப்படி இருக்கே?'' என்று என் நண்பனும், ''என்ன அண்ணே, வரும்போது கண்ணாடி வளையல் வாங்கி வருவேனு நினைச்சேன்... கையை வீசிட்டு வர்றியே'' என்று  என் எதிர் வீட்டுத் தங்கையும் கேட்டபோது வந்த அழுகை, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நான் குளித்து விளையாடிய ஏரியைப் பார்க்க ஆசையுடன் சென்றேன். ஏரியாக இருந்த பூமி, வீடுகளாகக் காட்சி அளித்தது.

பெரிய அளவு வளமும் வாய்ப்புகளும் இல்லாததாக இருந்தாலும் என் ஊர் எனக்குப் பொன் ஊர்தான்!''

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

என் ஊர்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு