Published:Updated:

”நான் செய்ற சிலைகள்ல ஸ்ரீதேவி, ஹேமமாலினி எல்லாம் தெரிவாங்க!” - தசரா ஸ்பெஷல்

”நான் செய்ற சிலைகள்ல ஸ்ரீதேவி, ஹேமமாலினி எல்லாம் தெரிவாங்க!” - தசரா ஸ்பெஷல்
”நான் செய்ற சிலைகள்ல ஸ்ரீதேவி, ஹேமமாலினி எல்லாம் தெரிவாங்க!” - தசரா ஸ்பெஷல்

”நான் செய்ற சிலைகள்ல ஸ்ரீதேவி, ஹேமமாலினி எல்லாம் தெரிவாங்க!” - தசரா ஸ்பெஷல்

களிமண்  ஒரு பக்கம் மலைபோல் குவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வைக்கோல் போர்.  கடந்து உள்ளே போனால் முற்றுப்பெறாத... முழுஉருவம் பெறாத... சிலைகள்.சினிமாவுக்கு செட் போடுகிற மாதிரியான அட்மாஸ்பியருடன் களேபரமாகக் காட்சியளிக்கிறது சென்னை, தி.நகரில் உள்ள பெங்கால் அசோசியேஷன்.  இவற்றை தாண்டி உள்ளே சென்றால்,முழு உருவம் பெற்ற துர்கா, லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார், விஷ்வகர்மா என அசரடிக்கும் அழகு சிலைகள்  அணிவகுத்து நிற்கின்றன. 

என்ன நடக்கிறது இங்கே?

சென்னையில் உள்ள பெங்காலிகள் தசரா கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார்கள் என்பதற்கான முன்னேற்பாடுகள்தான் இதெல்லாம்.

“கொல்கத்தாவுல தசரா பண்டிகையை ரொம்ப விமரிசையா கொண்டாடுவோம். தசரா என்ற பெயருக்கேற்ப பத்து நாட்களும் மேற்கு வங்காளமே கொண்டாட்டத்தில் களைகட்டியிருக்கும்.  உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் தசராவின்போது நடக்கும் துர்கா பூஜையில கலந்துக்க ஊருக்கு வந்திடுவாங்க பெங்காலி மக்கள். தசராவின்போது நடைபெறும் துர்கா பூஜையைப்போலவே, தீபாவளி அன்னிக்கு நடைபெறும் காளி பூஜையும் மேற்கு வங்கத்தில் ரொம்ப விசேஷமானது. இதெல்லாம் பத்து இருவது வருஷத்துக்கு முன்னே... காலம் மாற, மாற இப்ப வாழ்க்கைமுறைகளும் மாறிப் போச்சு. சாமியைத் தேடி கொல்கத்தாவுக்கு வந்தவங்க, இப்ப சாமியையே தங்களோட இடத்துக்கு வர வச்சிட்டாங்க.'' 

சிலைகளை செய்வதற்காக கொல்கத்தாவிலிருந்து வந்திருக்கும்  ஜீபன் கிருஷ்ணபால், கொஞ்சம் நகைச்சுவையாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் சொல்கிறார்.  

''பெங்காலி மக்களைப் பொறுத்தவரைக்கும் மற்ற நாட்கள்ல அவரவர் தொழில், வேலைன்னு பிஸியாக இருந்தாலும் துர்கா பூஜை, காளி பூஜை நடக்கிறப்ப மொத்த பெங்காலிகளும் ஒண்ணா கூடிடுவாங்க. பண்டல்னு சொல்லப்படற மண்டபங்கள்லதான் பூஜையும் கொண்டாட்டங்களும் நடக்கும். சென்னை மாதிரியான ஒவ்வொரு ஊர்லேயும் பெங்காலிகளுக்கான சங்கங்கள் இருக்கு. அந்த சங்கங்கள் மூலமா இந்த விசேஷங்களை விமரிசையா கொண்டாடுறாங்க. பண்டல்ல பிரமாண்டமான சாமி சிலைகளை வச்சுதான் பூஜைகள் பண்ணுவாங்க. தசரா முடிஞ்சதும் தீபாவளிக்கு காளி பூஜையும் அதே மாதிரி விமரிசையா நடக்கும். பூஜைகள் முடிஞ்சதும் இந்த சிலைகளை எல்லாம் கடல்ல கரைச்சிடுவாங்க.  இந்த ரெண்டு விசேஷங்களுக்காகவும்தான் கொல்கத்தாவுலேருந்து இங்கே வந்து சிலைகள் செய்து கொடுக்கறோம்.'' என்கிற ஜீபன் கிருஷ்ணபால்  ஒவ்வொரு வருடமும் அவரது சக கலைஞர்கள் திலீப் தாஸ், பிரஷாந்த் முண்டோல் ஆகியோருடன் சென்னை வருகிறார். இன்று நேற்றாக அல்ல, கடந்த 27 வருடங்களாக சென்னைக்கு வந்து செல்லும் இவர்கள் ஒவ்வொரு வருடமும்  மூன்று மாதங்கள்  சென்னைவாசியாகவே மாறிவிடுகிறார்கள்.

''தீபாவளி வரைக்கும் சென்னைதான் எங்களுக்கு சொர்க்கம்.  ஊருக்குத் திரும்பறபோது கனத்த மனசோடதான் போவோம். மறுபடி அந்த மூணு மாசத்தை எதிர்பார்த்தபடி ஒன்பது மாசங்களைக் கடத்துவோம்.''  ஜீபன் கிருஷ்ணபாலின் வார்த்தைகளில் தமிழ்நாட்டு பாசம் தூக்கலாக இருக்கிறது.

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மேற்கு வங்காளத்துல உள்ள ஹூப்ளி. நாலாவதுக்கு மேல படிக்கலை. என்னோட தாத்தாவுக்கு தாத்தா, தாத்தா, அப்பானு தலைமுறை தலைமுறையா எங்களுக்கு இந்த சிலைகள் செய்யறதுதான் தொழில். எட்டு வயசுலேருந்தே நானும் சிலைகள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இந்தத் தலைமுறைப் பிள்ளைங்க நிறைய படிக்கிறாங்க. ஆனாலும் நாலு எழுத்து படிச்சு பேன்ட், ஷர்ட்  போட்டதும் பாரம்பரியத்தை மறந்துடறாங்க. எங்க பசங்க அப்படிப்பட்ட  சராசரி இளைஞர்கள் இல்லை. எந்த உயரத்துக்குப் போனாலும் எங்களோட குலத்தொழிலைக் கத்துக்குவாங்க.  எனக்கு மகன் கிடையாது. ஒரே ஒரு மகள்தான். பேர் மவுஷ்மி பால். பி.காம் படிச்சிட்டிருக்கா. இந்தக்கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துகிட்டு போறதுக்காக என்னோட தம்பிப் பசங்களுக்கு இந்தக் கலையைக் கத்துக் கொடுத்திருக்கேன்.'' 

கடலில் கரைக்கப்படுகிற சிலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக நாம் எல்லாம் கடந்த சில வருடங்களாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அந்த விழிப்பு உணர்வு என்றைக்கோ வந்துவிட்டது.  ஜீபன் கிருஷ்ணபால் செய்யும் சிலைகளில் துளியும் ரசாயனம் கலப்பில்லை. சிகப்பு மண், கருப்பு மண், வைக்கோல், புது கோணி, புது துணி, தாம்புக் கயிறு, ஸ்பெஷல் பெயின்ட்... இவைதான் இவர்கள் பயன்படுத்தும் பொருட்கள்.

''சிலை செய்யத் தேவையான எல்லாத்தையும் கொல்கத்தாவுலேருந்துதான் கொண்டு வந்திடுறோம். இங்க உள்ள மண்ணை வச்சு ஆரம்பத்தில் செய்து பார்த்தோம். ஆனா கொல்கத்தா மண் கொடுக்கிற ஃபினிஷிங் வரலை. அதுதான் எங்க மண்ணோட ஸ்பெஷல்...'' 

ஜீபன் கிருஷ்ணபால் செய்கிற சிலைகளை சற்று உற்று நோக்கினால் ஒரு விஷயத்தை கவனிக்க முடிகிறது. அவர் செய்திருக்கிற ஒவ்வொரு சிலையின் கண்களும், மூக்கும், முகத்தோற்றமும் வேறு வேறு மாதிரி இருக்கின்றன.  

இதெல்லாம் மோல்டிங்கில் செய்தது இல்லையா?

“மோல்டுல வச்சு எடுக்கிறதுல என்ன கிரியேட்டிவிட்டி இருக்கப் போகுது?”

உதிர்ந்த பற்கள் தெரிய  அலட்சியமாக சிரிக்கிறார்.

“மோல்டோ, மெஷினோ வச்சுப் பண்ணவே மாட்டோம். ஒவ்வொரு சிலையையும் கையாலதான் செய்வோம். மோல்டுல பண்ணினா, ஒவ்வொரு முகத்துக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க முடியாது. அச்சடித்தது போல் ஒரே மாதிரி இருக்கும். இங்க உள்ள ஒவ்வொரு சிலையோட முகத்தையும் கவனிச்சுப் பாருங்க. ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு மனுஷன் மாதிரி வேற வேற மாதிரி இருக்கும். இதுதான் எங்களோட ஸ்பெஷாலிட்டி. ”

நம் கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு பதில் சொன்னாலும்  ஜீபன் கிருஷ்ணபாலின் கவனம் எல்லாம் வேலையிலேயே இருக்கிறது. 

ஒரு சிலையின் கண்களைத் திறக்கும் வேலையை செய்யத் தொடங்குகிறார். 

பேட்டி பாதியோடு நின்றுபோன பிரக்ஞை கூட இல்லாமல் தன் பணியில் கரைந்துபோகிறார். கண்மூடிக்கிடந்த சிலை ஒன்று அவரது தூரிகை பட்டு கண் திறந்ததும், அந்த சிலையே உயிர்பெற்றதுபோல் இருக்கிறது.

''நாங்க செய்யுற சிலைகளின் கண்களைப் பாருங்க. கண்கள் பேசும்னு சொல்வாங்களே... அந்த மாதிரி எக்ஸ்பிரஷன்ஸ் இருக்கும். இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தீங்கன்னா, ஸ்ரீதேவி, ஹேமமாலினி எல்லாம் தெரிவாங்க. அவங்களோட கண்கள்ல தெரியற எக்ஸ்பிரஷனுக்காகவும், திருத்தினது மாதிரியான முக அமைப்புக்காவும் அப்படி சில அழகான முகங்களை ரெஃபர் பண்ணிக்கிறதுண்டு...'' பேச்சின் ஊடே காமெடியும் செய்கிறார் கிருஷ்ணபால்.

''வெறும் களிமண்ணையும் கட்டைகளையும் வைக்கோலையும் வச்சு கடவுள் உருவங்களைச் செய்யறோம். அதைப் பார்த்துட்டு மக்கள் பாராட்டறபோது மாசக் கணக்குல பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்துபோயிடும். இந்த பாராட்டுக்காகத்தானே பொண்டாட்டி புள்ளையை எல்லாம் விட்டுட்டு இங்கே வர்றோம். கலைஞர்களை மனசார பாராட்டற பெரிய குணம் தமிழ்மக்களுக்கும் நிறைய இருக்கு.'' சிலிர்க்கிறார். சிலிர்க்க வைக்கிறார்.

ஏறக்குறைய மூன்று மாதங்கள் ராத்திரி பகலாக பாடுபட்டு உருவாக்கிய சிலைகளை கடைசியில் கடலில் கரைப்பதை அந்த சிலைகளை செய்த கலைஞர்களான இவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?

''உண்மையைச் சொல்லணும்னா... மனசு வலிக்கும்.  ஒவ்வொரு சிலையையும் பார்த்துப் பார்த்துச் செய்யறோம். பூஜைக்குப் பிறகு எல்லாத்தையும் கடல்ல கரைக்கும்போது மனசு வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் துர்கா அம்மாவும்... காளி அம்மாவும் எங்கே போயிடப் போறா.... மறுபடி அடுத்த வருஷம் எங்க கூட வரத்தானே போறா...னு எங்களுக்கு நாங்களே சுய சமாதானம் செய்துக்குவோம்.'' வலிகளை விழுங்கி வாழ்க்கையின் யதார்த்தம் சொல்கிறார் இந்தக் கலைஞர்.

- ஆர். வைதேகி

படங்கள்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு