Published:Updated:

''தமிழ் மட்டும்தான் சொத்து!''

##~##

வேலூர் கொசப்பேட்டையைக் கடந்து போகும் அனைவரும் ஒரு கணம் அந்த வீட்டை திரும்பிப் பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள். வீட்டின் சுற்றுச் சுவர் முழுக்க, தமிழ் வாழ்க என்றும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவணர், பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையன் போன்றவர்களின் தமிழ் உணர்வைத் தூண்டும் வாக்கியங்களும் எழுதப்பட்டு இருக்கும். சுவரில் தந்தை பெரியார், காரல் மார்க்ஸ்,  லெனின், அம்பேத்கர், மறைமலை அடிகள், சிங்காரவேலர், ஜீவா, பிரபாகரன் போன்ற வரலாற்று ஆளுமைகளின் புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன.

 வீட்டுக்குள் சென்றால் இன்னும் ஆச்சர்யத்தின் அகலம் அதிக ரிக்கிறது. ஒவ்வோர் அறைக்கும் காந்தி அறை, குஞ்சிதம் குருசாமி அறை, அஞ்சாநெஞ்சர் அழகிரிசாமி அறை என அரசியல் போரா ளிகளின் பெயர்கள்.

''தமிழ் மட்டும்தான் சொத்து!''

''ஒழிய வேண்டியது சாதி, உயர வேண்டியது தமிழ்!'' என்று அழுத்த மாக ஆரம்பிக்கிறார் 70 வயதுப் பெரி யவர் ராதாகிருஷ்ணன். ''ஐயா, நான் ஆசிரியர் பணிபுரிந்தபோது, எனக்கு அறிமுகம் ஆனவர் வேலூர் மாசிலா மணி. தந்தை பெரியாரின் கொள்கை களால் ஈர்க்கப்பட்ட அவர், இறுதி வரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். அவருடைய வீடுதான் இது. 'சோர்வு அடையாமல் உழைக்கும் பொதுவுடமைப் போராளிக்கு சொத்து இருக்கக் கூடாது’ என்பதால் இந்த வீட்டைக்கூட அவர் தன் பெயரில் பதிந்துகொள்ளவில்லை. இறக்கும்போது, இந்த வீட்டில் என்னை இருக்கச் சொல்லிவிட்டு இறந்துவிட்டார். இந்த வீட்டில் நான் இப்போதைக்கு வசிக்கிறேனே தவிர, நானும் என் பெயரில் இந்த வீட்டைப் பதிந்துகொள்ளவில்லை. மாசிலாமணி ஐயாவோடு பழகி எனக்கும் பெரியார் மீது பிடிப்பு ஏற்பட்டது. என் திருமணத்தை நடத்திவைத்தவரும் பெரியார்தான்.

சாதி ஒழிப்பு, ஆண் ஆதிக்க எதிர்ப்பு, மொழி உணர்வு, இன உணர்வு, பகுத்தறிவு ஆகிய பெரியாரின் கருத்துகளை இயன்றவரையில் பரப்பி வருகிறேன். இப்போது நான் எந்த இயக்கத்திலும் இல்லை. ஆனால், இனத்துக்காகவும் மொழிக்காகவும் எந்த இயக்கம் போரா டினாலும், அந்தப் போராட்டங்களில் நீங்கள் என்னைப் பார்க்க லாம். இந்த வீடே கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்த அளப் பரிய மனிதருடையது என்பதால், நாங்கள் எதை விரும்புகிறோமோ, எதை நேசிக்கிறோமோ, அதையேதான் வீட்டின் உள்ளேயும் வெளி யேயும் எழுதிவைத்து இருக்கிறோம்.

''தமிழ் மட்டும்தான் சொத்து!''

இன்றைய இளம் தலைமுறை வரலாற்றை மறந்துவிட்டது. அரசியல் உணர்வைத் தொலைத்துவிட்டது. குறைந்தபட்சம் இந்த வீட்டைக் கடக்கும்போதாவது தமிழகத்தின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் ராதாகிருஷ்ணன். ஆங்கிலம் துளியும் கலக்காத வார்த்தைகளில் அவ்வளவு உறுதி!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

''தமிழ் மட்டும்தான் சொத்து!''
பின் செல்ல