Election bannerElection banner
Published:Updated:

நாசாவைச் சுத்திப் பார்க்கப் போனோம்!

வேலூர் மாணவர்களின் பெருமிதம்

##~##

''என்னால இன்னும் நம்பவே முடியலை. ஹாலிவுட் படங்களில் 'நாசா’வைப் பார்த்ததோட சரி. நிஜமாவே நாசாவில் காலடி எடுத்து வைக்கும்போது, நிலாவில் காலடி எடுத்து வெச்ச ஆம்ஸ்ட்ராங் ஃபீலிங்.  இன்னமும் வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கு. ப்ளீஸ், எங்களைக் கொஞ்சம் தரை இறக்குங்களேன்...'' என்கிறார் மோனா பாலசுப்ரமணியன்.

 ஆண்டுக்கு ஒரு முறை வெளிநாட்டு மாணவ, மாணவிகளை நாசாவுக்கு அழைத்து, அதன் செயல்பாடுகள் பற்றி விளக்குகிறது அமெரிக்காவின் 'நாசா’ நிர்வாகம். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து நாசாவின் வாசலுக்குள் நுழைந்தவர்கள் வேலூர் சிருஷ்டி மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள்.

நாசாவைச் சுத்திப் பார்க்கப் போனோம்!

''சென்னையில் இருக்கும் 'வேர்ல்டு டிராவல் கிளப்’தான் எங்கள் பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தது. போக்குவரத்துச் செலவு, சுற்றிப் பார்க்கும் செலவு, தங்கும் இடம் எல்லாம் சேர்ந்து ஒரு ஸ்டூடன்ட்டுக்குக் கட்டிய தொகை மூன்றே முக்கால் லட்சம். ஆனா, இந்த அனுபவத்துக்காக இன்னும் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கொடுக்கலாம்'' என்கிறார் மோனா.

''மொத்தம் 32 பேர் நாசா போனோம்.  அங்கே ஐந்து நாள் பயிற்சி கொடுத்தாங்க. ஒரு விண்வெளி வீரரை எப்படித் தயார் பண்ணுவாங்க, விண்வெளியில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள், பூமியில் இருந்து எப்படி செயற்கைக் கோள்களை மானிட்டர் பண்ணிக் கட்டுப்படுத்தறாங்கன்னு ஒவ்வொரு செயல்பாடா, ஒவ்வொரு பிரிவா சொல்லிக் கொடுத்தாங்க. வொர்க்கிங் ஸ்டைல், புத்திக் கூர்மை இது மாதிரியான விஷயங்கள்தான் ஒட்டுமொத்த நாசாவின் வெற்றி'' என்கிறார் தமிழினியன்.

நாசாவைச் சுத்திப் பார்க்கப் போனோம்!

தமிழினியனின் தங்கை சிந்தனா, ''எப்பவுமே அவங்க முகத்தில் தயாரா ஒரு புன்னகை இருக்கும். எங்களுக்குப் பல விஷயங்கள் புரியாது. திரும்பத் திரும்ப எத்தனை முறை கேட்டாலும் அதே சிரிப்போடு சொல்லித் தந்தாங்க. விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு கோளின் அமைப்பையும் அச்சு அசலா நாசாவில் செஞ்சு வெச்சிருக்காங்க. நிலா மாதிரியான அமைப்புக்குள் போனால், நிலாவுக்கே சென்றது மாதிரியான உணர்வு'' என்று விழிகள் விரித்து ஆச்சர்யம் காட்டுகிறார்.

''எங்களைப் பல டீம்களாப் பிரிச்சு, ஒவ்வொரு டீமுக்கும் ஒவ்வொரு புராஜெக்ட் கொடுத்தாங்க. அவங்க சொன்ன டைமில் அதை முடிக்கணும்என்பதுதான் சவால். அந்தச் சவாலில் ஜெயிச்சு 'நாங்க கில்லாடிஇந்தியர்கள்’னு நிரூபிச்சோம். இதுவரை சிவில் சர்வீஸ்தான் எங்கள் ஆசையா இருந்தது. ஆனால், நாசா போய்ட்டு வந்த பிறகு, இனிமே எங்க கனவு விஞ்ஞானிகள் கனவுதான்'' என்கிறார்கள் அண்ணனும் தங்கையும்!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

நாசாவைச் சுத்திப் பார்க்கப் போனோம்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு