Published:Updated:

சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

Published:Updated:
சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

‘‘எப்போது எங்கே சுதந்திரம் நசுக்கப்படுகிறதோ அல்லது நசுக்கப்பட முயற்சிக்கப்படுகிறதோ, அப்போது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன் எனது கண்டனத்தைக் கிளப்புவது மாத்திரமன்று; எப்போதும்போல என்ன சிரமப்பட்டும் சுதந்திரம் பிரகாசிக்கச் செய்வதற்கு என்னால் முடிந்தவரையில் வேலை செய்வதும் எனது தர்மமாகும்’’ என்றவர் சுப்பிரமணிய சிவா. அவருடைய பிறந்த தினம் இன்று. 

‘‘பணத்தின் மீது ஆசையில்லை!’’
சுப்பிரமணிய சிவாவின் தாத்தா முன்சீபாக இருந்ததால், கிராம மக்களிடமிருந்து வசூல் செய்த பணத்தைக் கொண்டுவந்து எண்ணிக்கொண்டிருப்பார். அப்போது, சுப்பிரமணிய சிவா தவழ்ந்து விளையாடிக்கொண்டே தாத்தா இருக்கும் இடத்துக்குச் சென்றார். தாத்தா அந்த நாணயங்களைக் காட்டி, ‘‘உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்’’ என்று சொல்வாராம். ஆனால் சிவாவோ, நாணயங்கள் எல்லாவற்றையும் புரட்டிப்புரட்டிப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஒரு பைசாவை மட்டும் தேடி எடுத்துக்கொண்டாராம். ‘‘இவனுக்குப் பணத்தின் மீது ஆசையேயில்லை’’ என்று சொல்லி சிவாவைக் கட்டியணைத்து மகிழ்ந்தாராம் தாத்தா. சிறுவயதிலேயே பரமசிவன் மரப்பாவை ஒன்றைவைத்து பூஜை செய்தார் சிவா. தன் தாத்தாவிடமே ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றைக் கற்றறிந்தார். இதனால் குழந்தை முதலே இலக்கியத்தில் ஆர்வம்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல பக்தர்களைக்கொண்டு பிரசங்கங்கள் செய்வித்தும், பாடங்கள் சொல்லச் சொல்லியும் கேட்டுவந்தார் சிவா. 

சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர்!
பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோது இவருக்குச் சேட்டைகள் அதிகமாகின. ஆசிரியர்கள் இவரைக் கண்டு பயந்தனர். ஒருநாள் இவருடைய சேட்டைகளைப் பொறுக்க முடியாத ஆங்கில ஆசிரியர், கையை நீட்டச்சொல்லி பிரம்பால் ஆறு அடி கொடுக்க நினைத்தார். மூன்று அடி பொறுத்துக்கொண்ட சிவா, நான்காவது அடியைப் பொறுக்க முடியாததால், அடி விழுந்த பிரம்பை அப்படியே கையினால் பிடித்துக்கொண்டார். ஆசிரியர், எங்கே சிவா தம்மை திருப்பி அடித்துவிடுவானோ என்று பயந்து தலைமை ஆசிரியர் இருந்த அறைக்கு ஓடினார். இதைக் கண்டு மற்ற மாணவர்கள் எல்லோரும் சிரித்தனர். சிவா, பிரம்பை மேஜையின் மீது வைத்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டார். தலைமை ஆசிரியர் சிவாவை அழைத்து, ‘‘நீ ஏன் ஆசிரியரை அடிக்கப் போனாய்?’’ என்று கேட்டார். அதற்கு சிவா, ‘‘நான் அடிக்க எண்ணவேயில்லை. வலி பொறுக்க முடியாமல் பிரம்பைப் பிடித்துக்கொண்டேன். ஆசிரியர் பயந்து ஓடிவிட்டார். அதற்கு நான் என்ன செய்வது?’’ என்று பதிலுரைத்தார். 

‘‘குடும்பத்தில் இருந்திருந்தால் பொறுப்பு தெரிந்திருக்கும்!’’
பால்ய பருவத்தில் பித்துப் பிடித்திருந்த சிவாவின் உறவினர் மூலம் பக்தி மார்க்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்பு, அவர் செய்த செயல்கள் பிடிக்காமல் அவரிடமிருந்து விலகினார். இந்த நிலையில் சிவாவுக்குத் திருமணம் செய்துவைத்தனர் அவருடைய பெற்றோர்கள். ‘‘நீ ஏதாவது வேலை செய்ய வேண்டாமா? இப்படி எத்தனை நாளைக்குத்தான் திரிய முடியும்? என்று சிவாவிடம் தந்தை கேட்க ஆரம்பிக்க, ‘‘உங்களை யார் கல்யாணம் பண்ணிவைக்கச் சொன்னது’’ என்று திரும்பிக் கேட்பாராம்? இருந்தாலும், கடைசியாக குமாஸ்தா வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். அந்த வேலையில் ஒருநாள் முழுக்கக் கட்டுப்பட்டு இருக்க முடியாமல் அடுத்த நாளே திருவனந்தபுரம் சென்றார். அங்கு, ஒரு சன்னியாசியிடம் சீடராகச் சேர்ந்து வேதாந்தப் பிரசங்கங்கள் பயின்றார். அவருடனே எல்லா ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். இதையறிந்த சிவாவின் மனைவி, அவரோடுபோய் ஒட்டிக்கொள்வார். பின்பு, மனைவிக்குத் தெரியாமல் வேறு இடம் சென்றுவிடுவார். இதுபோல் பலமுறை நடந்துள்ளது. தாம் விரும்பினால் மட்டுமே வீட்டுக்குச் செல்வார். அப்படி ஒருசமயம் வீட்டுக்குச் செல்லும்போது அவருடைய தந்தை, அரையணாவைக் கையில்கொடுத்து, ‘‘கீரைத் தண்டு வாங்கி வா’’ என்றார். அவர் கடைக்குப் போய், ஒரு பாகம் நீளமும் பருமனும் உள்ள இரண்டு கீரைத்தண்டுகளை வாங்கிவந்தார். அதைப் பார்த்த சிவாவின் தந்தை, ‘‘சமையலுக்கு லாயக்கில்லை... சண்டைக்கு லாயக்கானது. உணவுக்கும், வீட்டுக்கும் தகுந்தவாறு வாங்கி வரவில்லையே? உனக்கு வயதாகி என்ன பிரயோஜனம்? குடும்பத்தில் இருந்திருந்தால் அதன் பொறுப்பு தெரிந்திருக்கும்’’ என்று கடுகடுத்துப் பேசியதோடு வாங்கிவந்த கீரைத்தண்டைக் கொண்டு கோபத்தில் ஓர் அடியும் அடித்துவிட்டார். இதனால் சிவாவுக்குக் கோபம் வந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். 

‘‘அந்தச் சமயம் தனக்குத் தெரியும்!’’
இந்த நிலையில் சிவாவின் தந்தை நோய்வாய்ப்பட்டார். உயிர் போவதற்குள் சிவாவைப் பார்க்க விரும்புவதாக தன் மனைவியிடம் சொல்ல... சிவாவின் தாயார், அவருக்குத் தெரிந்தவர்களிடம்... ‘‘எங்காவது சிவாவைப் பார்த்தால், அவர் அப்பா நிலையை எடுத்துச் சொல்லி அவரை வீட்டுக்கு வரச் சொல்லுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். வைக்கத்தில் ஒரு நண்பர் சிவாவைப் பார்த்துவிட்டு விஷயத்தைச் சொல்ல... அதற்கு சிவா, ‘‘அந்தச் சமயம் தனக்குத் தெரியும்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். திடீரென்று ஒருநாள் நீண்ட தாடி மீசையுடன் வீட்டுக்கு வந்தார் சிவா. அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ‘யாரோ வைத்தியர் வந்திருக்கிறார்’ என்று எல்லோரும் எண்ணினர். சிவா, தந்தையிடம் சென்று அவர் தலையைத் தன் மடியில் தூக்கிவைத்துத் தடவிக்கொடுத்தார். சிவாவின் தந்தையும், ‘‘வந்தாயா மகனே... எனது ஆசையை ஈசன் நிறைவேற்றி வைத்தார். இப்போதுதான் என் மனம் சாந்தியடைந்தது’’ என்றார். சிறிது நேரத்தில் அவர் உயிர்பிரிந்தது. காரியங்கள் செய்ததோடு அங்கேயே ஒருவருடம் தங்கியிருந்தார் சிவா. 

‘சிவாஜி’ என்று அழைத்த பாரதி!
பின்னர், ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி கூட்டம் நடத்தினார். போலீஸாரின் உத்தரவால் அதிலிருந்து வெளியேறி ஊர் ஊராகச் சென்றார். வேட்டி, ஜிப்பா, தலைப்பாகை, கைத்தடி போன்றவையே அவருடைய சொத்தாக இருந்தன. நெல்லையில் அவர் நடத்திய பிரசங்கத்தில் கூட்டம் சேர்ந்தது. வ.உ.சி., பாரதி, சிவா மூவரும் ஐக்கியமானார்கள். ‘சிவாஜி’ என்று அழைத்து சிவாவைக் கட்டிக்கொண்டார் பாரதி. வ.உ.சி-யும், சிவாவும் கைதுசெய்யப்பட்டனர். ரிமாண்டில் இருக்கும் குற்றவாளி, எத்தனை நாட்களாக இருந்தாலும் சவரம் செய்துகொள்ளக் கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது. ஆனால், சிவா எப்படியோ மொட்டை போட்டுக்கொண்டு சாமியாராகிவிட்டார். கோர்ட்டுக்கு வந்த அவரை அடையாளம் காண முடியவில்லை. கோர்ட் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்குச் சாதுவைப் போல், ‘‘என்ன சொல்றது... என்ன செய்றது?’’ என்று தமாஷாகப் பதிலளித்தார். கோர்ட் அதிகாரி இதுதொடர்பாக ஜெயில் அதிகாரிக்குக் கடிதம் அனுப்பினார்.

வழக்கு நடைபெற்றது. விசாரணையின்போது வாக்குமூலம் அளித்தார் சிவம். அதன் சுருக்கம், ‘‘நான் ஒரு சன்னியாசி. முக்தியடையும் வழியைப் பிரசாரம் செய்வதே எனது வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி, அதை அடையும் மார்க்கத்தைப் போதிப்பதே எனது தொழில். சகலவிதமான வெளிப்பந்தங்களினின்றும் விடுவித்துக்கொள்வதே ஆத்மாவுக்கு முக்தியாகும். அதேபோன்று, ஒரு தேசத்தின் முக்தியாவது அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக்கொள்வது பரிபூரண சுதந்திரம் அடைவது. அதையே இந்த நாட்டு மக்களுக்கும் நான் போதித்தேன்.’’ 

சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க வழி!
விசாரணை முடிந்தது. சிவாவுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிவா, கம்பளி மயிர் வெட்டும் பணியிலும், மாவு அரைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டார். இதுவே, அவருக்குப் பின்னாளில் பெரும்வியாதியாக மாறியது. திருச்சி சிறையில் இருந்தபோது வேம்பு, அரசு போன்ற மரங்களை நட்டார். கம்பளி மயிர் வெட்டுவது அவர் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் அதிலிருந்து தப்பிக்க ஒரு விடை தேடினார். ஓயாமல் இரும ஆரம்பித்தார். மருத்துவர் பரிசோதித்துவிட்டு மருத்துவமனையில் சேர்த்து கவனிக்கச் சொன்னார். உண்மையில் அவருக்கு லேசான இருமல்தான். ஆனால் இப்படி நடந்துகொள்ளவிட்டால், சிறையில் சாகவேண்டியது என்று நினைத்துத்தான் இந்த ஐடியாவைக் கையாண்டார். ‘‘உண்மையைத் தெரிந்துகொள்ளாத சிறை அதிகாரிகளுக்கு அரசாங்கத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 ரூ.2,000 தருகிறார்களே’’ என்று நக்கலடித்தார் சிவா. வியாதியின் காரணமாக சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குதான், ‘சச்சிதானந்த சிவம்’ என்ற நூலை எழுதினார்.  

சிறையிலிருந்து வெளிவந்த சிவா, தமது மனைவியுடன் சென்னையில் தங்கினார். அப்போது ‘ஞானபானு’ என்ற இதழை வெளியிட்டார். அதற்கடுத்து, ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை வெளியிட்டார். அதன்பிறகு, ‘ராமானுஜ விஜயம்’, ‘பக்த விஜயம்’ போன்ற பல நூல்களை எழுதினார். கடுமையான நோயால் அவதிப்பட்டாலும் தொடர்ந்து ஊர் ஊராகச் சென்று பிரசங்கம் செய்வதை நிறுத்தவில்லை. இறுதியில், தன்னுடைய 41-வது வயதில் இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

‘‘எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனம் கலங்கக் கூடாது. யான் இந்த முறை எமனுடன் போராடி ஜெயித்துவிட்டேன். அரசாங்கத்தார் என்னை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் என் மனதுள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை அணைக்க முடியாது. அந்தத் தீயை உங்களிடத்தும் பற்றச் செய்கிறேன். உங்கள் மூலம் தமிழ்நாடு முழுதும் பற்றிவிடும். அப்போது இந்த அரசாங்கம் அடியோடு விழுந்துவிடும்’’ என்று ஆஸ்ரமவாசி ஒருவருக்குக் கடிதம் எழுதியிருந்தார் சிவா. அவர், சொன்னதுபோல் அந்த அரசாங்கம் வீழ்ந்துவிட்டது. ஆனால், சுயநலத்துக்காகச் சுரண்டுகிற அரசாங்கம் அல்லவா இந்தியாவில் பிறந்துவிட்டது.

- ஜெ.பிரகாஷ்