Published:Updated:

ஒரு நாள்...ஒரே ஒருநாள் பாய் ஃப்ரெண்டா இருந்து பாருங்க! #boyfriendday

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரு நாள்...ஒரே ஒருநாள் பாய் ஃப்ரெண்டா இருந்து பாருங்க! #boyfriendday
ஒரு நாள்...ஒரே ஒருநாள் பாய் ஃப்ரெண்டா இருந்து பாருங்க! #boyfriendday

ஒரு நாள்...ஒரே ஒருநாள் பாய் ஃப்ரெண்டா இருந்து பாருங்க! #boyfriendday

இன்று உலக பாய்ஃப்ரெண்ட் தினமாம். இருக்கும் கஷ்டத்தில் இதைக் கொண்டாட யாருக்கு மனது வரும்? உடனே, 'அவங்களுக்கு எல்லாம் என்ன பாஸ் குறை?' என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள் சிங்கிள் பாய்ஸ். அட, மத்தளமாவது இரண்டு பக்கம்தான் அடிவாங்கும். பாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் டிரம்ஸ் மாதிரி. எல்லாப் பக்கமும் அடிபடுவார்கள். ரகம் வாரியாகப் பிரிச்சுப் பிரிச்சு அந்தக் கஷ்டங்களைச் சொல்லும் டிக்‌ஷனரிதான் ஜி இது.

கேர்ள் ஃப்ரெண்ட்களிடம்:

* அல்பேனியாவில் இருந்து ஸ்பாம் மெசேஜ் வழியாக பழக்கமான கேர்ள் ஃப்ரெண்டாக இருந்தாலும் சரி, ஆண்டிப்பட்டி சந்தையில் பேரம் பேசும்போது பழக்கமான கேர்ள் ஃப்ரெண்டாக இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் பேசி வைத்தது போல ஒரேமாதிரியாக இருக்கிறார்கள். அது - வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீன். 'நான் தூங்கினதுக்கு அப்புறம் ஏன் ஆன்லைன் வந்தே?' என்ற கேள்வியைச் சந்திக்காத ஜென்டில்மேன் மில்க்கி வே கேலக்ஸியிலேயே இல்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. அந்தக் கேள்விக்கான க்ளைமாக்ஸ் கண்டிப்பாக வெட்டுக்குத்தாகத்தான் இருக்கும். (வெட்டு, குத்து ரெண்டுமே பாய் ஃப்ரெண்டுக்குத்தான்.) காலேஜ் குரூப்ல உயிரை வாங்குற ஆளுங்களையும், ஆபீஸ் குரூப்ல மொக்கை போடுற ஆளுங்களையும் நான் எப்படி பேபி காட்டிக்கொடுக்க?

* ரொமான்ஸில் கண்ணுக்குத் தெரியாத அமீபா சைஸில் ஒரு விதி இருக்கிறது. கேர்ள் ஃப்ரெண்ட் 'இது நல்லாருக்கா?' என எதை அனுப்பிக் கேட்டாலும் கூசாமல் 'நல்லாருக்கு' என ரெடிமேட் ரிப்ளை அனுப்பிவிட வேண்டும். தப்பித்தவறி சுமார், குப்பை போன்ற பதில்கள் வந்தால் நெற்றியில் ஒட்டப்படும் பஞ்சர்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல. டிரெஸ், மேக்கப் எல்லாம் போட்டோ அனுப்பிக் கருத்து கேட்பதுகூட பரவாயில்லை. மிளகு ரசத்தை போட்டோ எடுத்து அனுப்பி 'நல்லாருக்கா' எனக் கேட்பது எல்லாம்... இந்த அபலையை அள்ளிக்கோ கடல் மாதாவே!

* கோயில் ஆட்டிற்குக்கூட புல் மேய்வது, தழை தின்பது என பிற கமிட்மென்ட்களுக்கு வாய்ப்பிருக்கிறது. இந்த பாவப்பட்ட பாய் ஃப்ரெண்ட்களுக்கு அதற்கும் வாய்ப்பில்லை. 'என்னை விட உனக்கு வேலை முக்கியமா போச்சா?' என்பார்கள் ஒரு நேரம். 'வேலை பாக்கணும்னு பொறுப்பே இல்லை' என்பார்கள் இன்னொரு நேரம். இந்த 'வேதாளம்' டிரான்ஸ்பர்மேஷனைப் புரிந்துகொள்ள கூகுளில் பேசி மேனுவல்தான் தயார் செய்ய வேண்டும்.

பெற்றோர்களிடம்:

* கஷ்டப்பட்டு கேர்ள் ஃப்ரெண்டை சமாதானப்படுத்திப் படம் பார்க்கவோ, சாப்பிடவோ சென்றிருப்போம். அந்நேரம் கரெக்டாக வீட்டில் இருந்து போன் மேல் போன் வரும். 'ஒருவேளை பின் மண்டைக்குப் பின்னால் இருந்து கேட்ச் செய்துவிட்டார்களோ' என பயம் ஹார்ட்டைக் கவ்வும். கட் செய்தாலும் திரும்பத் திரும்ப அடிப்பார்கள். பீதியோடு அட்டெண்ட் செய்தால் 'சும்மாதான் போன் பண்ணேன்' என்பார்கள். நீங்க சும்மா பேசுறதுக்கு எனக்கு ஏன் பீதியைக் கிளப்புறீங்க?

* பெண்களுக்காவது பரவாயில்லை. கல்யாணப்பேச்சை சட்டென எடுத்துவிடுவார்கள். பையன்கள் வீட்டில் நேரெதிர். சிங்கிளாய் இருக்கும்வரை 'அதுக்கென்ன அவசரம்?' என்பவர்கள் கரெக்டாக நாம் கமிட்டாகும் நேரம் பார்த்து, 'என்ன பொண்ணு பார்க்கலாமா?' என அதட்டுவார்கள். (நீங்க பார்க்கவே இல்லைனுதானய்யா நானா பாத்தேன்) கமிட்டான புதிதில் கல்யாணப் பேச்சையும் எடுக்க முடியாது. அவர்களைச் சமாளிக்க நாம் விதவிதமாய் யோசிக்க வேண்டி இருக்கும். இந்த அறிவை அறிவியலில் பயன்படுத்தியிருந்தால் கக்கத்திற்கு ஒரு நோபல் வாங்கி அடக்கியிருக்கிலாம்.

* விக்ரமன் படம் மாதிரி திவ்யமாக சென்றுகொண்டிருக்கும் லெளகீக வாழ்க்கையில் பொன்னம்பலம் மாதிரி தொடை தெறிக்க என்ட்ரி ஆவார்கள் சொந்தக்காரர்கள். 'உங்க பையனை ஒரு பொண்ணோட பாத்தேனே', ' ஃபேஸ்புக்ல அவன் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் சரி இல்லையே' எனப் பங்குச்சந்தை நிலவரம் போல காலை, மாலை நம் வீட்டில் அப்டேட் தருவார்கள். ஐ யம் பிரவுட் ஆப் யூ ரிலேட்டீவ்ஸ்!

நண்பர்களிடம்:

* படம் பார்க்கப் போவதோ, பார்ட்டிக்குப் போவதோ, டூர் செல்வதோ கரெக்ட்டாக நமக்கு கமிட்மென்ட் இருக்கும் நாட்களில்தான் முடிவு செய்வார்கள். காரணம் சொல்லித் தப்பிக்கலாம்தான். ஆனால் அவர்கள் மட்டும் என்ஜாய் செய்வதை மனம் ஏற்றுக்கொள்ளாது. சரி, கேர்ள் ஃப்ரெண்டை தாஜா செய்யலாம் என்றால், அந்த முயற்சி வழக்கம்போல ரத்தக்காவு எல்லாம் கேட்கும். இந்தக் குழப்பத்தில் பி.பி, சுகர் உள்ளிட்ட பத்து வகையான பிராப்ளம்ஸ் வர வாய்ப்பிருக்கிறது.

* ஆளுங்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்றத்தில் சந்திப்பது போல என்றாவது ஒருநாள் கேர்ள் ஃப்ரெண்டும், நம் நண்பர்களும் சந்திக்கும் வைபவம் நடக்கும். அப்போது பேச்சை வளர்க்கிறேன் பேர்வழி என நம்மைப் பற்றிய அந்தரங்கப் பிரதாபங்களை எல்லாம் டேபிளில் பந்தி வைப்பார்கள். அப்புறமென்ன... பத்து நாட்கள் பாகிஸ்தான் - இந்தியா சண்டைதான்!

* மாசக்கடைசி எல்லாம் லவ்வில் கிடையாதே. இருக்கும் கொஞ்ச நஞ்சக் காசை நம்பி அவுட்டிங் பிளான் செய்திருப்போம். சரியாக நாம் எழுவதற்கு முன் எழுந்து அந்தக் காசை துடைத்து எடுத்துச் சென்றிருப்பான் ரூம்மேட். சரி, சும்மா மீட் செய்யலாம் என்றால் அயர்ன் பண்ணி வைத்திருந்த ஒரே சட்டையையும் போட்டுச் சென்றிருப்பான். கதம் கதம்!

ஆபீஸ்மேட்களிடம்:

* வார நாட்களில் லீவ் போட்டால், பக்கத்து டீம் ஆள் வரை அனைவருக்கும் மூக்கு வியர்க்கும். 'எங்கேயாவது மாட்டுவான்' என வீம்புக்கென்றே தேடித் திரிவார்கள் போல. சதித்திட்டம் தெரியாமல் காய்ச்சல் என நம்பவைக்க ஒழுகாத மூக்கை உறிஞ்சிக்கொண்டே மறுநாள் ஆபீஸ் வந்தால் 'மீட் மீ' என மெசேஜ் அனுப்புவார் மேனேஜர். பத்த வெச்சுட்டீங்களே பரட்டைகளா!

* அவர்கள் வீட்டு வரவு செலவுக் கணக்குகளைகூட இவ்வளவு உன்னிப்பாகப் பார்க்க மாட்டார்கள். நாம் ஃபேஸ்புக்கில் சாட் செய்வதைக் குறுகுறுவென பின்னாலிருந்து எட்டிப் பார்ப்பார்கள். இதில் அடடே, சூப்பர் என ரன்னிங் கமென்ட்ரி வேறு. இந்தப் பாவத்துக்கு கருட புராண தண்டனைகூட பத்தாது மை சன்!

* முந்தைய நாள் போட்ட சண்டையை சால்வ் செய்ய ஒரே ஒருநாள் சீக்கிரம் கிளம்புவோம். 'என்ன பாஸ் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?' என சரியாக சத்தம் கொடுப்பார்கள். அப்ரைசல் நேரத்தில் காதே கேட்காத மேனேஜருக்கு இது மட்டும் கரெக்ட்டாக கேட்கும். அப்புறமென்ன, 'இந்த இஸ்யூவை சால்வ் பண்ணு, அந்த டிக்கெட்டை க்ளியர் பண்ணு' என விடிய விடிய வேலை வாங்குவார். அன்பே சிவம்!

இப்படி சகல திசைகளிலும் அடிவாங்கும் அந்தப் பாவப்பட்ட ஜீவன்களை கொண்டாட ஒருநாள் எல்லாம் பத்தாது சாரே!

- நித்திஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு